Tuesday, March 17, 2015

பொய்த் தேவு - வினாடிக்கொரு தெய்வம்

வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு விஷயம் பிரதான லட்சியமாய்த் தோன்றி வாழ்வை நிகழ்த்திச் செல்கிறது. அந்த லட்சியத்தை அடைந்த பின்னரும், மனம் அமைதியடைந்து நிலைக் கொள்வதாய் இல்லை. இந்த நொடி அடையவிரும்பும் மகோன்னத லட்சியம், அடுத்த நொடியில் எந்த பொருளுமின்றி உள்ளீடு அற்று, அந்த லட்சியத்தை அடைய விரும்பிய நம்மை கேலி செய்தபடி நிற்கிறது. உண்மையில் இந்த உலகவாழ்க்கைக்கு எந்த பொருளுமிருப்பதாய் தெரியவில்லை. இப்படியான உலகவாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தின் மீதும் ஒற்றைப்படையான பற்றும், வெறியும் கொண்டு அதனை அடையும் முயற்சியில், தமது வாழ்வையே இழப்பவர்கள், இறுதியில் ஏமாற்றத்தையும், வலியையுமே அடைய நேர்கிறது.



அரை ரூபாய் இருந்தால் சாத்தனூர் கடைத் தெருவையே வாங்கலாம். ஐந்து ரூபாய் இருந்தால் கும்பகோணம் கடைத் தெருவையே வாங்கலாம். பத்து ரூபாய் இருந்தால் இந்த உலகையே வாங்கலாம் என்று தனது லட்சியத்தை கண்டுக் கொள்ளும் சிறுவன் சோமு முதலியின் கதைதான், தமிழ் இலக்கியத்தின் மிக சிறந்த விமர்சகர் என்று போற்றப்படும் க.நா.சுப்ரமணியம் அவர்கள்(1912-1988) 1942ல் எழுதிய பொய்த் தேவு நாவலின் கதைக் களம்.

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் என்னும் சிற்றூரில், கருப்பன் என்ற ரவுடிக்கும், வள்ளியமைக்கும் பிறந்த சோமு முதலி, தனது வாழ்க்கையை தானே உருவாக்கி கொள்கிறான். சோழமன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் மணியோசைதான் சோமுவின் முதல் ஞாபகமாக பதிவாகிறது. கருப்பனின் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு அடித்து நொறுக்கபடும் கணத்தில், இந்த உலகம் பற்றிய வியப்பே சோமுவின் மனதில் இருக்கிறது. விவசாயம் செய்யும் குடியானவர்கள், பானை செய்யும் குயவர்கள், பிசாசு ஓட்டுபவர்கள், வாழைப்பழ கடை, பட்டாணி கடை என சாத்தனூரிலேயே பார்த்து தீராத அற்புதங்கள் சோமுவிற்க்கு உண்டு. அந்த அற்புதங்கள் வழியாக உலக அனுபவத்தை கண்டுக் கொள்ளும் சோமுவிற்க்கு பள்ளிகூடம் சென்று படிக்க ஆசை பிறக்கிறது.

தனது அம்மா வேலைப்பார்க்கும் அய்யமார் வீட்டு திண்ணையில் உட்காரவைக்கப்படும் சோமு, தானாகவே நடந்து உள்ளே சென்று, அங்கு கிடக்கும் துணியில் படுத்து தூங்கி,. பிறகு புளியமிளாறால் எழுப்பப்பட்டு தீண்டாமையை கண்டுக் கொள்கிறான். தன்னுடைய தேவை என்ன என்பதில் சோமுவிற்க்கு நாவலின் இறுதி கணம் வரை ஒரு குழப்பமுமிருப்பதில்லை. ஊர் பெரிய மனிதர் ரங்காராவிடம் வேலைக்கு சேரும் சோமு, முதல் நாளே சாயவேட்டி வேண்டும் என்று சொல்லி அதை பெற்றுக் கொள்கிறான். பிறகு தனது அறிவுகூர்மை மற்றும் துணிச்சலினால், தன்னுடைய எஜமானனை, கொள்ளைக்கூட்டத்திடமிருந்து காப்பாற்றும் சோமு, பிரதி உபகாரமாக தன்னுடைய படிப்பாசையை நிறைவேற்றிக் கொள்கிறான்.  

கொஞ்சகொஞ்சமாக தான் பிறந்த மேட்டுத் தெருவின் சகல கீழ்மைகளிலிருந்தும் வெளியேவந்துவிட்டோம் என்று நினைக்கிற பொழுதில், குடியும், பெண் சகவாசமும் சோமுவை பிடித்துக் கொள்கிறது. தனது தந்தை கருப்பனை போலவே குடித்துவிட்டுவந்து மனைவியை அடித்து நொறுக்குகிறான். மனைவி இறந்தபின் பாப்பத்தியம்மாளை சேர்த்துக் கொள்கிறான். பிறகு ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியின் மூலம் தனது லட்சியமான மளிகைகடையை சாத்தனூரில் திறந்து மளிகை மெர்செண்டு சோமு முதலியார் ஆகிறான். அங்கிருந்து தனது அடுத்த லட்சியமான பணத்தை நோக்கி பயணிக்கிறான். செல்லுமிடமெல்லாம் தனது வாக்கு சாதூர்யத்தாலும், வெறித்தனமான உழைப்பாலும் மேன்மேலும் உயர்ந்து கும்பகோணத்தில் மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிறான்.



ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியோ, அளவுகடந்த தானதர்மத்தாலும், பக்தியாலும் சொத்துக்களை இழந்து, மனைவியும் இறந்த பின், தஞ்சை சென்று பாலாம்பாள், கமலாம்பாள் என்னும்  சகோதரிகளிடம் சிக்கி கொள்கிறார். அவரை பற்றி இவ்வாறாக பெருமூச்சுடன் நினைத்து பார்க்கிறார் சோமு முதலியார். “ஏதோ இந்த கணத்தின் தடுமாற்றத்தால், பெண்களிடம் விழுந்து கிடக்கும் சம்பாமூர்த்தியால் எந்த நேரமும் அந்த வலையிலிருந்து மீள முடியும். அப்படி மீள்வதற்க்கான ஆன்ம பலம் அவருடைய பக்தியால் அவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.” உண்மையில் அப்படிதான் ஆகிறது. சம்பாமூர்த்தியை மிட்க செல்லும் சோமு முதலியார் அந்த பெண்களிடம் மாட்டிக் கொள்கிறார். சம்பாமுர்த்தி தூக்கத்திலிருந்து மீண்டவர் போல, மீண்டும் பாண்டுரங்கன் கோஷம் சொல்லி சாத்தனூருக்கு திரும்புகிறார்.

வணிக கூட்டமைப்பிற்க்கு தலைவராகி, நாட்டின் பல சூழ்நிலைகளையும் தமக்கு சாதகமாக்கி பணத்தை குவிக்கிறார் சோமு முதலியார். கும்பகோணத்திலேயே மிகப்பெரிய பங்களாவை கட்டி சாத்தனூரைவிட்டு வெளியேறுகிறார். ஏதேச்சையாக தனது பழைய வாத்தியார் சுப்ரமணிய அய்யரின் மகன் சாமாவை சந்திக்கிறார். இலட்சிய வேகமும், படிப்பும் கொண்ட சாமா, அவரை நிராகரிக்கிறான். அவனை எப்படியாவது தனது பங்களா திறப்புவிழாவிற்க்கு அழைப்பதன்மூலம் அவனது அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறார் சோமு முதலியார். எதை தனது வாழ்வின் லட்சியமாக, வெற்றியாக கொண்டிருக்கிறாரோ, எதை அடைந்துவிட்டோம் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து மகிழ்கிறாரோ, அது சாமா போன்ற ஒருவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற உண்மை சோமு முதலியாரை குடைகிறது. சம்பாமூர்த்தி பாண்டுரங்கனை வழிபட சென்று, அவனது பாதங்களிலேயே உயிர் நீத்த செய்தி வாழ்வின் இன்னொரு கோணத்தை காட்டுகிறது.

தனது வைப்புக்களான பாலாம்பாள், கமலாம்பாள் சகோதரிகளிடம், தனது மகன் நடராஜன் கொஞ்சிகுலாவி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். மேட்டுத் தெரு கருப்பன், தன்னை விடாமல் தொடர்வதை உணர்ந்து கொள்கிறார். சிவன் கோயில் மணியோசை காதுகளில் ஒலிக்க தொடங்குகிறது. வாழ்வின் பொருள் என்னவென்று சோமு முதலியா கண்டுக் கொண்டார். இனி அவருக்கு சலனங்கள் இல்லை.  இறுதியில் சிறைச் சென்று மீண்டு, பண்டாரமாக மாறி சாலையில் இறக்கும் சோமு பண்டாரம் சொல்வதாக வருகிறது இந்த வரிகள். “இந்த உலகம் தோன்றியதில் இருந்து எவ்வளவு வினாடிகள் உண்டோ அவ்வளவு தெய்வங்கள் உண்டு இனி பிறக்கபோகும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு தெய்வமுண்டு”

உண்மைதானே? இந்த வினாடிக்கான தெய்வம் அடுத்த வினாடிக்கு பொருந்துவதில்லை. சென்ற நொடிக்கான தெய்வம் இந்த நொடிக்கு பொய்த் தேவு (பொய்த் தெய்வம்) ஆகிவிடுகிறது., முழுமுதல் தெய்வம் என ஒன்றில்லை. வாழ்க்கை என்பதே சிறிய விஷயங்களால் ஆனதுதானே. இங்கு முழுமுதல் தெய்வம் பொய்த் தேவாக முடிவதற்க்கே சாத்தியம் அதிகம்.

மிக இயல்பான நடையில், மூன்றாம் மனிதர் சோமுவின் வாழ்வை சொல்லிசெல்லும் தொனியில் கதை அமைந்துள்ளது. வாழ்க்கை மீதான தனது தரிசனத்தை, சோமுவின் வாழ்வின் மூலம் சொல்கிறார் க.நா.சு. ஒரு நாவலுக்குண்டான முழுமை இந்த வாழ்க்கை தரிசனத்தால் கூடிவந்துள்ளது. காவிரிக் கரை, அந்தக் கால தஞ்சை மண்ணின் சித்தரிப்புக்கள் என நாவல் சில பக்கங்களிலேயே நம்மை ஈர்த்துக்கொள்கிறது.



கருப்பன் இருக்கும்போதும் அவன் போன பிறகும் வள்ளியம்மையிடம் ஏற்படும் மாற்றங்கள், எந்த உறவுமில்லாது, தனது வாழ்க்கையை சோமுவிற்க்காக அர்ப்பணிக்கும் பாப்பாத்தியம்மாள் சாமாவின் கண்ணோட்டம் போன்றவை போதியளவு விவரிக்கபடவில்லை. நாவல் முழுவதும் சோமு முதலியின் பார்வையிலேயே செல்வதால், மற்ற பாத்திரங்களின் ஆழத்தையும் சோமு வாயிலாகவே நாம் அறிய முடிகிறது.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்த போதிலும், வாழ்வின் மீதான பார்வையினால் காலத்தை வென்று தமிழின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் தன்னை நிறுவிக் கொண்டுள்ளது பொய்த் தேவு.






Tuesday, March 3, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோமா? திராவிட கட்சிகளால் வீழ்ந்தோமா?



திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்கள் போல திராவிடத்தால்தான் நாம் வீழ்ச்சியடைந்து இருக்கிறோம். திராவிடத்தை வீழ்த்திவிட்டால, போதும், தமிழினம் எல்லா புகழையும் அடைந்துவிடும் என்று சிலர் கண்டுபிடித்து, தொடர்ந்து சில வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். சரி, என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று பார்த்தால், திராவிட கட்சிகளின் போதாமைகளை, தவறுகளை, திராவிடத்தின் தவறுகளாக, திரிக்கிறார்கள். பெரியார், தமிழை விடுத்து ஆங்கிலத்தை படியுங்கள் என்று சொன்னார். எனவே, பெரியார் சொன்ன திராவிடம்தான் நமது எதிரி என்று அறிவுக்கு சற்றும் பொருந்தா வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கபடுகின்றன.



முதலில், திராவிடம் என்பது ஒரு கருதுகோள் (concept). திராவிடத்தை முதலில் அறிவித்தவர் பெரியார் அல்ல. திராவிட மொழிகளை ஆராயந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammer of the Dravidian or south Indian Family of languages)  என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் (1814-1892) தான் திராவிட கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர். அதை தொடர்ந்து திராவிட கருத்தாக்கத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவர், அயோத்திதாச பண்டிதர் (1845-1914). ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அயோத்திதாச பண்டிதர், மிகப் பெரிய கல்விபின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா பட்லர் கந்தப்பனால்தான், இன்று நமக்கு திருக்குறள் என்கிற மாபெரும் பொக்கிஷம் திரும்ப கிடைத்தது. ஓலைசுவடிகளில் இருந்த திருக்குறளை, எல்லீஸ்துரையிடம் கொடுத்து நூலாக்கியவர் இவர்.



சரி, கால்டுவெல் முன்வைத்த திராவிட கருத்தாக்கம் என்ன? திராவிட மொழிகளை ஆராயந்த கால்டுவெல் சில முடிவுகளுக்கு வந்தார். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த மொழிகள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், தமிழ்மொழிதான். தமிழ்மொழியிலிருந்தே, மற்ற திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்திருக்க வேண்டும். எனவே திராவிடத்தின் ஆணிவேர் தமிழும் தமிழினமுமே என்பதே கால்டுவெல் முன்வைத்த கருத்தாக்கம்.

தமிழின் தொன்மையையும், சிறப்பையும் இந்த கருத்தாக்கம், உலகறிய செய்வதாலயே அயோத்திதாச பண்டிதரும் இந்த கருத்தை ஏற்று  1885ல் திராவிட பாண்டியன் என்ற இதழை தொடங்குகிறார். இதே காலக்கட்டத்தில் தமிழன் என்றொரு பத்திரிக்கையையும் நடத்துகிறார், அயோத்திதாச பண்டிதர். ஆக, திராவிடன் என்பவன் தமிழன் தான் என்கிற கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறார்.  பிறகு, 1891 ம் ஆண்டு திராவிட மகாஜன சபை என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கி முன்னோடியாக விளங்குபவர் அயோத்திதாச பண்டிதர் தான்.

திராவிட கருத்தாக்கம், கால்டுவெல் காலத்திலேயே, அறிவுலக சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கில் வந்துவிட்டது. திராவிட மகாஜன சபைக்கு பிறகு, 1894லில் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை தொடங்குகிறார், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜான் ரெத்தினம் என்கிற கிருத்துவ துறவி.

இவையெல்லாம் நடந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பின்தான், பெரியார் 1944ல் திராவிட கழகத்தை தோற்றுவிக்கிறார். எனவே பெரியார்தான் திராவிடத்தை புகுத்தினார் என்பது சற்றும் பொருந்தாத ஒன்று. பெரியார் மதிக்கபடவேண்டியது ஒரு புரட்சியாளராகதான். அவர், அன்றைய காலக்கட்டத்தில் எதையெல்லாம் புனிதம் என்று கருதினார்களோ அவையெல்லாவற்றையும் உடைத்தெறிய வேண்டும் என்கிற வேட்கை கொண்ட ஒரு கலககாரர். வரலாற்றில், பெரியாரின் இடம், பெண்ணடிமைத்தனம், சாதி, மதம், மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்துப் போராடிய ஒரு புரட்சிக்காரர் என்பதே. என்னை, ராமசாமி என்று கூப்பிடு, இல்லையென்றால் மயிராண்டி என்று கூப்பிடு என்று சொன்ன ஒரு கலககாரர், எப்படி மொழியை மட்டும் போற்றுவார் என்று எதிர்பார்க்க முடியும்?

ஆக, பெரியாரும், பெரியாருக்கு பின்வந்தவர்களும், திராவிடம் என்ற கருத்தாக்கத்தை எடுத்தாண்டவர்கள் மட்டுமே. அவர்களுடைய பிழைகளுக்கும் குறைகளுக்கும், திராவிடம் என்ற கருத்தாக்கம் எந்த விதத்திலும் காரணமில்லை. அந்த கருத்தாக்கம் ஏன் தேவைபடுகிறது? திராவிடம் இல்லையென்றால், தமிழின் தொன்மையையும், பிறமொழிகளின் தாயாக தமிழ் விளங்குகிறது என்பதையும் உலகுக்கு விளக்க வாய்ப்பில்லை. 

இந்த திராவிட கருத்தாக்கத்தை, மற்ற திராவிட மொழிகள் ஏற்றுக் கொள்ளவில்லையே. நாம் மட்டும் ஏன் அப்படி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்பதே தவறானது. தமது மொழி, தமிழிலிருந்து தோன்றியது என்பதை மற்ற மாநிலகாரர்கள், எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதை அவர்கள் மறைக்கவே முயல்வார்கள். தமிழுக்கு செம்மொழி சிறப்பு என்று சொன்னால் உடனே எங்கள் மொழிக்கும் கொடு என்று சொல்கிற தெலுங்கர்களும், கன்னடர்களும், எப்படி, திராவிடத்தின் மூலமொழி தமிழ் என்பதை ஒத்துக் கொள்வார்கள்?

திராவிட கட்சிகளால் தமிழ் வீழ்ந்திருக்கிறதா? தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், தனித்தமிழ் பெயர்கள் (இதை, பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் இயக்கத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்கள்), தமிழ் பலகைகள், பெயர்களில் இருந்து சாதியை நீக்கியது, இந்தி எதிர்ப்புப்போராட்டம் என ஒரு சில  நல்ல விடயங்களை தவிர, செய்திருக்கவேண்டிய பணிகள் பலவற்றை திராவிட கட்சிகள் செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

1.  தமிழ் வழிகல்வியை உண்மையிலேயே ஊக்கப்படுத்த விரும்பியிருந்தால், அரசு பள்ளிக்கூடங்களை முறையாக கண்காணித்து நடத்தியிருக்கவேண்டும். தரத்துடன் இயங்கியிருந்தால் பெற்றோர்களும் தமது குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்த்திருப்பார்கள். அரசு ஊழியர்கள் தமது குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று ஒரு அறிக்கை போதும். தமிழ்வழிகல்விதானாகவே அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்ந்திருக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் முக்கியம் என கருதியதால், எந்த திராவிட அரசும் இதை செய்யவில்லை.

2.  முறையான தமிழறிஞர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் திராவிட ஆட்சி காலக்கட்டத்தில் தான் புறக்கணிக்கப்பட்டனர். அந்த இடத்தில், வெற்றுமேடைபேச்சாளர்களும், திரைப்பட கவிஞர்களும் வந்து உட்கார்ந்துக் கொண்டதும் இவர்களது ஆட்சியில்தான். உலகதமிழ் மாநாடு என்று ஒன்றை கூட்டி, தமது குடும்ப உறுப்பினர்களை மேடையில் உட்காரவைத்துக் கொண்டு தமிழறிஞர்களை எழுப்பி நிற்கவைத்தனர்.

3. நூலகங்களை இவர்கள் வேட்டையாடிய ஒரு உதாரணம் போதும். தம்முடைய கட்சிகாரர்களை நூலகத்திற்க்கான நூல்கள் தேர்வு குழுவில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள், தமக்கு வேண்டியவர்களின் நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்கு அனுப்புவார்கள். இப்படி, உண்மையான இலக்கியங்களும், தமிழாராய்ச்சி நூல்களும் சென்று சேர வேண்டிய இடங்களிலெல்லாம், வெறும் குப்பைகள், சென்று சேர்ந்தன. நூலக விற்பனைக்காகவே, அந்த துறை பற்றி எதுவுமே தெரியாமல், மருத்துவ நூல்களையும், மாட்டுவாகட நூல்களையும் பதிப்பித்து, காசு பார்த்த கொடுமை எல்லாம் திராவிட ஆட்சியாளர்களின் காலத்தில்தான் நடந்தது. இதனால் மறுபதிப்பே பார்க்காமல் அழிந்து போன நூல்கள் ஏராளம். இன்னமும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பதிப்பிக்கபடாமலேயே அழிந்துக் கொண்டிருக்கும் தமிழ் சுவடிகள் ஏராளமாக உண்டு, என்பது எவ்வளவு பெரிய கேவலம்?

4.  வழக்காடு மொழியாக தமிழை நிறுவ தவறியது. ஆட்சி மொழியாக்காமல் கோட்டை விட்டது என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவையெல்லாம் திராவிடத்தின் தவறா? திராவிட கட்சிகளின் தவறா? இப்படி திராவிடத்தையும், திராவிடகட்சிகளின் தவறுகளையும் குழப்பிக் கொள்கிற நல்ல காரியத்தைத்தான் ஒரு சில தமிழ்தேசியவாதிகள் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, இவர்களில் சிலர், அப்படி என்னதான் மாற்று அரசியலை முன்வைக்கிறார்கள்? என்று பார்த்தால் திராவிட ஆட்சிகளை மிஞ்சுவதாக இருக்கிறது, இவர்களது கொடுமைகள்.

நூற்றியம்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழித்த, (இவர்களில் பலர் , காவல்துறைக்கு துப்பு சொல்கிறார்கள் என்று வெறும் சந்தேகத்தால் மட்டுமே கொல்லப்பட்ட ஏழை எளிய மக்கள்), இருநூறுக்கும் மேற்ப்பட்ட யானைகளை கொன்று தந்தங்களை கொள்ளையடித்த, சந்தனகடத்தல், ஆட்களை கடத்தி பணம் பெற்றுக் கொண்டு விடுவிப்பது, என சகல குற்றங்களையும் செய்த ஒரு கிரிமினல், இவர்களுக்கு எல்லைசாமி, சீயான் விரப்பன்.

மதுரையில் பல மலைகளை காணாமல் அடித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர், இவர்களுக்கு, அய்யா பி.ஆர்.பி. மணல் கொள்ளைக்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே, ஒரு பக்கம் வைகுண்டராஜனை, உங்களது திருமணத்திற்க்கு அழைத்திருக்கிறீர்களே? என்று கேட்டால், சொந்தம் வேறு, அரசியல் வேறு என்று பக்கா அரசியல் வசனம்.

காமராஜரையும், கக்கனையும், ஜீவானந்தத்தையும் முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டிய மண்ணில், வீரப்பனை  முன்னிறுத்தும் அவலத்தை எங்கு போய் சொல்வது?

   ஒரு பக்கம் சந்தன கடத்தல் கொள்ளையன் வீரப்பன் படத்தையும், மற்றொரு பக்கம் தம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடிய போராளி பிரபாகரன் படத்தையும் போட்டு பேனர் அடிக்கும் முட்டாள்தனங்கள்.  




    ஏதுமறியா சிறுவன் பாலச்சந்திரன், கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டான் என்கிற இனபடுகொலைக்கான ஆதாரத்தையே சிதைக்கிற விதத்தில், புலிப்பார்வை திரைப்படம் உள்ளதே என்று கேட்டால், படம் எடுத்தவர் ,பெருந்தமிழராக்கும் என்று பதில். 



      இதையெல்லாம் மாற்று அரசியல் என்று நம்பி ஏமார்ந்த, திராவிடத்துக்கும் திராவிட கட்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாத, வரலாறு பற்றி எந்த புரிந்துணர்வும் இல்லாத இளைஞர்களை விட்டு சமூக வலைத்தளங்களில் திராவிடத்தை சராமாரியாகத் திட்டினால் நாம் நம்புகிற புரட்சி வந்துவிடும் என்று சொல்லி, சகோதரச்சண்டையை அரங்கேற்றி, தன்படைவெட்டிசாதலை நிகழ்த்திக் கொண்டிப்பதுதான், உங்களது மாற்று அரசியலா?


       எப்படியாவது திராவிட கருத்தாக்கத்தை காப்பற்றிவிடவேண்டும் என்று எமக்கு ஒன்றும் நேர்த்திகடன் இல்லை. மக்களுக்கு உதவாது என்றால் எந்த கருத்தாக்கமும் மண்ணோடு மண்ணாகட்டும். ஆனால் அதற்க்கும் முன்னால் திராவிட கருத்தாக்கம் என்றால் என்ன? என்பதை மட்டுமாவது,  பாவம் அந்த இளைஞர்களை தெரிந்துக் கொள்ளச் செய்து பிறகு வாதிட சொல்லுங்கள்.