Sunday, February 4, 2018

நாஞ்சில் நாடன் - ஜப்பான் முழுமதி பொங்கல் - வரவேற்புரை

அனைவருக்கும் வணக்கம்.

நண்பர்களே, நாஞ்சில் நாடனின் ஒரு கதையிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

காளியம்மைக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைவதற்க்குள் கைக்குழந்தையை கொடுத்துவிட்டு புருஷன் ஒடிப்போகிறான், வாழ்க்கை முழுவதும் இட்லி சுட்டு கிராமம் முழுவதும் திரிந்து விற்று அந்த காசில் தனது மகனை வைராக்கியமாக படிக்க வைக்கிறாள் காளியம்மை. அதிகாலையில் எழுந்து இட்லி சுட்டு அதை பகல் முழுவதும் விற்று பிறகு மீண்டும் திரும்பி வந்து அடுத்த நாளுக்கான இட்லி மாவு அரைக்கவேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை. மூன்று பொழுதும் இட்லி மட்டுமே தின்று வளர்கிறான் மகன் மாலையப்பன்.


 

பிறகு மாலையப்பன் படித்து, வேலைக்கு செல்கிறான். திருமணமாகிறது. காளியம்மை முதுமை எய்துகிறாள். காளியம்மையை வலுக்கட்டாயமாக கிராமத்திலிருந்து பெயர்த்து வந்து நகரத்தில் நடுகிறார்கள். அந்த வீட்டின் ஒரு மூலையில் ஒதுங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் யாருக்கும் தேவைபடாதவளாகிறாள். பேரன்பேத்தி கூட அருகே வருவதில்லை. ஒரு கட்டத்தில் கீழே விழுந்து படுத்த படுக்கையாகிறாள். அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட தாதி வரும்போது மட்டுமே உணவு. தனக்கு சாவு வராதா என்று ஏங்கி கிடக்கிறாள்.

ஒரு நாள் தாதி வந்து பார்த்துவிட்டு காளியம்மை இறந்துவிட்டாள் என்று அறிவிக்கிறாள். மகனும் மருமகளும் ஊருக்கு தகவல் கொடுக்கின்றனர் . சத்தமாக அழக்கூட உரிமையில்லாத மாலையப்பன் அந்த இரவை மெளனமாக கழிக்கிறான். காளியம்மை கிடக்கும் அறையை பூட்டிவிட்டு, கணவனும் மனைவியும் உறங்குகிறார்கள். தூக்கம் வராது புரளும் மாலையப்பன், தனது தாயை ஒரு முறை பார்க்க நினைக்கிறான். அறைக்கு செல்லும் மகன், காளியம்மையை பார்த்துக்கொண்டிருக்கிறான். கண்களில் திடீரென்று ஒரு அசைவை பார்க்கிறான். இன்னமும் உயிர் இருப்பதை பார்த்து முதலில் மகிழ்ச்சியடைகிறான். ஓடோடி போய் மனைவியை எழுப்புகிறான். அவள் எழுந்து, ஊருக்கு சொல்லிவிட்டோமே, இன்னமும் எதற்கு சவம் கிடந்து இழுத்துட்டு கிடக்கு என்கிறாள். மாலையப்பன் திகைக்கிறான். காலையில் ஊரார் வந்துவிடுவார்கள் என்பதால் மாலையப்பனும் மருமகளுமாய் சேர்ந்து, காளியம்மையை குளியறைக்கு கொண்டு சென்று, குடம் குடமாய், தண்ணீர் ஊற்றி முடித்துவைக்கிறார்கள்.அப்படி செய்வதற்கு முன் கவனமாக தங்களது குழந்தைகள் உறங்கும் அறையை கதவை பூட்டி விடுகிறார்கள் என்றூ ஒரு வரியில் சொல்கிறார் நாஞ்சில்.

ஜப்பானிய ஹைக்கு கவிதை ஒன்று உண்டு நண்பர்களே


ஒரு எறும்பை கொன்றேன்
பிறகு உணர்ந்தேன், எனது மூன்று குழந்தைகளும்
அதை பார்த்துக்கொண்டிருப்பதை

சூசன் கொட்டோ எழுதிய கவிதை இது.

எவ்வளவோ தவறுகள் செய்கிறோம். ஆனால், அதை நமது குழந்தைகள் பார்க்குமென்றால், அது நமது குழந்தைக்கு தெரியவருமென்றால், உள்ளுர அதை வெறுக்கிறோம். இல்லையா?
இங்கு முக்கியமாக மாலையப்பனுக்கோ அவன் மனைவிக்கோ வயதாகாது என்று என்ன நிச்சயம்?  எனவே தான் கதவை தாளிடுகிறார்கள். இதை ஒரு வரியில் எந்த கவனமும் கொடுக்காது எழுதிசெல்வது நாஞ்சில் பாணி.

இந்த கதைக்கு தலைப்பு சாலப்பரிந்து என தலைப்பு இடும்போது ஒரு கசப்பு புன்னகையுடன்தான் அதை செய்திருப்பார் நாஞ்சில். அந்த தலைப்பிலிருந்து

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

என்கிற மாணிக்கவாசகரின் திருவாசக பாடலை நினைவில் தொட்டிருப்பீர்கள் என்றால் அந்த கசப்பு உங்களிடமும் எழும்.

சமூகத்தால் சுரண்டபடும் மனிதர்கள் நம் கண்முன்னேதான் வாழ்கிறார்கள். ஆனால் ஒருபோதும் நம் கண்ணுக்கு அவர்கள் தெரிவதேயில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள்தான் நாஞ்சில் நாடனின் கதை மாந்தர்கள். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களை இப்படி வர்ணிக்கலாம். கடும் வறுமை, பசி, நிராகரிப்பு அதை உழைப்பின்/படிப்பின் மூலம் தாண்டி வரவேண்டுமென்கிற வேட்கை, வைராக்கியம், உறவினர்கள், ஊரார்கள் என எங்கும் அவர்கள் படுகிற அவமானங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இந்த சமூகத்திலிருந்து அன்னியப்பட்டுப்போகும் பரிதாபம்.

 

கடும் அவமானங்கள், பசி, வறுமை இவற்றிலிருந்து எழுந்து வந்தவர்கள், தமது இளமைக்காலத்தை, கிராமத்தை அந்த சூழலை குறித்து வெறுப்புக்கொண்டிருப்பவர்களாக, அதை மறக்கமுயல்பவர்களாகவே கண்டிருப்போம். ஆனால், நாஞ்சிலின் நாயகர்கள், எங்கு வாழ்ந்தாலும், தமது மனதின் ஓரத்தில் நாஞ்சில் நாட்டை மனதில் சுமந்தே அலைகிறார்கள். நீரோட்டத்தில் இழுத்துச் செல்லபடும் மிதவை சண்முகமும், யாராலோ முன்பே தீர்மானிக்கப்பட்ட திசையில் பயணிக்கும் சதுரங்க குதிரை நாராயணனும், தனது சகவயது தோழியின் கண்முன்னே வெறும் ஒரு மாங்காயை களவாண்டு தின்னதற்காக கன்னத்தில் அறைப்படும் என்பிலதனை வெயில் காயுமே சுடலையாண்டியும் வேறுவேறு நபர்கள் அல்ல.

நாஞ்சில் நாடன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள வீர நாராயணமங்கலத்தில் 1947 டிசம்பர் மாதம் 31ம் தேதி பிறந்தவர். 1977ல் தலைகீழ்விகிதங்கள் என்கிற தனது முதல் நாவலை எழுதினார். பிறகு இந்த நாவலை மைய்யமாக கொண்டு, சொல்லமறந்த கதை என்கிற படத்தை தங்கர்பச்சான் எடுத்தார். தொடர்ந்து என்பிலதனை வெயில் காயுமே, மாமிசப்படைப்பு, மிதவை, சதுரங்ககுதிரை, எட்டு திக்கும் மதயானை என ஆறு நாவல்களை எழுதியவர்.

தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், சூடியபூசூடற்க கான்சாகிபு உள்ளிட்ட பல சிறுகதை தொகுதிகளை அதாவது நூற்றுக்கணக்கான அற்புதமான சிறுகதைகளை எழுதியவர். கடந்த இருபது வருடமாக பல்வேறு இதழ்களில், கட்டுரைகள் எழுதி, அவையெல்லாம் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, தீதும் நன்றும், அம்பறாதுணி உள்ளிட்ட தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன.

நாஞ்சில் நாடனுக்கு சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்காக 2010ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு, கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் இயல் விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு, நாஞ்சில் நாடனுக்கு கலைமாமணி விருது அறிவித்தது. சென்னையில் நடந்த அந்த விழாவுக்கு நாஞ்சிலை பார்ப்பதற்க்காகவே நானும் சென்றிருந்தேன். நாஞ்சிலோடு சேர்த்து ரோபோ சங்கர், ஸ்ரேயா, அனுஷ்கா, கிரைம் கதை ராஜேஷ்குமார் என்று பெரும் சாதனையாளர்களாக ஒரு அம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஸ்ரேயா, அனுஷ்கா விருது வாங்கிவிட்டு இறங்கிவர செல்பி எடுக்க ஒரு கூட்டம் அலைமோதியது. ரோபோ சங்கர் மேடையில் சொன்னவுடன் அவர் அழைத்து வந்திருந்த கூட்டம் அடித்த விசிலில், கலைஞரே ஒரு நொடி யாரு இவரு என்று யோசித்திருப்பார். இவ்வளவு கூத்துகளுக்கு நடுவிலும், எந்த வருத்ததையும் காட்டிக்கொள்ளாமல், “சரி, மதிச்சு கொடுக்குறாங்க, வாங்கிகிடணுமிலே” என்று அமர்ந்திருந்தார் நாஞ்சில். ஏறக்குறைய அவரது கதை நாயகர்களை போலவே. ஆனால் பின்னாளில் கும்பமுனியாக அவதாரமெடுத்து வரிசை தெரியாது பரிசில் வழங்குவது குறித்த ஒரு கூரிய விமர்சனத்தை போகிறபோக்கில் சொல்லிவிடுவார்.




தமிழ் மரபிலக்கியத்தில் அபாரமான தேர்ச்சிக்கொண்டவர் நாஞ்சில் நாடன். தலைப்புகளில் தொடங்கி, நாஞ்சில்நாடனின் எழுத்தெங்கும் சங்க கால கவிதை வரிகள், கம்பராமாயண சொற்கள், பொருத்தமான திருக்குறள் என வந்து விழுந்துக்கொண்டேயிருக்கிறது. ஒருவகையில் இதுஒருபெரிய தொண்டு. பல அருமையான சங்ககால கவிதைகளை, இவர் எடுத்தாண்ட இடங்களில் இருந்து தொடங்கி தேடி நான் படித்ததுண்டு. உதாரணத்திற்க்கு, முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே என்கிற வரி மிதவை நாவலில் சண்முகமும் அவனது பெரியப்பாவும் பேசிக்கொள்கிற எத்தனையோ விஷயங்களில் ஒன்றாக வருகிறது. தேடிச்சென்றால், 

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?


என்கிற அற்புதமான பாடலில் திளைப்பீர்கள். விற்பனை பிரதிநிதியை பற்றிச்சொல்லும்போது “கானமுயல் எய்த அம்பினில்” என்கிற குறள் அவருக்கு ஞாபகம் வந்துவிடுகிறது. இப்படி தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிர வருட நீட்சியாகவே நாஞ்சில் நாடன் திகழ்கிறார்.


திரும்பவும் ஒரு நாஞ்சில் நாடனின் கதையில் முடிக்கலாம் என்றூ நினைக்கிறேன். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நிகழ்வதுபோல், மத்திய பிரதேசத்திலும் விவசாயிகள் பஞ்சத்தால் வாடுகிறார்கள். முதிய விவசாயியான நாத்ரே மனைவி இறப்பிற்கு பின் தனது ஒரே மகனுடைய குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். பசிக்கொடுமை தாங்காமல், தனது மகள்களுடன் தற்கொலை செய்துக்கொள்கிறான் மகன். திக்கற்று திரிகிறார் நாத்ரே. பசி தாங்காமல்,ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கிறார். விற்பனை பிரதிநிதியான பாபுராவ் தனது ரொட்டியையும் சப்ஜியையும் தின்று கொண்டிருக்கிறான். ஒருதுண்டு மீதமிருக்கிறது. அதை உண்ணமுற்படுகையில், தடுத்து, அமி காணார், அமி காணார் அதாவது யாம் உண்போம், யாம் உண்போம் என்கிறார் நாத்ரே. எனக்கு கொடு அல்ல. நாம் உண்போம் என்கிறார். பசிக்கு ஏது உன் பசி, என் பசி? நாஞ்சிலின் வரிகளில் சொல்வதனால் கும்பி ஒரு தூராத கிணறு. சிறுபிள்ளையாய் பள்ளிக்கு சென்று பசியோடு திரும்பி, மிகுந்த ஆசையும் பசியுமாய் ஒரு திருமண பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உண்ணவிடாது பாதியில் எழுப்பிவிடப்பட்ட அந்தச் சிறுவனை தவிர நாத்ரேவின் பசியை வேறு யாரால் எழுதிவிடமுடியும்? தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் தொடர்ச்சியாய் யாம் உண்போம் என்கிற அற்புதமான சிறுகதையை படைத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனை, முழுமதி பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராய் அழைப்பதில் பெருமைக்கொள்கிறோம்.