Friday, November 11, 2016

மடத்து வீடு

ஆற்றின் கரையில் இருந்தது அந்த வீடு. ஆற்றங்கரையில் நிறைய வீடுகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதென்னவோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன.  ஒரு காலத்தில் இந்த வீடு நான்கு கட்டுகளுடன், பிரமாண்டமான மதில்களுடன் இருந்திருக்கவேண்டும். இப்போது ஏறக்குறைய வீட்டின் பின்பக்கம் முழுவதும் இடிந்து கைவிடப்பட்டிருந்தது. முன்பக்கமும் பல இடங்களில் விரிசல் கண்டு அதில் அத்திச்செடி முளைத்திருந்தது. எப்போதோ பூசிய மஞ்சள் சுண்ணாம்பு முழுவதும் உதிர்ந்திருந்தது. விரிசல்களில் திட்டுதிட்டாக பாசி படர்ந்து, அந்த பாசி தந்த கருமை நிறம் மட்டுமே மிச்சமிருந்தது. வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.
நாயக்க மன்னர்களிடம் பணிபுரிந்த செட்டியார்களுக்கு இந்த ஊர் முழுவதும் நிலபுலன்கள் இருந்தன. அவர்களில் ஒருவருக்கு தமக்குப் பிறகும் தர்மங்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என்று கவலை இருந்தது. தனக்கிருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கொண்டு அறக்கட்டளை நிறுவி, தொடர்ந்து வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்து, இன்ன பிற தர்மங்களையும் பரிபாலித்திட உயிலெழுதி மறைந்தார். அவருக்கு பிறகு வந்த வாரிசுகள் சில தலைமுறை வரை அதை சரியாக செய்தனர். பிறகு வந்தவர்கள் தமது தொழில்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர, எல்லாம் நின்றது. ஊரில் இருந்தவர்கள் குத்தகை என்ற பெயரில் ஆக்கிரமித்த நிலங்கள் போக மிச்சமானது இந்த வீடு ஒன்றுதான். இந்த வீடும் ஏதோ ஒரு தர்மத்துக்காக எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதால் அதை நிர்வகிப்பதில் எந்த நாட்டமும் இன்றி இடியவிட்டிருந்தனர். பிறகு தங்களிடம் காரியதரிசியாக இருந்து குத்தகை வசூலித்து தந்த சீனிவாசராவை அவரது குடும்ப சூழல் கருதி வாடகையில்லாமல் அந்த வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தனர்.
ஆஸ்துமாவால் அவதிப்பட்டுவந்த சீனிவாசராவின் மனைவி ஒரு மார்கழிமாதக் குளிரில் இறந்துவிட்டதாகவும், சீனிவாசராவும் அவரது மூன்று பெண்களும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்றும் அருண் சொல்லியிருந்தான். அந்தப் பெண்களையும் ஓரிருமுறை நான் பார்த்திருக்கிறேன். அருண் அவ்வபோது ரேஷன் பொருட்கள் வாங்கிதருவது, மின்சாரகட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை அவர்களுக்குச் செய்து தருவான். அருணுக்கு ஊரின் எல்லா தெருக்களிலும் இப்படியான சிநேகம் இருந்தது.
கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.
ஆற்று பாலத்தை கடந்து மடத்து வீட்டை நெருங்கினோம். மாலைநேர காற்று சிலுசிலுவென்று வீசியது. வீட்டு வாசலில் உயரமான திண்ணை இருந்தது. அதிலிருந்து பார்த்தால் எதிரே ஆறு தெரிந்தது.. வீட்டின் கதவு கொஞ்சமாக மூடப்பட்டு இடைவெளி தெரிந்தது. நாங்கள் வீட்டின் கதவை நெருங்கியவுடனே ஒரு பெண் வெளியே தலையை நீட்டி, அருணை பார்த்து சிநேகமாக சிரித்து வா அருண் என்றாள். உள்ளே நுழைந்தோம். உள்ளே அழைத்த பெண் வெளிர்நீல கலரில் தாவணியும்,கறுப்பு பூக்கள் போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள்.
உட்காருங்க, எங்களை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி ஸ்டூலை காட்டினாள். தையல் மெஷின் எதிரிலிருந்த மற்றொரு ஸ்டூலையும் இழுத்து போட்டாள். தையல் மெஷினில் பாதியில் விட்டிருந்த ரவிக்கையை வாரி அறைக்கு கொண்டு சென்றாள். அருண் ஜன்னல் கட்டையிலேயே உட்கார்ந்தான். மற்றொரு ஜன்னல் கட்டையிலிருந்த, ரேடியோ எஃப்.எம்மில் “வசீகரா என் நெஞ்சினிக்க“ மெலிதாக ஒலித்துகொண்டிருந்தது.
வெளியே தெரிந்த வீட்டின் அளவுக்கும் உள்ளே இருந்த சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உள்ளே நுழைந்தவுடன் கூடம்,. கூடத்திலிருந்த அனைத்து உத்திரங்களையுமே கரையான் அரித்திருந்தது. அவை இரும்பு பைப்புகளாலும், மூங்கில் மரங்களாலும் முட்டுகொடுக்கப்பட்டு கூரையை தாங்கியிருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் அந்த அறை இருந்தது. அறை வாசலில் பூக்கள் எம்பிராயடர் செய்யப்பட்ட ஒரு பழைய திரைச்சீலை தொங்கியது. சமையல் கூடம், இரண்டாம் கட்டில் இருந்திருக்கவேண்டும். இரண்டாம் கட்டே முழுமையாக இடிந்துவிட்டிருந்ததால், கூடத்தில் இருந்து பிரிந்த நடையிலேயே சமையலுக்காக ஒரு பழைய பலகை போடப்பட்டு பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.
இவன் என்னோட பிரெண்ட் ராஜேஷ். தஞ்சாவூரிலே படிக்கிறான். இது பிரசாத் நம்ம தெரு என்றான் அருண், என்னை பார்த்து. அவள் மையமாக பார்த்து புன்னகைத்தாள்.
எப்படி இருக்கே ராஜி, எங்கே ஜெயா இன்னும் வரலையா?
அவ, எங்கே இப்போ வருவா? டாக்டர் அவ்வளோ சீக்கிரம் விடுவாரா? எப்படியும் எட்டரை ஆகிடும் என்றாள்.
பெரிய மேடம் ஜெயா, டாக்டருக்கிட்டே வேலைபாக்குறாங்க..எதுனா ராங்க் காமிச்சா, ஊசி போட்டுடுவாங்க என்றான் அருண்.
ஏன் மாப்ளே, நானும்தான் ஊசி போடுவேன். அதுவும் வலிக்காம..  என்றபடி அருணை பார்த்து கண்ணடித்தான் ராஜேஷ்.
எனக்கு திகீரென்றது. ராஜியை பார்த்தேன். அவள் அந்த பேச்சை கவனிக்காததுபோல், புன்னகைத்தாள்..
உங்க வீடு போஸ்ட் ஆபிஸ் பக்கத்துலேதானே இருக்கு? என்றாள் என்னை பார்த்து.
நான் அவசரமாக இல்லையென்று தலையாட்டினேன். பிறகு கேட்டது உரைத்து ஆமாம் என்றேன். மெலிதாக சிரித்தாள் ராஜி. மாநிறம். முடியை அழகாக பின்னி, முன்பக்கம் சில முடிகளை எடுத்துவிட்டிருந்தாள்.. கைகளில் கண்ணாடி வளையல்கள். உதட்டோர மச்சம் கவர்ச்சியாக இருந்தது. எப்படியும் இருபத்தி ஐந்து வயதை தாண்டியிருப்பாள் என்று தோன்றியது. சிரித்தபோது அழகாகவே இருந்தாள். பாதி படித்த லட்சுமியின் நாவல் ஒன்று தரையில், பக்கம் மறந்துவிடாமல் இருக்க குப்புறகவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.
கொல்லைபக்கம் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டது. நான் அந்தப்பக்கம் பார்ப்பதை ராஜி, கவனித்தாள். என் சிஸ்டர் வித்யா துணி துவைக்கிறா.
சாந்தி தியேட்டர்லே இதுநம்மஆளு படம் வந்துருக்கு. நயன்தாராவை இன்னைக்கு பார்த்தே ஆகணும்ன்னு அடம்பிடிச்சான் ராஜேஷ். நாந்தான், இங்கே வந்து என்னோட பிரண்ட்ஸை பாருன்னு கூப்பிட்டுவந்துட்டேன் என்றான் அருண்.
ஓ, நயன்ன்னா ரொம்ப பிடிக்குமோ?
முன்னாடியெல்லாம் இல்லைங்க.. பில்லா படம் பார்த்தப்பதான் எனக்கு நயனோட அந்த முழு தெற..மையும் நல்லா தெரிஞ்சுது.. தெறமை என்ற வார்த்தைக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்தான் ராஜேஷ்.
நீ அந்த நீச்சல் தெறமையைதானே சொல்றே மாப்ளே என்றான் அருண்.
கன்னங்கள் சிவப்பேறி லேசாக வெட்கத்துடன் சிரித்தாள் ராஜி. எல்லா பேச்சையும், தான் நினைக்கும் முனைக்கே இழுத்து செல்கிறான் ராஜேஷ். முன்பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் இப்படி கொஞ்சமும் லஜ்ஜையின்றி பேசுவது நிச்சயம் இவனுக்கு முதல்முறையாக இருக்காது. அருணின் தோழி என்றவுடன் இப்படிதான் இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டானா? சட்டென்று அவள் கோபமானால், அசிங்கமாகிவிடுமே. இவனுடன் வந்திருக்ககூடாதோ. ஆனால் இங்கு வரும்போதே நானும் இதை உள்ளுர எதிர்பார்த்திருந்தேனோ..
கொல்லைகதவை திறந்தபடி வித்யா வந்தாள். மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட சுடிதாரின் டாப்ஸ் மட்டும் அணிந்து உள்ளே வந்தவள், எங்களை பார்த்தவுடன் அறைக்குள் சென்று பேண்ட் அணிந்து வந்தாள். அழகான பெரிய கண்களே முதலில் ஈர்த்தது.  யாரும் கேட்காமலே, ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கூடத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த ராஜேஷிடம் முதலில் நீட்டினாள்.
ராஜேஷ் வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கண்ணை சிமிட்டியபடி, என்ன, தண்ணி சுடுது? என்றான்.
ம்ம்ம்.. தண்ணி சுடலை. நீங்கதான் சூடா இருப்பீங்க.. புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்துகொண்டு இவனிடம் வாய் கொடுக்கிறாளே அசடு..
அது என்னவோ உண்மைதான்.. கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.
நான் பேச்சை மாற்றும் பொருட்டு, நீங்க படிக்கிறீங்களா என்றேன்.
சின்னமேடம் கரஸ்லேயே பிகாம் படிக்கிறாங்க.. டியூசன் எடுக்குறாங்க.. நீயும் வேணா ஜாயின் பண்ணிக்கோ
நான் புன்னகைத்தேன். அப்போது திடீரென்று கூடத்து அறையில் இருந்து மெலிதாக இருமல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. எல்லோரும் அறையை பார்ப்பதை பார்த்த ராஜி, அப்பாதான், இரண்டு நாளா இருமல் ஓயலை. என்றாள்
இவ்வளவு நேரம் அவர் உள்ளேதான் இருந்தாரா? அவரை வைத்துகொண்டுதான் இப்படியெல்லாம் பேசினோமா, என்னவோ போல் இருந்தது. ராஜேஷின் முகமும் மாறியது போல் தெரிந்தது.
இருமலுக்கிடையே அவர் அழைத்தார். ராஜி உள்ளே போனாள். கதவுவிலகி, அவர் ஈசிசேரில் படுத்திருப்பது தெரிந்தது. வாய் குழறலாக ஏதோ பேசினார். அருணும் உள்ளே போனான்..இடது கையை நெஞ்சருகே வைத்திருந்த விதத்தில் வாதம் என்று தெரிந்தது. வலது கையை குடிப்பது போல் காண்பித்து லோலா.. லோ..லா என்றார்.
இது என்ன புதுப்பழக்கம்? சாயங்காலமானா சோடா வேணுங்குறது? உடம்புக்கு நல்லதா இது? பேசாம இருங்க.
சோடாதானே ராஜி, நான் வாங்கிட்டுவரட்டா?
இல்லை, வேணாம் அருண்
டெய்லி அஞ்சு ரூபா சோடா குடிக்க வேணும்னா எங்கே போறது ? வெந்நீர் போட்டுருக்கேன். பேசாம இருக்க சொல்லு ராஜி, என்றாள் வித்யா..
நீ பேசாம இரு வித்யா. நான் வாங்கிட்டுவாரேன்..பதிலை எதிர்பாராமல் அருண் வெளியே போனான்.
சோடாவை டம்ளரில் ஊற்றி கொஞ்சமாக கொடுத்தாள் ராஜி. குடித்தார். பிறகு மெதுவாக நாற்காலியை காட்டி “வாச போ “ என்றார். இல்லை..இங்கேயே இருங்கப்பா. அப்புறம் போய்க்கலாம்.
இப்போது குரலில் கடுமை தெரிந்தது. கையை நீட்டி நீட்டி “வாச போ” என்றார். கண்களை பெரிதாக்கி முறைத்தார். அருண், “வாசலுக்குதானே போகணுங்கறாரு?.. நாற்காலியை தூக்கி அங்கே போட்டுட்டு, அப்புறம் மெதுவா அழைச்சுட்டு போய் உட்காரவைச்சுடலாம்“ என்றான்.
இல்லை வேணாம் அருண்..நீ உட்காரு
“வாச போ” கத்தியபடி ஒரு கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்தார். அதில் மிச்சமிருந்த சோடா அறைக்கு வெளியே தெறித்தது. டம்ளர் சுவற்றில் ணங்கென்று மோதி சுழன்று விழுந்தது.
இப்போ எதுக்கு வாசலுக்கு போவணும்ன்னு துடிக்கிறாரு? செஞ்சதெல்லாம் பத்தாதா? ஆவேசமாக கேட்டாள் வித்யா..
வித்யா நீ தயவு செஞ்சு பேசாம இரு.. அதட்டினாள் ராஜி..
எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.
மெதுவாக வெளியே வந்து நடந்தோம்.. கொஞ்ச தூரம் யாரும் பேசவில்லை. சற்றுதூரம் போனவுடன் பெட்டிகடையில் சிகரெட் வாங்கினான் அருண். பற்றவைத்தவுடன், சரி விடு மாப்ளே.. படத்துக்கே போயிருக்கலாம்.. நைட் என்ன பிளான்? என்றான் அருண். எதுவும் பேசாமல், புகையை ஊதியபடி, தூரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அந்த வீட்டின் பொம்மைகளை வெறித்தான் ராஜேஷ்.
- பதாகை அக்டோபர் 23 2016

Monday, August 8, 2016

இனபடுகொலை - ஜெயமோகனுக்கு அன்புடன்..

தடம் இதழில் ஜெயமோகன் அவர்கள் ஈழ படுகொலைகள் தொடர்பாக அளித்த பேட்டியைத் தொடர்ந்து அவருக்கு எனக்கிருந்த கேள்விகளை அனுப்பியிருந்தேன். அதை தொடர்ந்து ஜெயமோகனின் தளத்தில் விளக்கமான கட்டுரையை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் மீண்டும் எனக்கிருக்கும் கேள்விகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துள்ளேன்.


அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது பதில் கட்டுரைக்கு நன்றி. உங்களது பதிலில் எனக்குள்ள சில கேள்விகளையும், விளக்கங்களையும் முன்வைக்கவிரும்புகிறேன்.

  1. இனஅழித்தொழிப்பு 80களுக்கு முன்பும், 2009க்கு பிறகும் இலங்கையில் நடந்தது இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். 1956ல் பண்டாரநாயகே பதவிக்கு வந்த உடன், சிங்களா ஒன்லி என்கிற சட்டம் மூலம் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக அறிவிக்கப்படுகிறது. அதற்க்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து, அதற்கு பிறகு நடந்த கல்ஓயா கலவரத்தில் 150 தமிழர்கள் வெட்டிக்கொல்லபடுகின்றனர். பிறகு தொடர்ந்து 1958ல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைதான் இரு சமூகங்களுக்கும் இடையேயான நிரந்தர பிளவை ஏற்படுத்துகிறது. 1958 மே 25ம்தேதி பொலன்னறுவை பண்ணையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட எழுபது தமிழர்கள் கரும்புதோட்டத்தில் வெட்டுகொல்லப்பட்டனர். 1958ம் ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பலியானார்கள்.  பிற்பாடும் தொடர்ந்து 74, 77, 78 என பல படுகொலைகள் இனரீதியாக நடந்தே வந்திருக்கிறது.

  2. இனஅழித்தொழிப்பு என்று ஏற்றுகொள்ளபடவேண்டும் என்றால் அது தொடர்ந்து நடைப்பெற்றிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். ரூவாண்டாவில் 1994ல் டுட்சி இனத்துக்கு எதிராக மிகப்பெரிய இனஅழித்தொழிப்பு நடைப்பெற்றது. உது இனத்தை சேர்ந்த மிதவாத தலைவர்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு அங்கு அதே மாதிரியான படுகொலைகள் நடக்கவில்லை. எனினும் 94ல் நடைபெற்றது இனபடுகொலை என்று சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  3. மலையக தமிழர்கள், அடிப்படையில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். ஈழத்தமிழர்கள், இலங்கையின் பூர்வீக குடியினர். ஒரே மொழி பேசினாலும் இவையிரண்டும் அடிப்படையில் இருவேறு தேசிய இனங்கள். எனவே மலையக தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் நடைபெறவில்லை என்பதால் அது இனபடுகொலையல்ல என்று எப்படி கூற முடியும்?  மேலும், 2013ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்து, 1970களில் அகதிகளாக வடக்குபகுதிகளில் குடியேறிய மலையக தமிழர்களும் இந்த போரில் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என்பதே. 2009ல் கொல்லப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மலையக தமிழர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

  4. ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ்முஸ்லிம்கள் என இந்த மூன்று பிரிவினரிடையே 1915 முதலே பல கருத்துவேறுபாடுகளும் உள்குத்துக்களும் நடந்தேறியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சில காட்டிகொடுப்புகளும், பலிகளும், பின்பு புலிகள் 1990 அக்டோபரில் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றியதும் நடந்தது. பிறகு, 2002ல் புலிகள் அமைப்பு, முஸ்லிம்களிடம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டனர், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கிமிடம், பிரபாகரன், வட-கிழக்கு பகுதி தமிழ் இஸ்லாமியர்களுக்கும் உரியதே என்று வாக்குறுதி கொடுத்ததும் நடந்தது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் மலையக தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் புலிகளிடம் நெருங்கி வந்ததும், தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று பிரபாகரன் சொன்னதும் நடந்தது.

  5. பொதுமக்களை, போர்முனைக்கு கொண்டு சென்றது புலிகளின் தவறு. ஆனால், ஒரு பகுதியை, யுத்தத்திலிருந்து பாதுகாக்கபட்ட பகுதி என்று அரசுதான் அறிவிக்கிறது. அதில் மக்களை குழும செய்கிறது. பிறகு அந்த பாதுகாப்பு வளையத்தில், குண்டு மழைபொழிந்து மக்களை கொல்கிறது. 2009ம் வருடம் ஜனவரி மாதம் 21ம் தேதி, சுதந்திரபுரம் என்ற இடத்தில் இதே போல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கிறது அரசு. அதை நம்பி ஐ.நாவின் ஊழியர்கள் (11வது கான்வாய்) உணவு பொருட்களை எடுத்து செல்கிறார்கள். ராணுவத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சென்ற சில மணித்துளிகளிலேயே குண்டு வீசபடுகிறது. குறுந்தகவல்கள் மூலம் குண்டு வீசுவதை நிறுத்த சொல்லி ஐ.நா ஊழியர்கள் கதறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கொல்லபடுகிறார்கள். அந்த ஊழியர்கள் குண்டுவீச்சை நிறுத்தும்படி கோரிய குறுந்தகவல்கள் உட்பட இவையெல்லாம் மிக விரிவாகவே சார்லஸ் பேட்ரி (ஐ.நா உள்ளக ஆய்வு குழு) அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்லஸ் பேட்ரி அறிக்கையை வெளியிடுவதற்க்கே, ஐ.நா மிகவும் தயங்கியது. பிறகு முக்கியமான சில இடங்களை கறுப்பு மை கொண்டு அழித்துவிட்டு, வெளியிட்டது. இணையத்திலும் கிடைக்கிறது.  NFZ1, NFZ2 NFZ3 என அனைத்து பாதுகாப்பு வளையங்களிலும் இதே ரீதியான படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.  இறுதி போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்முறை என பல ஆதாரங்கள் இது புலிகளுக்கு மட்டும் எதிரான போர் அல்ல என்பதை நிருபிக்கிறது.

  6. இலங்கையில் நடந்தது போர்குற்றம் என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்றும் ஐ.நா அமைத்த நிபுணர் குழு ஏற்கனவே அறிக்கை சமர்பித்து விட்டது. எனினும் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. போரின்போதே ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சொல்லி பலமுறை கோரிக்கை விடுத்தும் பான் கீ மூன் செவிசாய்க்கவில்லை. உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு இல்லை என்று மறுத்து விட்டார். 2009 ஜூனில், ஐ.நாவின் சட்டகுழு ஆர்டிக்கிள் 99படி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று பரிந்துரை செய்தது. அதையும் பான் கீ மூன் ஏற்கவில்லை.

    இந்த சூழலில், இனபடுகொலை என்று குரல் கொடுப்பதால்தான், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது எப்படி சரியாக இருக்கமுடியும்? போர்குற்றம் என்றால் வெறும் அம்புகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, எய்தவர்கள் தப்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று கருதியே இது வெறும் போர்குற்றம் மட்டுமல்ல, இதன்பின்னே உள்ளவர்கள், இதற்கு உதவியவர்கள் என அனைவரும் தண்டிக்கபடவேண்டும் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இனபடுகொலை என்கிற வாதம், முன்வைக்கபடுகிறது. இனபடுகொலை என்று சொல்பவர்களின் நோக்கத்தை ஆராய்வதை விட தரவுகளின் அடிப்படையில் இது இனபடுகொலையா என்று ஆராய்வதுதானே சரியாக இருக்க முடியும்?

    கண்ணுக்கு முன்னே குழந்தைகள் வெடித்து சிதறியதையும், வாழ்க்கைதுணைகள் செத்து மடிந்ததையும், தாய்தந்தையர் கொல்லப்பட்டதையும் பார்த்து அலறி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்குபடி கோரும் அந்த தமிழர்களின் குரல் வரலாற்றில் இப்படி மறக்கடிக்கப்படவேண்டியதுதானா? நடந்த கொடுமைகளுக்கு நீதி வழங்காமல், எப்படி அவர்கள் தமது கடந்தகால இழப்புகளை மறந்து ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ முடியும்?

    இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓரளவு வசதியுடன் வாழ்கிறார்கள். மிகமோசமாக நாம்தான் அவர்களை கைவிட்டுள்ளோம் என்கிற உங்களது வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். எங்களாலான உதவிகளை, இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர் குழந்தைகளின் கல்விக்காக செய்துவருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறேன்.
அன்புடன்
செந்தில்குமார்

Sunday, June 5, 2016

குறிலாகி, நெடிலாகி, இவையிரெண்டும் உயிராகி !



    காதலை தெரிவிக்கும் நபரிடம், எனக்கு கல்யாணமாகி குழந்தைகூட இருக்கு, ஆனா லவ் செய்யறேன்னு யாருமே சொன்னதில்லை. நான் யோசிச்சு சொல்கிறேன் என்று சொல்லும் பெண்ணின் இயலாமையையும், வலியையும் அப்பட்டமாக பதிவு செய்வதில் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு மைல் நிச்சயம் முன்னே சென்றிருக்கிறார். தன் மனைவியை திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபரிடம், தான் இப்போது மனைவியுடன் சேர்ந்துவிட்டதை தெரிவிக்க, கணவன் சொல்லும் வசனம், “உங்க எக்ஸ் வுட்பியோட, கரண்ட கணவன் ...நான்”. அந்த நபர் புன்னகையுடன் புரிந்துகொள்கிறார். இப்படி கவிதை போல் சில காட்சிகள்.


    மனைவியை தவிர வேறு பெண்ணுடன் ஒரு ஆண் கொள்ளும் தொடர்பு, மனைவிக்கு தெரிந்தால் கூட அதில் பெரிய அவமானம் கொள்வதில்லை. ஒன்றுக்குமேற்பட்ட பெண்ணை திருப்திபடுத்தும் ஆம்பளைதனம் மீது உள்ளூர பெருமிதம் கூட. சரி, இனி நான் அந்த பெண்ணை பார்க்கவில்லை என்று சொன்னால், உடனே முந்தானையை சரிசெய்துகொண்டு, மனைவி குடும்பம் நடத்த தயாராக இருக்கவேண்டும். ஆனால் மனைவி ஒருவனை நிராகரித்தாள் என்று தெரிந்தபின்னரும், அவன் கூட படுத்தாளா என்ற கேள்வி உயிரை உருக்கும். அவளை நெருங்கும்போதெல்லாம், என்னமோ மாதிரி இருக்கும்.. ஏனெனில் இங்கு கேள்விக்குள்ளாகிருப்பது ஆம்பளைதனம் அல்லவா? நீ எப்படி கேட்டாலும் அந்த கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன். அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்து என்று சொல்லும் குரலை இந்த படமளவுக்கு எந்த சினிமாவும் காட்சிபடுத்தியதில்லை. வாழ்த்துக்கள் .
    படம் பார்க்கும் ஒவ்வொரு ஆணையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதில் கார்த்திக் சுப்பராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த கேள்விகள், நிறைய பேரை எரிச்சாலூட்டுவதை இணைய பதிவுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மை சுடும்தானே?
    பொன்னி போன்ற பாத்திரத்தை வைத்துவிட்டு, மலர்விழி மைக்கேலை நிராகரித்துவிட்டு தனிமையில் அழுவது போன்ற 19ம் நூற்றாண்டு காட்சிகள் ஏன் கார்த்திக்? மலர்விழி மைக்கேலை திருமணம் செய்துகொள்வதில் என்னதான் பிரச்சினை? ஒரு உன்னதமான படமெடுத்ததாக சொல்லிக் கொள்ளும் அருளிடம் அந்த கலைமேதமைக்குண்டான எந்த குணமும் தெரியவில்லையே? டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு, சட்டையை கழட்டி டான்ஸ் ஆடுவதே போதும் என்று விட்டுவிட்டீர்களா?

Monday, April 4, 2016

நாம் தமிழர் போகும் பாதை.


சீமான் இன ரீதியாக, தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும் என்கிற கோஷத்தை எடுத்துள்ளார். இதன்மூலம், சீமான் குறிவைப்பது அடுத்த பத்தாண்டுகள் கழித்து இங்கிருக்கபோகும் தலைவர்களை என்பதில் சந்தேகமில்லை. அடுத்த பத்தாண்டுகள் கழித்து முதல்வர் போட்டியில் இருக்கபோகிறவர்கள் யார்? ஸ்டாலின், விஜய்காந்த், வைகோ, அன்புமணி, திருமாவளவன் போன்றவர்களே கண்ணுக்கு தெரிகிறார்கள். இதில் அன்புமணி மற்றும் திருமாவுக்கு சாதி ரீதியான முத்திரை இருப்பதால், ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கும் இவர்கள் தலைமை ஏற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனில், எஞ்சியிருப்பவர்கள் ஸ்டாலின், வைகோ மற்றும் விஜய்காந்த். இதில் வடுகர்கள் நம்மை ஆள்வதா என்கிற கேள்வியை முன்வைப்பதன்மூலம் வைகோ மற்றும் விஜய்காந்தை போட்டியிலிருந்து வெளியேற்றுகிறார் சீமான். கருணாநிதி தெலுங்கர் என்கிற கோஷம், இதுவரை நிருபிக்கபடாதது. ஆனால் மீண்டும், மீண்டும் இதை சொல்வதன்மூலம் ஸ்டாலினையும் வெளியேற்ற நினைக்கிறார் சீமான். அது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.



சீமான் இப்படி தெலுங்கர், மலையாளிகள் என பிரிவினைவாதம் பேசுவது இந்த கணிப்பொறி யுகத்தில், உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட இந்த நூற்றாண்டில் ஏற்புடையது அல்ல. ஆனால், சோனியா பிரதமராக கூடாது என்று தொண்டைநரம்பு புடைக்க குரல்கொடுத்தவர்கள், சீமான் பிரிவினைவாதம் பேசுகிறார் என்று குற்றம் சொல்வது பொருத்தமானது அல்ல.  சோனியா இந்தியாவின் மருமகளாக வந்தவர். அவரை தலைவியாக கொண்ட கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்த பின்னரும், சோனியா பிரதமராக கூடாது என்று ஏன் வாதங்கள் முன்வைக்கப்பட்டது? நம்மவர், அயலவர் என்கிற கோஷம்தானே அதற்க்கும் அடிப்படை? 

மதம், சாதி அதன் உட்பிரிவு என வகைவகையாக பிரிந்துகிடக்கும் தமிழர்களை, நாம்தமிழரால் ஒற்றுமையாக்க முடியுமா? அல்லது அந்த கட்சியும், பிற திராவிட கட்சிகளை போலவே பெரும்பாண்மை சாதிவெறியை வளர்த்து, மேலும் பிரிவினையை தூண்டுமா என்பதுதான் இன்றைய சூழலில் முக்கிய கேள்வியாக படுகிறது. திமுகவும், அதிமுகவும்  வெளியே பசப்பினாலும், முழுக்க முழுக்க சாதி ரீதியிலேயே அங்கு வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. எந்த தொகுதியில் எந்த சாதிகள் அதிகம் என்பதுதான் அடிப்படை. இதில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், அடுத்து திமுக, அந்த வேட்பாளரின் சாதியை சேர்ந்த வேட்பாளரையோ, அல்லது அதற்க்கிணையாக அந்த தொகுதியில் இருக்கும் அடுத்த சாதியை சேர்ந்த வேட்பாளாரையோ நிறுத்தி மறைமுகமாக மக்களின் சாதிவெறியை அணையவிடாமல் பார்த்துகொண்ட பெருமை இந்த இருகட்சிகளுக்கும் உண்டு. பேசுவது திராவிடவாதம், ஆனால், நிலைநிறுத்துவதோ சாதியவாதத்தைதான்.

இதில், நாம்தமிழரின் வேட்பாளர் தேர்வை உற்று நோக்கினால், சீமான் உண்மையில் ஒரு மாற்றத்தை புகுத்தியுள்ளார் என்று புரிகிறது. எந்த தொகுதியிலும் அவர் சாதியை அடிப்படையாக கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாக தெரியவில்லை. உண்மையில் அவர் சாதியை சேர்ந்த மக்கள் வாழும் இடத்திலிருந்து விலகி, கடலூரில் நிற்க முடிவு செய்திருப்பதை வியப்புடன் தான் பார்க்கவேண்டியிருக்கிறது. பெரியார், தமிழர் என்று பேசும் வைகோ இன்னமும் தமது சாதியினர் பெருமளவில் வாழும் விருதுநகரை விட்டு வெளியே வர மறுக்கிறார். இந்த சூழலில் இது ஒரு வரவேற்க்கதக்க மாற்றம்தான்.

சீமான் மட்டுமல்ல, பிற வேட்பாளர்களையும் அவர் தமிழர் என்ற அடிப்படையில் மட்டும்தான் தேர்வு செய்துள்ளார். உதாரணமாக மன்னார்குடியை எடுத்துகொண்டால், காங்கிரஸ் காலத்தில் 1967 தேர்தலில் டி.எஸ் சுவாமிநாத உடையார் எம்.எல் ஏவாக இருந்தார். உடையார் சமூகம் தொகுதியில் சிறுபாண்மை சமூகம்தான். ஆனால், அதற்கு பிறகு திமுக, அதிமுக என கடந்த 45 ஆண்டுகளாக இரு கட்சிகளும் போட்டிபோட்டுகொண்டு, கள்ளர், அகமுடையோர் என தொகுதியில் பெரும்பாண்மை சாதியினரை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி, இரு சமூகத்திற்க்குமிடையே பிளவை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது தஞ்சை பகுதிகளில் எந்தளவுக்கு என்றால், கள்ளர் சமூகத்தினர் வைத்திருக்கும் கடையில் அகமுடையோர் பொருட்கள் வாங்கமாட்டார்கள். அகமுடையோர் சமூகத்தினர் வைத்திருக்கும் கடையில் கள்ளர்கள் வாங்கமாட்டர்கள் என்கிற அளவுக்கு. ஆணவ கொலைகள் உச்சத்தை தொட்டதும் இந்த பகுதிகளில்தான். இந்த சூழலில் நாம் தமிழர் முதன்முதலாக மன்னார்குடியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பது பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை. இப்படி பல பகுதிகளில் சாதியை பின்னுக்கு தள்ளி, தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்து, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறது.

இரண்டாவதாக, இஸ்லாமியர்களையும், கிருத்துவர்களையும் இனரீதியாக தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரமுயற்சிக்கிறது நாம்தமிழர் அமைப்பு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு கடையில் ஈழத்தமிழரை சந்தித்தேன். தமிழர்போல தோற்றமளித்ததால், நீங்கள் தமிழரா என்று கேட்டேன். இல்லை நான் முஸ்லிம் என்று தமிழில் விடையளித்தார் அவர். அப்படி பிளவுப்பட்ட ஒரு சமூகமாக தமிழ்நாட்டில் மாறவில்லை என்றாலும், மதத்தை தாண்டி, மொழி ரீதியாக அவர்களை இணைப்பதை ஒரு முக்கிய முயற்சியாகவே வரவேற்க்கிறேன்.

மூன்றவதாக, இங்கு திராவிட கட்சிகளால் தொடர்ந்து அன்னியபடுத்தபடும் ஒரு சமூகம் பிராமணர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர்களது சாதிய பார்வையால், விமர்சிக்க வேண்டிய தேவை இருந்தது. ஒரு இறுக்கமான சமூகமாக, அது தேங்கியிருந்தபோது, அப்படிப்பட்ட விமர்சனத்துக்கு ஒரு அர்த்தமிருந்தது. ஆனால், இன்றைய நிலையில் பிராமணர்களை விட சாதியை இறுக்கி பிடித்திருப்பவர்கள் இடைநிலை சாதிகள்தான். இன்று அதிகளவில் கலப்பு திருமணங்கள் நடப்பது பிராமண சமூகத்தில்தான். இந்த நிலையில் இன்னமும் அவர்களை மட்டும் விமர்சிப்பதன் மூலம் தமது சாதிய பற்றை மறைத்துகொள்ள பார்க்கிறது திராவிட கட்சிகள். ஆனால், நாம் தமிழர் இயக்கம், வீட்டில் தமிழ் பேசும் பிராமணர்களை எப்படி தமிழரல்லாதவர் என்று சொல்லமுடியும் என்று கேட்கிறது. இது ஒரு முக்கிய மாற்றம்.

இது போன்ற நிலைபாடுகள் மூலம் கவனிக்கவைத்திருக்கும் நாம்தமிழர் அமைப்பு, வைகுண்டராஜன் தமிழர்தானே, அவர் மணல்கொள்ளையடிக்காவிட்டால், டாட்டாவும் பிர்லாவும் கொள்ளையடிப்பார்கள். அதற்க்கு இது பரவாயில்லை. பச்சைமுத்து பெருந்தமிழர், சந்தனகடத்தல் வீரப்பன் எல்லைதெய்வம் போன்ற கேலிக்குரிய நிலைபாடுகளால் முகம் சுளிக்கவும் வைக்கிறது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை போன்ற ஒற்றை வரி கோஷங்களை அது தவிர்க்கவேண்டும். உள்ளே எத்தகைய பலமான திட்டமிருப்பினும் இது போன்ற ஒற்றை வரி கோஷங்கள் மக்கள் பார்வையில் கேலிக்குரியதாகவே மாறும். இது போன்ற நிலைபாடுகளை திருத்திக் கொண்டால், தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்று சக்தியாக நாம் தமிழர் மாறகூடும்.





Sunday, March 20, 2016

சயந்தனின் ஆறாவடு

2009ம் வருடம் போர் உச்சத்தில் இருந்த போது, முல்லைதீவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி தப்பி பிழைப்பதற்க்காக 21 பேர் ஒரு சிறிய படகில் பயணம் செய்தார்கள். இலங்கை ராணுவம், இந்திய கடலோரகாவல் போன்றவற்றை எல்லாம் எப்படியோ மீறி பயணம் தொடர்ந்தது. ராமேஸ்வரம் அருகில் இருக்கிறதே என்ற எண்ணத்தில் உணவுக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. கடல் நடுவே வழி தவறியது. நாட்கணக்கில் பயணம் செய்தும் கரை தெரியவில்லை. ஒவ்வொருவராக செத்து விழுந்தனர். கடைசியில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் 11 பேர் குற்றுயிராக கரை ஒதுங்கினார்கள். தனது குடும்பத்தில் இரண்டு மகன்கள், மகள் மற்றும் கணவர் தன் கண்ணெதிரே பசியால் துடிதுடித்து செத்தனர் என்று கதறி அழுதார் மேரி என்ற பெண்மணி. இப்படி எத்தனையெத்தனை சம்பவங்கள்? இங்கு என்ன நடந்தது என்று கூற மேரி மட்டுமாவது உயிர் தப்பினார். படகு கவிழ்ந்து மொத்தமாக செத்தவர்கள் கடைசியாக செல்ல நினைத்தது எங்கே? சொல்ல நினைத்தது என்ன? ஆழ்கடலின் அடியே மெளனித்தவர்கள் எந்த நம்பிக்கையில் படகு ஏறினார்கள்?



எல்லா பயணங்களும், கரையின் அந்த பக்கம் மீதமிருக்கும் ஒரு துளி இரக்கத்தையும், கருணையையும் நம்பியே தொடங்கபடுகிறது. தமது சொந்தமண்ணில் எஞ்சியிருந்த கடைசி துளி மனிதமும் செத்துவிழுந்த பிறகு, சிறிய தோல்பேக்கில் தமது உடமைகளை எல்லாம் அடைத்து, கைவிட்ட கடவுள்களின் பிரசாதத்தை மடித்து ஒரு மூலையில் சுருட்டிக் கொண்டு, மறுகரை நோக்கி பயணித்தவர்கள் இவர்கள். இவை எல்லாம் எங்கோ ஒரு தூர தேசத்தில், எப்போதோ ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிகாலத்தில் நடந்தது அல்ல.நம் கண்ணெதிரே, நம் கைகள் தொட்டுவிடும் தூரத்தில், நடந்ததுதான். இவர்களின் வாழ்க்கையை/சாவை, எழுத்தில் ஆவணபடுத்தி இருக்கிறார் தமது முதல் நாவலான ஆறாவடு நாவலில் சயந்தன்.



1987ம் வருடம் தொடங்கி 2003 வரையிலான காலகட்டத்தை களமாக கொண்டு விரிகிறது நாவல். ராணுவ ஆக்ரமிப்பு, மக்கள் கைக்குழந்தைகளை தூக்கிகொண்டு ஒரு சிறிய சாக்குபையில் உடமைகளை அடக்கிகொண்டு புலிகளின் பகுதி நோக்கி இடப்பெயர்வு என இறுதிபோரில் என்ன நடந்ததோ அதுதான் அந்த காலக்கட்டத்திலும் நடக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை உடனடியாக தூக்கி செல்லமுடியாததால், நான்கு கிளாஸ் தண்ணீர், கொஞ்சம் உணவு போன்றவற்றை அருகில் வைத்துவிட்டு மனைவி மக்களை கொண்டு பாதுகாப்பாக விட்டுவிட்டு, திரும்ப வந்து அழைத்துக் கொள்ளலாம் என்று போகிறார் சிவராசன். திரும்புவதற்க்குள் ராணுவம் நுழைந்துவிடுகிறது. பலமாதங்கள் கழித்து திரும்ப செல்கையில், தண்ணீர் கிளாஸ்கள் காலியாக கிடக்கின்றன. அருகிலேயே மட்கிபோய் தாயின் சடலம்.

இத்தாலியை நோக்கி படகில் பயணிக்கும் முன்னாள் போராளி அமுதன் ஊடாக நாவல் சொல்லபடுகிறது. ஒட்டுமொத்த மக்களின் சுதந்திரம் தேடி போராடுகையில், தனிமனித சுதந்திரம் என்னவாகும் என்பது சிக்கலான கேள்வி. சமாதானமான சூழலில், சகல வசதிகளுடன் வாழும் மக்களிடையே செயல்படும் தனிமனித சுதந்திரம், போர்சூழலில் பேணபடுமா? புலிகள் மீதான கேள்விகளை நேரு வாத்தியர் அமுதனிடம் தொடர்ந்து முன்வைக்கிறார். அவரே ஒரு பொதுவெளியில் புலிகளை பாராட்டுகிறார். ஒரு பெரிய அறத்துக்காக, சிறிய தவறுகள் மன்னிக்கபடலாமா? உண்மையில் எது பெரிய அறம்? சிறிய தவறுகள் என்பது அந்த தனிமனிதனின் வாழ்க்கையை பொறுத்தவரை உயிர் பிரச்சினையல்லவா? எதுவரை இந்த சமரசம் செல்லலாம்?

அதே படகில் பண்டார என்னும் சிங்களவனும் பயணிக்கிறான். கடுமையான வறுமையிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற ராணுவத்தில் சேர்ந்தவன். போர் சூழல் பயமளிக்க உயிரை காப்பாற்றிகொண்டு தப்பித்து செல்கிறான். இனவெறி எல்லாம் மூன்று வேளையும் உணவருந்த முடிந்தவர்களுக்கு தானே?

அதேவேளையில், உச்சக்கட்ட போர்சூழலில் வாழும்போதும் தமிழர்கள் சிலர் சாதியை விடுவதாய் இல்லை. புலிகள் தமது அதிகாரத்தை கொண்டு சாதிய ஆதிக்கவாதிகளை அடக்குவதை சயந்தன் அழுத்தமாக்க பதிவுசெய்கிறார். பெண்களை கேலி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கபடுகிறது. பெண்கள் இயக்கத்தில் இருக்கும்போது அனுபவித்த சுதந்திரம், இன்று போர் முடிந்த சூழலில் மறுக்கபடுகிறது. இவை எல்லாம் சயந்தன் மட்டுமின்றி, ஸ்ர்மிளா தமது உம்மத் நாவலில் காட்சிபடுத்துகிறார். புலிகளை எதிர்ப்பதையே, ஈழவிடுதலைக்கான செயற்பாடாய் கொண்டிருந்தவர்கள், இன்று புலிகள் இல்லாத சூழலில் செய்வதறியாது, பழையபெட்டியை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்பெயர் சூட்டவேண்டும் என்ற கட்டுபாட்டால் “சும்மா தேனீர் சாலை” நடத்தும் உரிமையாளர், சம்பளத்திற்க்கு வேலைபார்த்து எதிர்பாராமல் செத்துபோனவர்களுக்கு நாட்டுபற்றாளர் பட்டம் வழங்கபடல் என்று அங்கதத்துடன் ஆரம்பிக்கும் நாவல், பிறகு சீரியஸ் தொனிக்கு மாறிவிடுகிறது. இடப்பெயர்வால் அம்மன் கோவிலில் தங்கியிருக்கும் சுபத்திரையின் மகள் நடுஇரவில் வயசுக்கு வந்துவிட, அம்மனின் துணியை எடுத்து பயன்படுத்திகொள்கிறாள். அம்மனும் பெண்தானே புரிந்துகொள்வாள் என்று சுபத்திரை நினைக்கிறாள். இறந்துபோகும் பொடியனின் சடலத்தை கடலிலேயே வீசிவிட்டு பயணத்தை தொடர்கிறார்கள். ஆனால், கடல் அலையால் படகு உடைந்து நொறுங்கிறது.



படகு முழுகி, அமுதனின் செயற்கை கால் மட்டும் எத்திரியா நாட்டில் கரை ஒதுங்கிறது. எத்ரியா நாட்டு விடுதலை போராட்டத்தில், தனது காலை இழந்த இத்ரிஸ் என்னும் கிழவன் அந்த செயற்கை காலை எடுத்து ஆனந்த்ததுடன் முத்தமிடுகிறான் என்று முடிக்கிற இடத்தில் ஒரு தேர்ந்த கதை சொல்லியாக சயந்தன் தன்னை நிறுவிகொள்கிறார்.

ஏறக்குறைய எரித்திய நாட்டு விடுதலை போரும் ஈழவிடுதலை போரும் ஒரே மாதிரியானவையே. அறுபது லட்சம் மக்கள் தொகை கொண்ட எரித்திய நாடு, எத்தியோப்பியா இரண்டாம் உலகபோரில் தமக்கு விசுவாசமாக இருந்ததற்காக பிரிட்டிஸ் அரசால் எத்தியோப்பியாவிற்க்கு சன்மானமாக அளிக்கபடுகிறது எரித்திய நாட்டுபோராளிகள் தனிநாடு கேட்டு போராடுகிறர்கள். முப்பது ஆண்டுகால போருக்கு பின், ஐக்கியநாட்டு பொதுவாக்கெடுப்பின் மூலம் 1993ம் ஆண்டு எரித்திய நாடு விடுதலை அடைகிறது. இத்தனைக்கும் எரித்திய 9 இனக்குழுக்களை கொண்ட சிறிய நாடு. பல்வேறு மொழிகள் பேசபடுகிறது. எத்தியோப்பியாவுடன் நிலத்தால் இணைக்கப்பட்டது. துப்பாக்கியை தோளில் சாய்த்தபடி, ஓ வழிபோக்கனே, உன் வழியில் எரித்திய தாயை பார்த்தால் கூறு, அவள் விடுதலையை நானே பெற்றுதருவேன் என்று பாடிய இத்ரிஸ், இப்போது அமுதனின் செயற்கை காலில் நின்றபடி நட்சத்திரங்களை பார்த்தவண்ணம் பாடிதிரியக்கூடும். .  







  

Friday, March 18, 2016

"ம்" - வலிந்து திணிக்கபடும் துரோகம்


ஈழத்தந்தை செல்வாநாயகம் சாத்வீகமான போராட்டங்களை கையிலெடுத்து அனைத்தும் தோல்வியைடந்து, இனி ஈழமக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று முடிவுரை எழுதி விடைபெறுகையில் அமிர்தலிங்கம் புதிய தலைவராக உருவெடுக்கிறார். இளைஞர்களால் கொண்டாடபடுகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், இளைஞர்கள் தமது கையை அறுத்து அவருக்கு ரத்ததிலகமிடுகிறார்கள். கூட்டத்தில் தமது வசீகரமிக்க உரையினால் கர்ஜிக்கிறார் அமிர்தலிங்கம். அப்படி ஈழத்துக்காக உணர்வூட்டிய அமிர்தலிங்கம் பிறகு வரலாற்றின் ஒரு தருணத்தில் துரோகியாக அடையாளம் காணப்பட்டு களையயெடுக்கபடுகிறார். இப்படிபட்ட விநோதங்கள் நிரம்பியதுதான் ஈழப்போராட்ட வரலாறு.



கிறித்துவதுறவியாவதற்க்காக படித்துக்கொண்டிருக்கும் ஏர்னஸ்ட் நேசகுமாரன், 1981வருடம் யாழ்நூலகம் சிங்கள் டிஜிபி தலைமையில் எரிக்கப்படுகையில், மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத்தில் உள்ள ரசாயனங்களை கத்திமுனையில் கொள்ளையடித்து ஈழப்போராட்டத்தில் இணைகிறான்.காவல் நிலையத்தில் குண்டு வீச முற்ப்பட்டு தோல்வியடைகிறான். பேரினவாதம் ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் நாசமாக்கிகொண்டிருந்த அதே வேளையில்தான், வெள்ளாளர்கள், பள்ளர்களை அடக்கியாண்டுகொண்டிருந்தார்கள். சாதிகொடுமைக்கு எதிராக போராடபோகும் நேசகுமாரன் காவல்துறையிடம் பிடிபடுகிறான்.

ஒருபக்கம் சிங்களபேரினவாதம். எந்தவரைமுறையுமற்ற சித்ரவதைகள், கொலைகள், காவல்துறை அடக்குமுறைகள்.மறுபக்கம் தமிழ்இயக்கங்கள் இடையேயான பிரச்சினைகள், பழிவாங்குதல்கள் இதனூடாக அலைபாயும் ஒருவன் எப்படி தன்னை தக்கவைத்துகொள்கிறான் என்று சொல்லமுற்ப்பட்டிருக்கிறார் ஷோபா சக்தி.

ஈழப்போராட்டங்கள் குறித்து எழுதப்பட்ட புதினங்கள் அளவில் மிககுறைவே. இன்னும் எழுதபடாத மக்களின் பாடுகள் ஏராளம். ஆனால், தனது மற்றநாவல்களை போலவே இதிலும் ஷோபா சக்தி எழுதமுற்பட்டிருப்பது போரினுடாக அலைகழிக்கப்படும் தனிமனிதனின் அகசிக்கல்களையே.

காதுதுவாரத்தில் பென்சிலை நிறுத்தி சுத்தியால் அடித்து உள்ளே இறுக்கி உண்மையை வரவழைக்கும் சிங்கள காவல் அதிகாரி உடுகம் பொல, பிடிபட்டவனின் இயக்க பேரை கேட்டு குழப்பம் அடைகிறார். விடுதலைக்காக போராடுவது எல்லாம் இருக்கட்டும். முதலில் இயக்க பேரை ஒழுங்காக சொல். அது ரெலோ தானே (TELO) என்கிறார். இல்லை சேர், றெலோ என்கிறார் கைதி. உண்மையில் RELO என்று ஒரு இயக்கம் இருந்ததை அவர் அறியவில்லை.  கள் குடித்ததற்காக தனிமனிதர்கள் மன்னிக்கலாம், அமைப்பு மன்னிக்ககூடாது அல்லவா தோழர் என்று கேட்டு பெல்ட்டால் அடிக்கும் நேசகுமாரன், அங்கேயாவது பெரிய அதிகாரிகள் மட்டும்தான் அடித்தார்கள், இங்கே வர்றவன், போகிறவன் எல்லாம் அடிக்கிறான். இதுதான் அதிகார பரவலாக்குதலா என்று கேட்கும் பக்கிரி என முழுக்க முழுக்க வலியாலும், ரத்தத்தாலும் நிரம்பிய பக்கங்களில் தனது பகடிகள் மூலம் இன்னொரு பரிணாமத்தை அளிக்கிறார். இந்த கூர்மையான கிண்டல் ஷோபாசக்திக்கு எளிதாக கைவருகிறது. சொந்தமண்ணில் இருந்து பிரிந்து பலவருடம் பல இன்னல்களுக்கிடையே ஐரோப்பிய தேசத்தில் தஞ்சம் புகுந்து கிடைத்த அனுபவங்கள், அவருக்கு எல்லாவற்றையும் அங்கதத்துடன் பார்க்கும் பார்வையை அளித்திருக்கிறது.

83 கலவரம், வெலிகடா சிறைச்சாலை படுகொலை, மட்டகளப்பு படுகொலை, கந்தன்கருணை படுகொலை என எல்லா சம்பவங்களிலும் நேசகுமாரன் இருக்கிறான். திரும்ப திரும்ப துரோகத்தால் மட்டும் தப்பி பிழைக்கிறான். போலிசிடம் அடிவாங்கும்போதும், கொள்கைக்காக என இறுமாப்புடன் கிடக்கும் அவன், ஜட்டி கிழிக்கப்படும் கணத்தில் ப்ளிஸ் சேர் என்று கெஞ்சி நிலைமாறும் கணம், அதிகாரத்தின் வலிமை மிகுந்த கைகளின் முன்பு, குறைந்தபட்ச சுயமரியாதை கொண்ட எவனும் நிலைகுலைவான் என்பதை நிறுவுகிறது. ஆனால், அதற்கு பின்பு அந்த பாத்திரத்திடம் ஏற்படும் மாற்றங்கள் எந்த தர்க்கத்துக்கும் உட்படாதவை. மனிதமனம் உச்சக்கட்ட நெருக்குதலில் எப்படி செய்லாற்றும் என்பதை பகுத்தறியமுடியாதுதான். ஆனால் இங்கே நேசகுமாரனிடம் ஷோபா சக்தி துரோகங்களை வலிந்து திணிக்கிறார். கண்ணெதிரே கலைசெல்வன் கொல்லபடும்போதும், கைக்குழந்தையின் தாய் துப்பாக்கிகுண்டை ஏற்று விழும்போதும், நேசகுமாரன் அதை எதிர்கொள்ளும்விதம் குறித்து எந்த விவரிப்புமில்லை. சம்பவங்களை மட்டும் சொல்லிசெல்லும் பாணியைதான் ஷோபா சக்தி கடைப்பிடிக்கிறார் எனினும், இதனாலயே நேசக்குமாரனின் பாத்திரம் பிளாஸ்டிக் வார்ப்பு போல் எந்த தாக்கத்தையும் நம்மிடையே ஏற்படுத்தாது விழுகிறது.




மனிதமனதின் இருண்மையை சொல்வது சரி. ஆனால் அந்த இருண்மையின் ஊடாக நாவலாசிரியன் சென்றடையும் இடம் எது என்பது முக்கியம். அப்படி அந்த பயணம் அமையவில்லையெனில் இது வெறும் சம்பவங்களின் தொகுப்பாக, இப்படி இவன் எதிர்வினையாற்றினான் என்பதோடு முடியும் ஒரு கதையாக மட்டுமே இருக்கும். அதற்கு மேல் இந்த நாவல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளபட எந்த தரிசனமும் இதில் இல்லை. இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு, கண்ணெதிரே நடக்கும் கொலைகள், செய்யும் துரோகங்கள், பல்வேறு ரத்தகறை படிந்த சம்பவங்கள் வழியே பயணிக்கும் ஒருவன் சென்றடையும் இடம், அடையும் தரிசனம் என்று ஒன்று இருக்குமில்லையா? அப்படி எதுவும் இதில் இல்லை. இதுவே இந்த நாவல் இலக்கிய ரீதியாக தன்னை நிறுவிகொள்ளாமல் தோற்கும் இடம். எல்லாவற்றுக்கும் மேல் அவன் பக்கிரிக்கு செய்யும் துரோகம், நிறமிக்கு இழைக்கும் படுபாதகம் போன்றவை வலிந்து திணிக்கபடும் பாவனையான துரோகங்களே. அதில் எந்த உண்மையுமில்லை. நிறமியின் பகுதி வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்க்காக எழுதப்பட்ட ஒன்றாக துருத்திக் கொண்டு நிற்கிறது.  ஃப்க்கிங் வெபன்ஸ் என்று துப்பாக்கி முனையை சலிப்புடன் தள்ளும் பக்கிரியின் கதாபாத்திரத்துக்கு செய்த நியாயத்தின் ஒரு பகுதியை கூட நாவலின் முக்கிய பாத்திரத்துக்கு செய்யாததால், உண்மைதன்மையின்றி படைப்பு தள்ளாடுகிறது.

ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக, தனது கூர்மையான பகடிகள் மூலம், வரலாற்று அபத்தங்களை தனது தனித்துவ நடையில் எழுதி ஈர்க்கும் ஷோபா சக்தி, ஒரு நாவலாசிரியனாக இந்த நாவலில் செல்லும் தூரம் குறைவே.

Tuesday, February 2, 2016

விஷ்ணுபுரம் 2015 விருது விழா - தேவதச்சன் கலந்துரையாடல் அமர்வு - 1

பொதுவாக விஷ்ணுபுரம் விருது விழா சந்திப்புகளுக்கு சனியன்று அதிகாலையிலே சென்று விடுவது எனது வழக்கம். இந்த முறை சென்னையிலிருந்து கிளம்பியதால் நண்பர்களுடன் டெம்போ டிராவலரில் ஒன்றாக செல்ல முடிவெடுத்தேன். சென்னையிலிருந்து கிளம்பிய வேனில் நண்பர்கள் ராஜகோபாலன்(ஜாஜா), தனா, காளி, அறிவழகன், அருண் ஆனந்த், கவர்னர் சீனு, சுதா மேடம், ஓவியர் சண்முகவேல், ரகுராம் சகிதம் வெள்ளி இரவு பயணத்தை தொடங்கினோம். பயண வழியெல்லாம் நண்பர்களுடன் விவாதிக்க முடிந்தது என்றாலும், சாலைவழி பயணத்தில் சில அசெளகரியங்கள் இருக்கதான் செய்தது. அடுத்த முறை கவனத்துடன் ரயிலில் முன்பதிவு செய்துவிட வேண்டும் என்று நண்பர்கள் பேசிக்கொண்டோம். பவானி சென்றவுடன் அங்குள்ள தனது வீட்டிற்க்கு சென்று சிரமபரிகாரம் செய்துகொண்டு கோவை செல்லலாம் என்றார் ரகு. அதன்படி தொடர்ந்து கைப்பேசியில் தனது தந்தைக்கு இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்தபடியே வந்தார். ஆனால், பவானி வந்தவுடன் தனது வீட்டுக்கு செல்ல எந்த சாலையில் செல்லவேண்டும் என்பதை மறந்துவிட்டார். சரி அடுத்த முறை செல்லலாம் என்று முடிவெடுத்து பயணத்தை தொடர்ந்தோம். நண்பர்கள் அனைவரும் அங்கேயே காத்திருங்கள். காளிங்கராயன் வாய்க்காலில் குளித்த பிறகு செல்லலாம் என்றார் விஜயராகவன்.



காளிங்கராயன் வாய்க்காலில் குளிக்கலாம் என்று சொன்னதும் நண்பர்கள் அனைவரும் குதூகலத்துடன் வாய்க்காலை அடைந்தோம். அங்கு சென்று பார்த்தால், பாலத்தை தட்டியபடி தண்ணீர் ஓடியது.. சேலம் பிரசாத், சிவா கிருஷ்ணமூர்த்தி உடன் விஜயராகவனும் அங்கு வந்து சேர்ந்தனர். 12 அடிக்கும் மேல் ஆழம், நீச்சல் நன்கு தெரிந்தால் மட்டுமே குளிக்கலாம் என்று விஜயராகவன் சொன்னதும், தண்ணீர் அவ்வளோ சுத்தமாக இல்லையே என்று பதுங்கினார்கள் வெண்முரசர்கள்.

பின்பு நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி எங்களது வேனில் ஏறிக்கொள்ள, அவருடன் பேசியபடியே அனைவரும் கோவைக்கு சென்று திருமண மண்டபத்திலேயே குளித்து தயாரானோம். விவாதம் தொடங்கியிருந்தது. வெண்முரசு பற்றிய விவாதத்தில் ஜெயமோகன் தருமனின் சூதாட்டம் குறித்து கூறிக் கொண்டிருந்தார். பிறகு, தேவதச்சன் கவிதைகள் குறித்த முதல் அமர்வு. சுநீல் கிருஷ்ணன், தேவதச்சன் கவிதைகள் குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்து அமர்வை ஆரம்பித்து வைத்தார்.  பொதுவாக நவீன கவிதைகளில் காண கிடைக்கும் இருண்மை, எதிர்மறைத்தன்மை பெரும்பாலான தேவதச்சன் கவிதைகளில் இல்லையென்றார். தருணங்களை, குழந்தைமையுடன் அணுகி சட்டென்று வேறோரு தளத்துக்கு செல்வதாக தேவதச்சன் கவிதைகள் உள்ளன என்பதற்க்கு உதாரணமாக ஜெல்லி மீன் கவிதையையும், பலூன் கவிதையையும் சுட்டிககாட்டினார் சுநீல். குறிப்பாக மெல்ல மெல்ல நானும் பலூன் ஆனேன் என்ற வரி தரும் அனுபவத்தை விளக்கினார்.



பதிலாக, தேவதச்சன் நவீன கவிதையின் காலக்கட்டத்தை பற்றி விளக்கினார். ஐரோப்பிய புரட்சிக்கு பின் ஏற்பட்ட சோர்வு நிலை காரணமாக நவீன கவிதைகள் இருண்மையையும், அர்த்தமின்மையையும் பேசுவதாக அமைந்தன. டி.எஸ். எலியட் World is a waste land என்று எழுதியதெல்லாம் அதன் பின்னணியிலேயே. ஆனால் அதே காலக்கட்டத்தில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசியல் அதிகாரத்தையும், பொருளாதார மேம்பாட்டையும் அடைந்தன. அது ஒருவித உற்சாகத்தையே தனக்கு கொடுத்தது. பாரதியின் மொத்த கவிதைகளுக்கும் இந்தியா என்கிற மிகப்பெரிய பின்புலம் இருந்தது. கம்பனுக்கோ, வைணவம் என்கிற பின்புலம். ஆனால் நவீன கவிதைகளுக்கு இப்படி ஒரு பொது பின்புலம் கிடையாது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பின்புலத்தை கொண்டு எழுந்தது. தனிமனித வாதமும், அரசியல் ஜனநாயகமும் பின்புலமாக இருந்தது. பாரதியின் மொழியிலிருந்து, பேசுப்பொருளிலிருந்து மேலேழும்பி வரவேண்டிய தேவை நவீன கவிதைகளுக்கு இருந்தது. ஆனால் பொதுவாக நவீன கவிதைகள் குறித்து நா. வானமாமலை போன்ற மார்க்சியர்கள் எதிர்மறையான விமர்சனத்தைதான் முன்வைத்தனர். ஐடியலிசம் இல்லாத நவீன கவிதைகள், கோவேறு கழுதைகள் என்று கிண்டல் அடித்தனர். தானும் அத்தகைய கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்று விளக்கினார் தேவதச்சன்.

தேவதேவன், தருணங்களை பெரிதாக்குவதன் மூலம் அதன் இருத்தலை பெரிதாக்குகிறார். நீங்கள் தருணங்களை, தத்துவதளத்துக்கு நகர்த்தி செல்வதன்மூலம் ஒரு அனுபவத்தை அளிக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் வாசகனை Enlight செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார் நண்பர் ரமேஷ். தருணங்களை இரண்டு வகையில் எதிர்கொள்ளலாம். ஒன்று, தருணங்களை அரவணைப்பது (Embrace). மற்றொன்று  தருணங்களை கேள்விக்குள்ளாக்குவது (Encounter) . தேவதேவன் தருணங்களை அரவணைக்கிறார். சாதாரணம், அசாதாரணத்துடன் பின்னி பினைந்துள்ளது. சாதாரணமாக படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூம் சென்று மீள்வது அன்றாட நிகழ்ச்சி. ஆனால் பாத்ரூம் சென்று மீண்டும் திரும்பி வர முயற்சிக்கையில் கதவின் தாழ்ப்பாளை திறக்கமுடியவில்லை என்றால் அது அசாதாரணம் ஆகிறது. நாற்காலி என்பது ரூபம். அதை கவிழ்த்துப் போட்டால் அரூபம். கவிதை, இரண்டையும் கவனிக்கும். கவிதைக்கு கலைத்துப் போடும் தன்மை உன்டு என்று விளக்கினார் தேவதச்சன்.



தொடந்து நவீன கவிதைகளில் இருக்கும் படிமங்கள் குறித்து விவாதம் தொடர்ந்தது. கவிதை கண், காது, மனம் என மூன்று நிலைகளில் அனுபவங்களை அளிக்கிறது. கண்ணுக்கு படிமத்தையும், காதுக்கு சந்தத்தையும், நுண்ணுணர்வையும் அளிப்பதாக இருக்கிறது. தமிழ் மனதுக்கு படிமமும், சந்தமும் ஆழ்நினைவில் இருக்கிறது. தன்னை கவிதை நோக்கி நகர்த்தியது, அதில் உள்ள ஒசை நயமும் நுண்ணுணர்வுமே. எனவே தனது கவிதைகளை இசைதன்மையுடன் உருவாக்குவதாக தெரிவித்தார். ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கான எழுத்து இதழ்களை படித்ததன் மூலம் தனது நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்ட விதத்தை விளக்கினார். ஒரு கவிஞனுக்கு உலகத்தின் மொத்த அறிவில் பாதியாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே, அவனது கவிதைகள் பல்வேறு அடுக்குகளை கொண்டதாக அமையும் என்றார் தேவதச்சன்.

தனது கவிதைகளில் காலம் பற்றி பேசிய தேவதச்சன், மேஜிக்கல் டைமிங் பற்றி விளக்கினார். உரைநடையில் லீனியர் வகையில் செயல்படும் காலம், கவிதையில் முன்பின் என அலைபாய்வதை மேஜிக்கல் டைமிங் என்று வகைப்படுத்தினார் என்று நினைக்கிறேன். உரைநடை, உரை என எதிலுமே சொல்லமுடியாதவற்றை கவிதையில் சொல்லமுடியும், என்றார். 



பிறகு, நண்பர்கள் தமக்கு பிடித்த கவிதைகளை சொல்லி, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அன்றாட தருணங்களிலிருந்து சட்டென்று மேலேறி, தத்துவத்திற்க்குள் நுழையும் கவிதைகள் குறித்த வியப்பை பலரும் பகிர்ந்து கொண்டார்கள். தேவதச்சனின் கவிதைகளின் இருண்மையின்மை. நேர்மறைதன்மையுடைய கவிதைகள்,குழந்தைகளின் குதூகளிப்பை அவர்களது மொழியிலேயே சொல்லும் விதம், என்று பல கவிதைகள் வாசிக்கப்பட்டு தமது புரிதலை விளக்கினார்கள். ஒவ்வொரு வாசிப்பை பற்றியும் தமது விளக்கத்தை அளித்தார் தேவதச்சன். உபயோகமில்லாத பொருட்களை எதையாவது எப்போதாவது நீ கையால் தொடுகிறாயா என்ற கவிதையை நான் வாசித்தேன். அந்த கவிதையின் முடிவில் மீண்டும் மீண்டும் அன்பின் தோல்வியைக் காணுங்கள் என்ற வரியில் உள்ள எதிர்மறைதன்மையை, இருண்மை எனக்கு அளித்த அனுபவத்தை, பயத்தை சொன்னேன். எனவே தேவதச்சனின் கவிதைகளில் இருண்மையே இல்லை, சமூகசூழல் குறித்த குரல் இல்லை போன்ற விமர்சனங்களை தேவதச்சனின் கவிதைகள் குறித்து கூற இயலாது என்பதை சுநீல் போன்ற நண்பர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

இதற்கு பதிலாக அன்பு பற்றி தேவதச்சன் சொன்னவை இந்த அமர்வில் நான் பெற்ற முக்கிய தரிசனம் என்று நினைக்கிறேன். அன்பு, உலகின் மகத்தான உணர்வாக கருதபடுகிறது. அன்பு செலுத்த அனைவரும் விரும்புகிறார்கள். அன்பு கடவுளுக்கு இணையானதாக கொண்டாடபடுகிறது. ஆனாலும் அன்பை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அன்பு Elusive ஆக இருக்கிறது. பைபிளில் அன்பு செலுத்துவது பற்றி கிறிஸ்து திரும்ப திரும்ப பேசுகிறார். ஆனால் அந்த அன்பு குறித்து லாஜிக்கலாக, ஆய்வு ரீதியாக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. எனவே பைபிளை படிக்கும் போது கிடைக்கும் அகவிரிவு, தரிசனம் வாழ்க்கையை நேராக சந்திக்கும்போது மாறிவிடுகிறது. எனவே அன்புக்கு பின்புலமாக அன்பை விட மகத்தான உணர்வு ஒன்று இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் சிந்தித்து அன்பை விட மகத்தான அந்த ஒன்று சுதந்திரம் என்று கண்டுபிடித்தேன். அன்புக்கும், தன் நிலையில் இருக்ககூடிய சுதந்திரத்துக்கும் முரண்பாடு வருமாயின், சுதந்திரத்தையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விளக்கினார் தேவதச்சன். இதையே அன்பில் தோல்வி என்று அந்த கவிதையில் எழுதினேன் என்றார்.



தமது கவிதைகளின் முன்னோடியாக காளமேகப் புலவரை சொன்னபோது, தேவதச்சன் கவிதைகளின் விதையை புரிந்துகொள்ள முடிந்தது. தனி ஒருவனுக்கு, உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னவர் பாரதி. இப்படி சமூகத்தை மையமாக கொண்டு எழுந்த கோபத்துக்கு நேர் எதிராக, தன்னை மையமாக கொண்டு, தனி மனிதனின் கோபங்களை, ஆசைகளை மையமாக கொண்டு கவிதைகளை புனைந்தவர் காளமேகப் புலவர்.


தேவதச்சனுடன் முதல் அமர்வு விவாதம் தொடர்ந்தது. காளமேக புலவரின் நீட்சியாக ஆண்டாள் கவிராயர் பற்றி சொன்னார் ஜெயமோகன். ஊர் ஊராக சென்று கோவில்களையும், தெய்வங்களையும் பழித்து பாடுவதையே தொழிலாக வைத்திருந்தவர் ஆண்டாள் கவிராயர். ஆண்டாள் கவிராயர் ஒரு ஊருக்கு போகிறார் என்றால், வராமல் இருக்க பரிசு கொடுக்கும் பழக்கமிருந்தது என்று சொன்னபோது அவை குலுங்கியது.

ஒரு கவிதை தத்துவத்தையோ, ஆன்மிகத்தையோ தொடாமல், நேரடியாக ஒரு நிகழ்வையோ, வலியையோ சொல்கிறது. உதாரணத்திற்கு அன்றாட அரசியல் சூழ்நிலையை மட்டும் சொல்லி நின்றுவிடுகிறது. இந்த வகையான கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ரமேஷ். கவிதைகளை நான்கு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆசுகவி. இவ்வகை கவிதைகளை யார் எழுதினால் என்பதே தெரியாமல் சமூகத்திலிருந்து எழுந்து வர கூடியவை. உதாரணம் ஒப்பாரி, தாலாட்டு போன்றவை. இரண்டாவது வகை வரகவி. இவை அன்றாட அரசியலையோ, சமூக சூழ்நிலையையோ சொல்லி செல்வது. மூன்றாவது வகை கவிதைகள், மரகதகவி. சினிமா பாடல்கள் இவ்வகை சார்ந்தவை.நான்கவது வகை வித்தார கவி(Scholarly poets). நாங்கள் வித்தார கவி வகையை சார்ந்த கவிதைகளை எழுதுபவர்கள். நான்கு வகைக்குமே சமூகத்தில் முக்கியத்துவம் இருக்கிறது. வித்தார கவிதையின் அளவுகோலை வைத்து வரகவி கவிதைகளை மதிப்பிடுவது தவறு என்று சொன்னார் தேவதச்சன். பொதுவாக பேச்சில் தேவதச்சன், கவிதைகளையும், பாட்டு என்றுதான் குறிப்பிடுகிறார்.

தேவதச்சன் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து விவாதம் தொடர்ந்தது.

எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

என்ற கவிதையில், யாருக்கும் தெரியவில்லை என்று முடிக்காமல் எல்லோருக்கும் தெரியவில்லை என்று முடித்திருக்கும் வார்த்தை பிரயோகம் குறித்து கேட்டேன். தனது கவிதைக்கான வார்த்தைகளை சாலையோரங்களில் செல்லும் கீரை விற்கும் பெண், சந்தையில் நிற்கும் மனிதர்கள் என்று சாமான்யர்களின் பேசும் மொழியில் இருந்தே எடுப்பதாக சொன்னார் தேவதச்சன். அவர்களது பேச்சில் இருக்கும் ஓசை நயத்தை தான் கையாளுவதாக சொன்னார்.

கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
அழகிய இளம்பெண் துறவியைப் போல
இருந்த அது
அல்லும் சில்லுமாய்
உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
சுத்தம் பண்ணுகையில்
விரல் கீறி
குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
கிளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி

தேவதச்சனின் கவிதையில் இடம்பெறும் கிளிங், ஹைய் ஜாலி போன்ற வார்த்தைகள் குறித்து நண்பர் கிருஷ்ணன் தனது அவதானிப்பை முன்வைத்தார். சைக்கிள்கள் அதிகம் நிறைந்த ஊர் கோவில்பட்டி. சனநெருக்கடி, ஓசைகளின் இடையே வாழும் தேவதச்சனை, இந்த வார்த்தைகள் அதிகம் ஈர்த்துள்ளன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இன்னும் தொலைந்துபோய்விடாத கோவில்பட்டியின் நிலத்தில் இருந்தே ஹைய் ஜக்கா போன்ற வார்த்தைகளை கையாளுகிறார் தேவதச்சன் என்றார் கிருஷ்ணன்.


மேலும் தேவதச்சன் தனது கவிதைகளில் பயன்படுத்தும் நோயா மலர், கைக் பறவை போன்ற படிமங்களை பற்றி கேட்டார் கிருஷ்ணன். ஒரு நிகழ்வுடன், நூற்றுக்கணக்கான ஐடியாக்கள் மோதும்போது ஏற்படுவதே படிமம். படிமங்கள் உற்பத்தி ஆவது நனவிலியில்தான். கைக் பறவை என்பது மைனா தான். மைனா பறக்கும்போது கைக் என்ற ஓசையுடன் பறக்கும். ஹேம்ஸ் என்னும் காற்று என்பதும் நான் உருவாக்கிய சொற்றொடர்தான். அதற்கென எந்த அர்த்தமுமில்லை என்றார் தேவதச்சன்.

தமிழ் நவீன கவிதையில் தொடர்ந்து கவிஞரின் குரல் ஒலித்துகொண்டே இருக்கிறது. தேவதேவனின் கவிதை தேவதேவன் குரலாக இருக்கிறது, தேவதச்சனின் கவிதையில் தேவதச்சன் தெரிகிறார். அப்படி இல்லாமல், தேவதச்சனின் கவிதையில் ஒரு கூலிதொழிலாளியின் குரல் ஒலிக்காதா? மற்றொரு கதாபாத்திரமாக கவிதையில் மாறுவது என்பது ஏன் தமிழின் நவீன கவிதையில் அவ்வளவாக முயற்சிக்கபடவில்லை? கவிதையில் இருந்து கவிஞன் உதிர்ந்துபோவது என்பதை தேவதச்சன் முயற்சி செய்ததுண்டா ? என்று கேட்டார் ஜெயமோகன். தனது கவிதை என்பது தனது தேடலின் ஒரு உபகரணம்தான். என்னுடைய கவிதைகள் அனைத்துமே ஆட்டோபயகிராபிக்கல் தன்மைவாய்ந்தது என்பதால் அப்படி நான் எதுவும் எழுதவில்லை. ஒருவேளை இனி முயற்சிக்கலாம் என்று பதிலளித்தார் தேவதச்சன்.


முதல் கவிதை படைப்பு மற்றும் அங்கீகாரம் பற்றி கேள்வி வந்தபோது, “முதன்முதலில் நான் ஒரு ரெபல் போலதான் கவிதையுலகில் வந்தேன். அந்த காலக்கட்டத்தில் நடை என்று ஒரு பத்திரிக்கை வந்தது. அதன் அட்டையில் உங்களது படைப்புகளை யார் படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடம் எடுத்துச் செல்லும் பத்திரிக்கை என்று ஒரு வரி இருந்தது. அதாவது, கண்ணதாசன், வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் படிக்கும் பத்திரிக்கை என்ற அர்த்தத்தில். அவர்கள் யார், என்னுடைய கவிதையை படிப்பதற்க்கு என்று என்னுடைய கவிதையை அனுப்பவேயில்லை. பிறகு கசடதபற பத்திரிக்கைக்கு என்னுடைய ஒரு கவிதையை பெயர்போடாமல் அனுப்பிவைத்தேன். அது மூன்று மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவே முதலில் வந்த படைப்பு” என்றார் தேவதச்சன்.

சுந்தர ராமசாமிக்கும் தனக்குமான உறவு பற்றி தேவதச்சன் விவரித்தது புதுமையாக இருந்தது. நான் அவரை பலமுறை சந்தித்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். முக்கியமான நாவல்கள் பலவற்றை அவர் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் சில நேரங்களில் யோசித்தால் அவரை சந்திக்கவே இல்லையோ என்று தோன்றுகிறது. நான் அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை சந்திக்கவேயில்லையோ என்று நினைக்கிறேன். அவரது உரைநடை குறித்து எனக்கு கடுமையான விமர்சன பார்வை இருந்தது. என்றார்.

புனைவுகளில் கவிதையை பயன்படுத்துவது பற்றி எதிர்மறையான கருத்தை தெரிவித்தார் தேவதச்சன். ஒரு நாவல் அதற்குண்டான சாத்தியங்களை கொண்டே அதன் உச்சங்களை தாண்டி வரவேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த ஜெயமோகன், தேவதச்சன் சொல்வது நவீன நாவல்களை மனதில் கொண்டு. ஆனால், விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற கிளாசிக் ஆக்கங்களுக்கு அந்த பதில் பொருந்தாது. நாவலுக்குள் எழும் கனவை, உச்சத்தை கவிதை கொண்டு சொல்லிசெல்வது காவியங்களுக்கு உண்டான மரபுதான் என்றார்.



இப்படியாக தேவதச்சனுடனான முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. தேவதச்சன் கவிதைகள் மட்டுமல்ல, தேவதச்சனிடம் பேசிக்கொண்டிருப்பதும் இனிமையான அனுபவமே. தனது தாளலயத்தில் லயித்து, கேட்கும் கேள்விகளை தலையை ஆட்டியபடி உள்வாங்கி, சிறிது நேரமெடுத்து, பிறகு பதில் சொல்கிறார். ஒரு கனிந்த நல்லாசிரியனிடம் கற்றுக் கொள்கிற அனுபவத்தை தந்தது முதல் அமர்வு.  

Tuesday, January 26, 2016

தீண்டிச் செல்லும் விரல்கள்

தோக்கியோ தமிழர்களின் 25 வது ஆண்டு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக ஜப்பானுக்கு வந்திறங்கிய உடன், இயக்குநர் மிஷ்கின், தான் பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலை கொடுத்தார். எதிர்பார்த்தது போலவே இரண்டு விஷயங்கள். குராசவாவின் கல்லறை முதலிடத்தில் இருந்தது. வழக்கமாக வரும் விருந்தினர்கள் பார்க்கவிரும்பும் எந்த இடமும் அந்த பட்டியலில் இல்லை.

நேற்று மாலை (25-ஜனவரி) மூன்று மணி அளவில் தோக்கியோவிலிருந்து அகிரா குராசவாவின் கல்லறை அமைந்திருக்கும் காமகுராவை நோக்கி காரில் பயணித்தோம். காமகுரா இன்று கடலோரத்தில்  அமைந்திருக்கும் ஒரு அழகிய சிற்றூர். ஆனால் 1192ல் மினாமோத்தோ யோரிதோமோ (Minamoto Yoritomo) ஜப்பானை ஆண்டபோது காமகுராதான் தலைநகர்.

இங்கு குளிர்காலமாகையால், சீக்கிரமே இருட்டிவிடும். நாம் அங்கு செல்லும்போது வெளிச்சமிருக்குமா? என்று கேட்டபடியே இருந்தார் மிஷ்கின். அந்த பதட்டமும் பரவசமும் கலந்த உணர்வுநிலை எங்களையும் தொற்றிக் கொள்ள, கார் அதிவேகத்தில் விரைந்தது. காமகுராவை அடைந்தபோது மாலை சூரியனின் பொன்னொளி மலைகளில் ஒரு பக்கம் ஒளிர, ரம்மியமான சூழ்நிலையில், அகிரா குராசவாவின் கல்லறை அமைந்திருக்கும் அன்யோ இன் புத்த கோவிலை சென்றடைந்தோம். 




அன்யோ-இன் (An’yo-in) கோவில், புத்தமதத்தின் ஒரு பிரிவான ஜோடோ புத்தித்தை (Jodo – Shu) சார்ந்தது. ஜோடோ சூ பிரிவை தோற்றுவித்தவர் ஹோனென் (Honen, 1133 – 1212). தனது ஒன்பதாவது வயதில், துறவியான ஹோனென், அப்போதைய நடைமுறையில் இருந்து விலகி, பாலியல் தொழிலாளிகள், மீனவர்கள் என அனைவருக்குமானதாக புத்தமதத்தை ஆக்க முயன்றார். மாதவிலக்கு நாட்களிலும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முயல, மன்னரால் தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அவரது சீடர்கள் சிலபேர் கொல்லப்பட்டனர். பிற்பாடு அவரது சீடர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுதான் ஜோடோ புத்திசம். ஒருவகையில் அயோ-இன் கோவிலுக்குள், குராசவாவின் கல்லறை அமைந்தது பொருத்தமானதுதான்.






கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு கல்லறையாக பெயர்களை படித்தபடி குராசவாவின் கல்லறையை தேடினோம்.  வரிசையாக பல கல்லறைகள் மலையின் ஓரம் அமைந்திருக்க, ஒரு சிறு குன்றை நோக்கி படிக்கட்டுகள் மேலே சென்றன. குன்றின் மேலே ஏறி வலதுபக்கம் நடந்தால், இறுதியாக மலையை நோக்கியபடி உறங்குகிறார் உலக சினிமாவின் சாமுராய் குராசவா.

காஞ்சியை (Kanji) படித்து குராசவாவின் கல்லறை இதுதான் என்று சொல்வதற்காக எனக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த மிஷ்கினை தேடினால், அவரை காணவில்லை. ஓடி சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, கல்லறையை சுத்தம் செய்ய தொடங்கினார். உச்சக்கட்ட பரவசத்துடன் பெயர்பொறிக்கப்பட்டிருந்த கல்லில் தண்ணீரை ஊற்றி துடைத்தெடுத்தார். மலைகளின் மேல் படர்ந்திருந்த பூக்களை பறித்து வந்து வரிசையாக அடுக்கினார். இருகைகளையும் விரித்தபடி காற்றில் குராசவாவை அனைத்து கொண்டார். ஓ மை மாஸ்டர் என்று அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தன. தனது ஆசிரியனை, உலக அன்பை எல்லாம் கொட்டி தனது தேவதையை நேசிக்கும் ஒரு காதலனை போல நேசிப்பதை பார்த்து நெகிழ்ந்துப் போய் நின்றேன்.













அவர் மனதை புரிந்துகொண்ட நண்பர் தியாககுறிஞ்சி, எங்கேயோ ஓடிசென்று, பூங்கொத்துகளுடன், ஒரு பாட்டில் ஷாக்கேயை கொண்டு வந்தார். அவற்றை தனது மூதாதையருக்கு படைக்கும் ஒரு பேரனைப் போல் பயபக்தியுடன் குராசாவின் காலடியில் வைத்தார். கண்களிலிருந்து நீர் வழிந்தபடி இருந்தது. என்னுடைய ஜப்பான் புனித யாத்திரை நிறைவடைந்தது என்றார். கல்லறையின் மேல் கவிழ்ந்து முத்தங்களை பொழிந்தார். திருக்காளத்தி காட்டில், கண்ணப்ப நாயனார், சிவனை எப்படி  வழிபட்டிருப்பார் என்பது காட்சிகளாக அந்த காமகுரா மலையோரம் வந்துபோனது.








ஏறக்குறைய அதே பித்தநிலைக்கு நானும் வந்திருந்தேன். வாழ்க்கை முழுவதும் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு தரிசனத்தை எனக்கு வழங்கியபடியே இருக்கும் காவியங்களை தந்த குராசாவா அங்கு நேரில் நிற்பதுபோன்ற சிலிர்ப்பு என் முதுகெலும்பில் ஊடுருவியது. கல்லறையை முத்தமிடுகையில் கதறி அழுதேன். ஐ அண்டர்ஸ்டான்ட் யூ செந்தில் என்ற மிஷ்கினை கட்டி தழுவிக் கொண்டேன். கொல்லன் தெருவில் ஊசி விற்கும் ஒரு பித்தனைப் போல, மிஷ்கினிடம் இகிருவிலிருந்தும், ரெட் பியர்டில் இருந்தும் காட்சிகளை சொல்லிக் கொண்டே இருந்தேன்.




லெட் அஸ் டிரிங்க் என்றார் மிஷ்கின். அங்கேயே ஷாக்கேயை திறந்து குராசாவின் காலடியில் அமர்ந்து குடித்தோம். செவன் சாமூராய் கிளைமேக்ஸ் மியூசிக் வேண்டும் செந்தில் என்றார். யூ டியூபிலிருந்து ஒலிக்கவிட்டேன். வாழ்வின் அற்புதமான ஒரு தருணம்..அந்த தருணத்தை நீட்டியபடியே அமர்ந்திருந்தோம். வாழ்க்கை என்பது, இதைபோல் ஒரு சில அற்புத தருணங்கள் அல்லாமல் வேறு என்ன?.






காமகுராவிற்கு ஒன்றாக வந்த நடிகர் அபிஷேக், நண்பர் தியாக குறிஞ்சி என அனைவரும் அந்த அற்புதத்தை அனுபவித்தனர். அந்த அனுபவத்தை நண்பர்களுக்கும் கடத்த விரும்பிய மிஷ்கின் அங்கிருந்தபடியே தொலைபேசியில் அழைத்தார். வெற்றிமாறன், எஸ்.வி.ராஜதுரை, ஷாஜி, ராகுலன், இயக்குனர் ராம் என அழைத்த அனைவரும் மறுமுனையில் நெகிழ்வதை உணர முடிந்தது. என்னுடைய வாத்தியாரை பார்க்க என்னவிட்டு நீங்கள் மட்டும் சென்று விட்டீர்களே, என்றார் வெற்றிமாறன்.






வெகுநேரமாகிவிட்டதால் பக்கத்தில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர் என்ன நடக்கிறது என்று புரியாமல் மேலே வந்து பார்த்தார். எங்களை தொந்தரவு செய்யவிரும்பாமல் சிரித்தபடி கீழே சென்றுவிட்டார். நன்கு இருட்டிவிட்டதால் செல்லலாம் மிஷ்கின் என்றேன். தனது பர்சிலிருந்து இந்திய நாணயங்களை எடுத்து கல்லறையின் மேல் வைத்தார். தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு பேப்பரை உருவி, கல்லறையில் அமர்ந்து  குருவிற்கான தனது பிரமாணங்களை எழுதினார். செவன் சாமூராயின் தீம் மியூசிக் ஒலிக்க சாமுராய்க்களை போல ஒவ்வொருவராக கீழே இறங்கினோம்.









காரில் ஏறி கொஞ்சநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை வெளியேகொண்டுவர எனக்கு ராஜா வேண்டுமே என்றார். “ஆனந்தராகம் கேட்கும் காலம்” ஒலிக்க தொடங்கியது. மெல்ல தோக்கியோவை நோக்கி கார் விரைய தொடங்க, கமாகுரா கடல் அலைகள் எங்களை நோக்கி வந்து, வந்து திரும்பிகொண்டிருந்தது.


ஶ்ரீபாலாஜி உணவக குழுமத்தின் உரிமையாளர், நண்பர் தியாககுறிஞ்சி. அந்த உணவகத்தில் சமையல் கலைஞராக பணிபுரிபவர் ஆரோக்கியராஜ் அண்ணன். எப்போது சாப்பிட சென்றாலும், சிறிய புன்னகையுடன் தலையசைத்துவிட்டு பணியில் முழுகிவிடுவார். மிஷ்கின் வந்திறங்கிய நாள் முதல் மனிதர், சிரித்துக் கொண்டே இருக்கிறார். நந்தலாலா படத்தில் பாஸ்கர்மணி சுவரை தடவியபடியேதான் நடப்பார். படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை, தொட்டுத்தடவி பூக்களாய் அவர்களை மலரவிட்டு பயணத்தைத் தொடர்வார். மிஷ்கினின் பயணம் தொடர்கிறது