Sunday, January 3, 2016

வெற்றிமாறன் ஆடும் களங்கள்



பொல்லாதவன் கொடுத்த நம்பிக்கையில், ஆடுகளம் வெளியான அன்று, முதல் காட்சி சத்யம் திரையரங்கில் உட்கார்ந்திருக்கிறேன். படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் கிடைத்த பிம்பம், பொல்லாதவன் போலவே இதுவும் ஒரு சென்ஸிபிள், மாஸ் எண்டர்டெயினர்., நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான பாத்திரங்களை உருவாக்கி,விறுவிறுப்பான சம்பவங்களை கொண்டு, கதையை எடுத்து செல்லும் கலை, வெற்றிமாறனுக்கு கைவந்திருக்கிறது. அதைதான் இந்த படத்திலும் காணபோகிறோம், என்று தயாரானேன். இந்த வகையான படங்களில் ஒரு வாழ்க்கை இருக்கும். பாத்திரங்கள் அந்த கதைசூழலில் காணகிடைக்கும் மனிதர்களிடம் இருந்து உருவானவையாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவின் சட்டகத்தில், அந்த பாத்திரங்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ்சினிமாவின் இலக்கணத்தை மீறமாட்டார்கள். நாயகனால் வில்லன் நையபுடைக்கப்பட்டு தர்மமே மீண்டும் வெல்லும்.ஏறக்குறைய ஆடுகளத்தின் இடைவேளை வரை, அப்படி ஒரு படத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைத்திருந்தேன்.

இடைவேளைக்கும் முன் வரும் அந்த சேவல் சண்டை காட்சி ஏறக்குறைய 30 நிமிடங்கள் சொல்லப்படுகிறது. கவனம் ஒரு போதும் சிதறாதபடி, நேர்கோட்டில் சொல்லபடும் அந்த ரோலர்கோஸ்டர் காட்சியமைப்பு, தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு சாதனை. இடைவேளைக்கு முன்பே இப்படி விறுவிறுப்பை கூட்டிவிட்டால், பிற்பாதியை எபபடி நகர்த்தி செல்ல முடியும் என்ற கேள்விகளுடன் உள்ளே சென்று அமர்ந்தேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் புரிந்துபோனது இது வேறு வகையான படம் என்று.



கடும் உழைப்பினாலும், திறமையினாலும் உச்சத்தை அடையும் ஒருவன், தொடர்ந்து அந்த உச்சத்தில் இருக்கவே விரும்புகிறான். அந்த இடம் அவனுக்கானது மட்டுமே என்று உள்ளூர நம்பதொடங்குகிறான். அதே உழைப்பாலும் திறமையாலும் தன்னை தாண்டி ஒருவன் செல்வான் என்றால், அதை நம்ப மறுக்கிறான். கடும் பதட்டம் அடைகிறான். அதை அநீதி என்று நம்புகிறான். அதை எந்த வகையிலாவது சரிசெய்துவிட வேண்டும் என்று துடிக்கிறான். மீண்டும் மீண்டும் போட்டியிடுகிறான். தனக்கான காலம் முடிந்தது, இனி இளையவர்கள் பார்க்கட்டும் என்று இனிமையான நினைவுகளோடு ஓய்வெடுக்கசென்றவர்கள் சரித்திரத்தில் அநேகமாக இல்லை. தோல்வியை முடிந்தவரை மறுத்து, இனி மீட்பில்லை என்ற நிலையில் கடும்வெறுப்புடன் தமது அந்திமகாலத்தை கழித்தவர்களே அதிகம். மற்றவர்கள் தன்னை வெற்றி கொள்வதையே ஏற்ற கொள்ளாத மனம், தன்னிடம் தொழில் கற்றவன், தன்னை தாண்டி செல்வதை ஏற்குமா?

பேட்டைகாரன், கருப்பு பாத்திரங்களின் இயல்பை படத்தின் ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிடுகிறார் வெற்றிமாறன். முப்பதாண்டு காலம் சேவல் சண்டையில் கொடிக்கட்டி பறக்கும் பேட்டைகாரன், அடிப்படையில் எளிமையானவன். பணத்தை தாண்டி தன்னுடைய கலையை நேசிப்பவன். தேவையில்லாமல் தன்னுடன் இருப்பவர்களுக்கு பிரச்சினை வரக்கூடும் என்பதாலயே, ரத்தினசாமியோடு சேவல் சண்டையை தவிர்க்கிறான். தன்னுடன் நாற்பதாண்டு காலம் நட்புக் கொண்டிருந்த ஆயுப்பின் குடும்பத்திற்க்கு உதவுவதற்காக சேவல் சண்டை நடத்துபவன், தன்னுடைய திறமையின் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அவனுடைய தொழில் திறமையில் மயங்கி அவனை விட 28 வயது இளைய மீனா எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனை நம்பி வருகிறாள்.  தன்னை உயிராய் காதலிக்கும் மனைவி, தன்னுடைய திறமையினால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு கிடக்கும் சிஷ்யர்கள், சேவல் பந்தய மைதானத்தில் ஒரு சிங்கம் போல வலம் வருகிறான் பேட்டைகாரன். எல்லாவற்றையும் ஒரு பந்தயத்தில் உடைத்து தூள்தூளக்குகிறான் கருப்பு.

பேட்டைக்காரனை தனது தந்தைபோல் நேசிக்கிறான் கருப்பு. பேட்டைக்காரனை தப்பாக பேசினால், தாய், நண்பன் என யாராக இருந்தாலும் தூக்கிஎறிய தயாராக இருப்பவன். ஆனால், தன்னுடைய திறமையை, குருவே உதாசீனபடுத்தும் அந்த ஒரு கணத்தில், பொங்கி மல்லுக்கட்டுகிறான். தன்னுடைய கணிப்பு முதன்முதலாக தவறாகபோகும்போது, மிகுந்த பதட்டமடைகிறான் பேட்டைக்காரன். அது ஏதேச்சையாக கருப்புவுக்கு கிடைத்த வெற்றி என்று அவனது மனம் நாடகம் போட்டு, அவனை காப்பற்ற துடிக்கிறது. ஆனால், அது தெளிவான தோல்வி என்று திரும்ப தெளிவாகும்போது, மனம் அனைத்து வேலிகளையும் உடைத்து கீழ்மைக்குள் பாய்கிறது. மனிதமனம் எவ்வளவு தூரம் சிறுமைக்குள் செல்லமுடியும் என்பதை திரையில் கொண்டுவந்ததில்தான் வெற்றிமாறனின் வெற்றி அடங்கியிருக்கிறது. தான் எவ்வளவு பெரிய உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கிறோம் என்பதை, தன்னுடைய சிறுமையை, கீழ்மையை  தானே உணரும் அந்த கட்டத்தில் பேட்டைகாரன் எடுக்கும் முடிவு, வெற்றிமாறன் திரைகதையின் இன்னொரு உச்சம்.

விஷ்ணுபுரம் 2015 விருதுவிழாவிற்க்கு கோவை சென்றிருந்தபோது, அந்த விழாவுக்கு வந்திருந்த வெற்றிமாறனுடன் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. ஞாயிறு மதியம் 2.45 மணிக்குதான் விமானம் சென்னையிலிருந்து கோவைக்கு வரும் என்று அவரை அழைப்பதற்க்காக விமானநிலையம் சென்றால், அன்றைக்கு 2.30க்கே வந்து விட்டது. வெளியே வந்து ஒரு புத்தகம் படித்தபடி நின்றிருந்தார்.  தாமதத்திற்க்காக மன்னிப்பு கேட்டால், எந்த பாசாங்குமில்லாமல் சிரிக்கிறார். அவருடன் உரையாடியதில் பாதிபகுதியை ஆடுகளம் எடுத்துக்கொண்டது.



ஒரு திரைப்படத்தை பார்வையாளன் தனக்கு நெருக்கமாக உணரவேண்டும் என்றால், அந்த கதைக்களனின் மொழி, பாத்திரங்களின் உடற்மொழி, காட்சி பின்னணி என அனைத்துமே நிஜத்துடன் பொருந்திவரவேண்டும். காட்சிகளம் மதுரை நகரம் என்றால், மதுரையின் மொழி படத்தில் வரவேண்டும். மதுரை டவுனின் மொழிக்கும் மதுரை பக்கத்து கிராமங்களின் மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆடுகளத்தில் மதுரை நகரத்தின் மொழி சரியாக வந்துள்ளது. சென்னைகாரரான வெற்றிமாறனால் எப்படி இது சாத்தியமாகியது என்று கேட்டால், இரண்டு வருடம் மதுரையில் தங்கியிருந்து தான் படத்திற்க்காக செய்த ஆராய்ச்சிகளை சொல்கிறார். மதயானை கூட்டத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பெரிதும் உதவியிருக்கிறார்.

அய்யயோ நெஞ்சு அலையுதடி என்ற பாடலில், தனுஷ், தனது காதலியை அழைத்துக் கொண்டு நண்பர்களை சந்திக்க வருவார். நண்பர்கள் தண்ணியடித்து கொண்டு இருப்பார்கள். சட்டென்று எழுந்து, ஒரு கையால் டம்ளரை பின்னாடி மறைத்துக் கொண்டு மற்றொரு கையால் டாப்ஸிக்கு வணக்கம் வைப்பார்கள். அதே பாடலில், தனுஷ் சாப்பிட்டு முடித்து கையை அலம்பிவிட்டு, சட்டை காலரால் வாயை துடைப்பார். God Lives in details என்பார்கள். இப்படி சில நொடிகளே திரையில் தோன்றும் காட்சிகளிலும், நுட்பமாக வாழ்வை கொண்டு வந்திருக்கிறீர்களே என்று கேட்டால், எல்லோரும் இப்படி படமெடுக்கத்தான் உழைக்கிறார்கள். ஒரு சில படங்கள், அமைகின்றன. என்கிறார் சிரித்தபடி.
நீங்கள் நினைத்ததில் எத்தனை சதவீகிதம் ஆடுகளத்தில் வந்தது? என்று கேட்டார் நண்பர் அரங்கா.  கடைசி வெர்ஷன் தான் பொதுவாக பெட்டர் வெர்ஷன். அப்படிதான் எடுத்துக் கொள்ளவேண்டும். உண்மையில் ஆடுகளம் எடுக்கப்பட்டு, டப்பிங் முடித்தபோது, நீளம், நான்கரை மணி நேரம் இருந்தது. இதுதான் சார் படம். இனிமே நீங்க எடிட் செய்து தரபோற படத்தை நான் பார்க்க போறதில்லை என்றார் விக்ரம் சுகுமாரன். உண்மையில், நான் மிகவும் ரசித்து எடுத்த சில காட்சிகள் படத்தில் வரவேயில்லை. ஆனால் வேறு வழியில்லை என்றார்.

ஆடுகளம் வெளிவந்த முதல் மூன்று நாள் மதுரை வசூல், சிங்கம் படத்தையும் தாண்டியது. மிகப் பெரிய ஓபனிங்க் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அது குறைந்தது. இடைவேளை வரை வெகுஜனரசனைக்கு இசைவாக இருந்த படம், பிறகு வேறு ஒரு தளத்திற்க்கு பயணிக்கும்போது இந்த பிரச்சினை வர தான் செய்யும். உண்மையில், ஆடுகளம் படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டாக்குவதற்க்கான இன்னொரு முடிவும் இருக்கிறது. ரத்தினசாமி, சேவல் பந்தயத்தை தலை முழுகுகிறார். பேட்டைக்காரனுக்கும், கருப்புக்குமிடையே சிறிய சச்சரவுகள் இருக்கிறது. ரத்தினசாமி உள்ளே நுழைந்து அந்த பிரச்சினையை பெரிதாக்குகிறார். பிறகு பேட்டைக்காரனை தந்திரமாக கொல்கிறார். பேட்டைகாரனுக்கு நினைவு போட்டி நடத்தும்போது கருப்புக்கு உண்மை தெரிய வருகிறது. கிளைமேக்ஸில் ரத்தினசாமியின் சேவலும், கருப்புவின் சேவலும் மோதுகிறது. இன்னொரு பக்கம் ரத்தினசாமியும், கருப்புவும் மோதுகிறார்கள். கருப்புவின் சேவல் வெல்கிறது. மற்றொரு பக்கம் கருப்பு வெல்கிறான் இப்படி எடுத்திருந்தால், படம் மிகப் பெரிய கலெக்‌ஷனை தந்திருக்கும். ஆனால் படம் வெளிவந்து ஐந்து வருடம் கழிந்தபின்னரும் இப்படி படத்தைப் பற்றி பேசுகிறீர்களே, அப்படி யாரும் என்னை நினைவில் வைத்திருக்கமாட்டார்கள் என்கிறார்.

தனது குருவான பாலுமகேந்திரா பற்றி நினைவுகூறுகிறார். பாலுமகேந்திரா 1997ல் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஏன் உங்களிடமிருந்து இயக்குநர்கள் சொல்லிகொள்ளும்படி உருவாகவில்லை என்ற கேள்வி கேட்கபடுகிறது. அதுதான் எனக்கும் புரியவில்லை என்று பதிலளித்தார். பிறகு பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் என பல இயக்குநர்கள் அவரிடமிருந்து வெளிவந்து இன்றைக்கு தமிழ் திரையுலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். பிறகு அதை பற்றி பாலு மகேந்திராவிடம் கேட்கப்பட்டபோது, “எனது நிலத்தில் விழுந்த வித்துக்கள் வீரியமானவை” என்று பதிலளித்தார். அதை பற்றி கேட்டபோது அது அவரது பெருந்தன்மை என்கிறார் வெற்றிமாறன். உண்மையில்,தன்னிடம் உதவி இயக்குநர்களாக சேர்பவர்களுக்கு இலக்கியம் படி, தினமும் ஒரு நல்ல சினிமாவேனும் பார் என்று ஆற்றுப்படுத்தியவர் பாலுமகேந்திரா என்கிறார். பாலுமகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், நல்ல டைரக்டர். ஆனால், சிறந்த கதைசொல்லி என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் எடுத்த மறுபடியும் படம் ஒரு கிளாசிக். அந்தளவுக்கு சைக்கோஅனலைசிஸ் செய்த படங்கள் தமிழில் வரவில்லை. சமீபத்தில் திரும்பவும் அந்த படத்தை பார்த்தபோதுதான் அதை உணர்ந்தேன். எந்த ஒரு நாற்பது வயது ஆளுக்கும் அந்த படம் நெருக்கமாக இருக்கும், என்கிறார்.

ஒரு படம் எடுக்குறதுங்கறது, ரொம்ப பர்சனல் ஜர்னி. வில்லனை கருப்பாக காட்டுகிறாரா, வெள்ளையாக காட்டுகிறாரா? ஒரு சீன் எடுக்கும்போது, ஷாட் எங்கு வைத்துள்ளார்? சமூகத்தின் விளிம்புநிலை மக்களை காட்டும்போது என்ன மாதிரியான ஷாட்? இப்படி பல விஷயங்கள் இயக்குநரின் ஆழ்மனதிலிருந்து எழுபவை. எனவே அவை இயக்குநரின் மனநிலையை, அகச்சார்பை பெரும்பாலும் தெரியபடுத்திவிடும் என்று சொல்லும் வெற்றிமாறன் தொடர்ந்து புத்தககங்கள் படிப்பதாக கூறினார். பெரும்பாலும் மேற்கத்திய இலக்கியங்கள். முப்பது வயசுலே முதல் படம் பண்ணுறப்ப அனுபவம் தளும்பி வழியும். இரண்டு படம் செய்துவிட்டால், தீர்ந்துபோன மாதிரி ஒரு எண்ணம் வந்துடும். அதற்க்கு பிறகு பழகுகிற மனிதர்கள், நம்மை ஒரு அடையாளத்துடன் அணுகுவதால், அவர்களிடமிருந்து கிடைக்கிற விஷயங்கள் அவ்வளவு உதவாது.  கூர்மையாக வைத்துக் கொள்ள ஒரே வழி புத்தகங்கள்தான். தாஸ்தோவேஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் புத்தகங்கள், கல்லூரி காலத்திலேயே படித்துவிட்டேன். குறிப்பாக போரும் அமைதியும் புத்தகம் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் எடுத்து ஒரு 20 பக்கங்கள் படித்தால் போதும், ஒரு தெளிவு கிடைத்துவிடும் என்றார்.

ஓநாய்குலச் சின்னம் நாவலை தமிழில் சி.மோகன் மூலம் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார், வெற்றிமாறன். அதை பற்றி கேட்டபோது, உண்மையில் ஆங்கில மொழியாக்கத்தை விட சி.மோகனின் மொழியாக்கம் சிறப்பாக வந்திருக்கிறது. அது மிகவும் திருப்தி தந்தது என்றார்.  காக்காய் முட்டை படத்தை தயாரித்திருக்கிறீர்களே, எதை வைத்து  ஒரு படம் தயாரிப்பதை முடிவு செய்கிறீர்கள் என்று கேட்டார் தனா.  காக்காய் முட்டை படத்தை பொறுத்தவரை அந்த படத்தின் ஒற்றை வரியே போதுமானதாக இருந்தது. எளிய மக்கள் ஒரு வலிமையான சக்தியை எதிர்த்து வெல்லும் டேவிட் கோலியாத் கதைதான். ஆனால், தமிழில் உலகமயமாக்கலுக்கு எதிராக எழுந்து குரல் அது. நான் வளர்ந்த சூழ்நிலை மேல்நடுத்தரவர்க்க வாழ்க்கைதான். ஆனால் எனக்கும் சில உணவுகளை பற்றி கனவுகள் இருந்தன. அது சிறுவர்களின் மொழியில் சொல்லப்பட்ட அந்த நகைமுரண் என்னை கவர்ந்தது என்றார்.




தான் இயக்கி, ஜனவரி மாத இறுதியில் வெளிவர இருக்கும் விசாரணை படத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார். கேன்ஸ் திரைப்படவிழாவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விசாரணை திரைப்படம். படத்தை பார்த்துவிட்டு மணிரத்னம், “நல்லவேளை, நான் பிரபலமாகிவிட்டேன். இப்படியெல்லாம் எனக்கு நடக்காது” என்கிற நம்பிக்கையுடன் தான் படத்தை முழுவதுமாக பார்க்கமுடிந்தது என்று சொல்லியிருக்கிறார். அடுத்ததாக ஆர்கனைஸ்டு கிரைம் உலகத்தை மையமாக கொண்டு வடசென்னை என்ற படத்தை எழுதி வருகிறார். இதிலும் தனுஷ்தான் நாயகன். எந்த முகபாவத்தையும், உடற்மொழியையும் திரையில் இயல்பாக கொண்டு வருவதால் நிச்சயம் தனுஷ் ஒரு மிகப்பெரிய பலம்தான். ஒரு பெரிய இயக்குநர் என்கிற எந்த பாவனையுமின்றி, இயல்பாக ஒரு நண்பனிடம் பேசுவதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்தினார் வெற்றிமாறன். 

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..