Wednesday, December 11, 2013

மு.ராமசாமியின் வியாபாரமாயணம்

ஓய்வுப் பெற்ற நாடகத்துறை பேராசிரியர் மு.ராமசாமி அவர்களின் வியாபாரமாயணம் நாடகம், திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரியில் ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த இந்த நாடகத்தில் இரண்டே பேர் தான் நடிகர்கள். மு.ராமசாமியும், கூத்துப்பட்டறையை சேர்ந்த ஆனந்தசாமி இருவரும் தங்களது சிறப்பான உடல்மொழி மற்றும் வசனத்தால் கலக்கி எடுத்து விட்டனர். மைக் கிடையாது. ஆனால் கடைசி பார்வையாளன் வரை குரல் கேட்டது. குப்பைத்தொட்டியில் எடுத்த ஒரு பெட்டி, தொப்பி, கண்ணாடி,என்று எளிமையான அரங்க பொருட்கள். 

வியாபாரமயமாகும் உலகம் எப்படியெல்லாம் தேவைகளை உருவாக்கி தங்களது பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டுகிறது என்பதை அழகான காட்சி மற்றும் வசனங்களால் காட்சிபடுத்தினர். பார்க்க வந்திருந்த மாணவர்கள் யாரும் பாதியில் வெளியே செல்லவில்லை. அரசியல் வசனங்களை புரிந்து கொண்டு ஆங்காங்கே சிரித்தனர் மாணவிகள். 



கடைசியில் நன்றியுரை வழங்கிய கல்லூரி பேராசிரியர்தான், மு.ராமசாமி அவர்கள் பிதாமகன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்று அறிமுகம் செய்ய ஆரம்பிக்க, மு.ராமசாமி இடைமறித்து, தயவு செய்து தன்னை நாடக ஆசிரியர் அல்லது கூத்தாடி என்று அறிமுகபடுத்தினால் போதும் என்று சொன்னார். ஆவேசத்துடன் லட்சியபோக்கை கடைபிடித்து, வாழும் நண்பர்களை காணும்கணந்தோறும் சிலிர்த்துதான் போகிறது.  

கடைசி நேரத்தில் எனக்கு தகவல் தெரிவித்து அழைத்து சென்ற வில்வம், மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி. 

Sunday, December 8, 2013

ஞாநியுடன் கேணி சந்திப்பு


  1. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சென்னை வந்திறங்கிவிட்டு, சென்னை ஈஸ் டூ ஹாட், ஐம் ஸ்டில் இன் ஜெட்லாக் என உதார் விடும் வழக்கமான என்.ஆர்.ஐயின் பதிவல்ல இது. வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம், ஊருக்கு டிக்கெட் போட்டுவிடும், வாய்ப்பில்லை என்றால் வாய்ப்பை உருவாக்கிவிடும் (அட, இரண்டாவது பெண் குழந்தை எல்லாம் இந்த லிஸ்ட்லே சேராதுங்க) ஒரு என்.ஆர்.ஐயின் பதிவுதான் இது. 


    நெடுநாட்களாக ஞாநி அவர்கள் நடத்து...ம் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையிருந்தது. இந்த முறை 10.00 மணிக்கு திருச்சிக்கு டிக்கெட் போட்டுவைத்திருந்த நிலையிலும் கூட்டத்துக்கு எப்படியாவது போய்விடுவது என்று முடிவு செய்து பைக் எடுத்தேன். கலைஞர் கருணாநிதி நகர் எல்லாம் போய் வருடகணக்காகிறது என்பதால், முகவரி கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் அழகிரிசாமி சாலை முனையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் வீட்டு நெம்பர் 39 என்றால், பயசா, புதுசா என்றார்கள். நல்லவேளை பத்திரிக்கையாளர் ஞாநி என்று சொன்னவுடன் சரியாக அடையாளம் காட்டினார்கள். 

    கூட்டம் சிறப்பாக நடந்தது. பத்ரி தனது தொழில் பற்றியும், அதில் தான் கடைபிடிக்கும் நேறிகள் பற்றியும் நேர்மையாக பேசினார். பள்ளிக் குழந்தைகளிடம் படிப்பார்வத்தை தூண்டுவதற்க்காக அவர் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி சொன்னார். பெரும்பாலான பள்ளி குழந்தைகள் அதுவும் எட்டாம் வகுப்பு வரை வந்த மாணவர்கள் கூட தமிழை சரியாக படிக்க முடியாமல் திண்டாடும் அவல நிலையை அவர் கூறிய போது, மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போதைய பொருளாதர நிலையில், கார்ப்பேரஷன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையிலேயே சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும், கடுமையில் ஏழ்மையில் தவிக்கும் குழந்தைகளே. இப்படி அவர்கள் தமிழ் கூட படிக்கமுடியாது திண்டாடினால் அவர்கள் என்ன ஆவார்கள் என்று நினைக்கும் போது, நமது கல்வியாளர்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் கடும் கோபம் எழுகிறது. 

    கூட்டம் முடிந்தவுடன் தி.நகர் வழியாக திரும்பினேன். சென்னையின் எல்லா சாலைகளிலும் ஆட்டோக்கள் சடுகுடு ஆடுவதை காண முடிந்தது. சாலையில் வரும் எந்த வாகனமும் ஒரு பொருட்டே அல்ல என்பது போல், மோதுவது போல் போய் சடாரென்று திருப்புவதில் என்னதான் சுகமோ இவர்களுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஆட்டோ, பாண்டி பஜார் சாலையில் வேகமாக வந்து கட்டடிக்க, சாலையை கடந்து கொண்டிருந்த ஒரு நாற்பது வயது அம்மாவும், ஆறு வயது பெண் குழந்தையும் திக்குமுக்காடினார்கள். எப்போதும் திருப்புவது போல், ஆட்டோகாரர் ஸ்டியரிங்கை திருப்பி விலகினார். ஆனால், குழந்தையின் காலில் பின்சக்கரம் ஏறி விட்டது. வலியில் துடித்து விட்டாள். அந்த ஆட்டோகார தடியன், கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தலையை மட்டும் வெளியே நீட்டி, சின்னகொயந்தையை தூக்கிகினு வராம, நடத்தி கூட்டிகினு போவுது பார் என்று திட்டிவிட்டு சென்றுவிட்டான். அந்தம்மா குற்ற உணர்ச்சியில் தவித்து போய் கண்ணில் நீர் வர வலியால் தவிக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு, நகர்ந்தார். 

    சென்னை சாலைகள் எப்போதும் நடப்பவர்களுக்கான சாலைகள் அல்ல என்றாலும், இந்த முறை இன்னும் மோசமாக அவர்கள் சுரண்டப்பட்டு சாலையின் ஓரங்களில் நடப்பதே ஒரு குற்றம் என்ற வகையில் தள்ளப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. சாலையின் எந்த இடத்திலும்
    இவர்கள் கடப்பதற்க்கான சீப்ரா கிராஸிங் இடங்களை காண முடியவில்லை. ஒரு பக்கம் பிளாட்பர கடைகளும், மற்றொரு பக்கம் ரவுடி ஓட்டுநர்களாலும் சுரண்டப்பட்டு, குற்ற உணர்ச்சியிலேயே மக்களை நடமாட விட்டிருப்பதுதான் நமது அரசாங்கங்களின் சாதனை போலும்.

Tuesday, December 3, 2013

குடை நிழல் தந்த மமதை - தெளிவத்தை ஜோசப்

ஈழ எழுத்தாளர்களில், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரது எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இருவரின் எழுத்துக்களிலும் எனக்கு பிடித்த பொதுவான விஷயம் அங்கதம் தான். அ.முத்துலிங்கம் தொடர்ந்து பல நாடுகளிலும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருக்கிறார். குறிப்பாக ஆப்பிரிக்காவில் பணி புரிந்திருக்கிறார். அந்த வாழ்க்கையில் கண்ட ஏற்றதாழ்வுகள், பார்த்த பலதரப்பட்ட மனிதர்கள், சுகதுக்கங்கள் தந்த பக்குவம், வாழ்வு குறித்து ஒரு எள்ளல் பார்வையை முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதுவே எழுத்திலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த எள்ளல் குதித்தோடி நம்மை கட்டிபோடுகிறது.

ஷோபாசக்தியோ புலிகள் இயக்கத்தில் சில காலம் இருந்தவர். பிறகு சோஷலிச சிந்தனையில் உந்தப்பட்டு இயக்கத்தில் இருந்து விலகி,குடிபெயர்ந்தவர்.போராட்ட வாழ்வில் கண்ட தியாகங்கள், அபத்தங்கள்,பொருளற்ற இறப்புகள், தற்செயல்களே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாக,மாறும் அபத்தம் அவருக்கு வேறுவிதமான பகடியை தந்திருக்கிறது. உதாரணம், "கப்டன்" சிறுகதை. 

இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை இருவருமே ஈழத்தமிழ்ர்கள். ஆனால், 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஸ் அரசாங்கத்தினரால் தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பதற்க்காக  இந்தியாவில் இருந்து அழைத்து செல்லப்பட்டு, 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தால், ஒரே இரவில் நாடற்றவர்களாக மாற்றப்பட்ட மலையக தமிழர்களிடம் இருந்து அவர்கள் வாழ்வை எழுத்தில் வடிக்க கூடிய சொல்லிகொள்ளும்படியான எழத்தாளர்கள்  தோன்றவில்லை என்றே நினைத்திருந்தேன். 



இந்த பின்புலத்தில்தான், இந்த வருட விஷ்ணுபுரம் விருது, தெளிவத்தை ஜோசப் என்ற மலையக தமிழருக்கு வழங்கபடுவதை குழுமம் மூலம் அறிந்து, அவரது குடை நிழல் நாவலை வாசித்தேன். எந்த அரசியல் பின்புலமும இல்லாத ஒரு சாதாரணன், தமிழனாக பிறந்த ஒரே காரணத்தால் சிங்கள் பெரும்பான்மை அரசின் கொடுமைகளுக்கு ஆளாக்கபடுவதை இந்த நாவல் விவரிக்கிறது. எளிய நடையில் ஒரு டைரிகுறிப்பு போல் நேர்கோட்டில் பயணித்து, நமக்கு பயங்கரத்தின் முகத்தை அடையாளம் காட்டுகிறது. பணத்தை ஒரு சிங்கள வீட்டு உரிமையாளனிடம் பறி கொடுத்த காரணத்தால் போலிஸில் புகார் கொடுக்க, அதுவே விணையாக, பயங்கரவாதி என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பில் சித்ரவதைகளுக்கு பிரச்சித்தி பெற்ற நாலாம் மாடிக்கு இழுத்து செல்லபடும் நாயகன், கைது செய்யபடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது நாவல்.

நாம் முன்பு பார்த்தது போல், இந்த நாவலில் எந்த அங்கதத்திற்க்கும் வேலையில்லை. ஒரு பயங்கரத்தை அதன் போக்கில் விவரித்து போவதிலேயே வாசகனுக்கு உணர்த்த வேண்டியதை, செவ்வன செய்து விடுகிறது இந்த நாவல். எந்த முறைமையும் இன்றி யார் வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு, அமைதியான குடும்ப வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு காணாமல் போகடிக்கபடலாம் என்கிற நடைமுறை யதார்த்தம் நாவலில் விவரிக்கபடும்போதுதான் அதன், தீவிரம் உறைக்கிறது.

இந்த நாயகனுக்கு, கொரில்லா, ம் போன்ற நாவல்களில் வரும் நாயகனை போன்று, வாழ்க்கையில் மிக பெரிய கொள்கைகளோ, உரிமை போராட்டங்களோ இல்லை. எந்த அரசியலும் இல்லை. சாதாரண குடும்பஸ்தனாக தனது மகனை ஒரு நல்ல பள்ளி கூடத்தில் படிக்க வைப்பதற்க்காக, ஒரு நல்ல வாடகை வீட்டில் வசிப்பதற்க்காக ஆசைபடுகிறான். பிறந்து வளர்ந்து, முப்பது வருடங்கள் உழைத்த ஒரு பூமியில் இந்த சாதாரண ஆசை கூட அவனுக்கு அவனது இனத்தின் காரணமாக மறுக்கபடுகிறது. 


சரி, நடைமுறை யதார்த்தத்தை சரியாக ஆவணபடுத்துவதில் வெற்றியடையகிறது இந்த நாவல். இது இலக்கியமாக ஆவது எதனால்? நாயகனின் தாய் வாழ்ந்த வாழ்வை விவரிப்பதிலும், அதன் நுண்ணிய சித்தரிப்புகளிலுமே இது இலக்கியமாக மிளிர்கிறது.இரண்டாயிரம் ஏக்கர் தோட்டத்திற்க்கு கங்காணியாக, பணத்தில் புரளும் நாயகனின் தந்தை, வெளவால், காளான் கறியுடன், கள்ளு குடிப்பதில் தொடங்கி, கோட்டு போட்டு கொண்டு சம்பள நாளில் பவனி வருவதை சித்தரிப்பது, கிருஷ்ணா கள்ளுக்கு பாளை கட்டுவது  என நுண்ணிய விவரிப்புகள்.  பாவற்காய் கசப்பில் வளர்ந்த புழு போன்ற உவமைகள், வீட்டு உரிமையாளரின் பேரம் என ஒரு சுவையான கதை சொல்லியாக ஜோசப் மிகவும் கவர்கிறார்.


கள்ளின் போதையில், சுருட்டு பற்ற வைக்க காகிதமில்லாது, சம்பள பணத்தின் நோட்டுகளை ஒவ்வொன்றாக உருவி தீயில் காண்பித்து ,பற்ற வைத்துகொள்கிறார். அதிகாரத்தின் ருசியில், குடை நிழலின் மமதையில், அளவுக்கு மீறி ஆடும் நாயகனின் தந்தை, ஒரு நாள் குடிபோதையில் மனைவியை, வேலைக்காரன் கிருஷ்ணாவுடன் இணைத்து பேசுகிறார். வாழ்க்கை முழுவதும் அடிகளையும் உதைகளையும் எந்த முணுமுணுப்புமின்றி தாங்கி வந்த தாய், பொங்கி எழுகிறாள். இருவருக்குமான உறவு முடிந்ததன் அடையாளமாக, இருவரும் இணைந்து இன்புற்றிருந்த கட்டிலை எரிக்கிறாள். பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.அதிகாரத்தின் நுனியில் ஆடிய, தந்தை வாழ்வில் இறுதியில் அழிந்து இல்லாமலாகிறார். 


பெரும்பான்மை பலத்தில், அதிகார வெறியில், எளியோரை வதைக்கும் இனவெறி அரசியலால், எந்த தவறும் செய்யாத நாயகன், நாலாவது மாடியில் தனது விடிவை எதிர் நோக்கி காத்திருப்பதுடன், நாவல் முடிகிறது. அதிகாரத்தினால் ஆடிய தனது தந்தையின் வாழ்க்கையை, குடைநிழல் தந்த மமதையை, இங்கு அரசின் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதில் நாவல் வெற்றி பெற்றுவிடுகிறது.தெளிவத்தை ஜோசப்பின் மற்ற எழுத்துக்களை படிக்க ஆர்வமாகயிருக்கிறேன்.

Saturday, November 9, 2013

யதார்த்த சினிமாவின் பிரம்மா - மகேந்திரன் - 2

1981ல் சிவசங்கரியின் கதையை மூலமாக கொண்டு மகேந்திரன் இயக்கிய படம், நண்டு. எளிமையான கதை. அதுவே இந்த திரைப்படத்தின் பலவீனமும் கூட.



லக்னோவில் ஒரு ராஜகுடும்பத்தின் வாரிசான ராம்குமார் ஷர்மா, தனது தந்தையின் நடத்தையால் மனம் நொந்து, அவர் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து, சென்னை வருகிறான். அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் சீதாவுடன் காதல் கொண்டு, சீதாவின் அக்கா கணவர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்கிறான்.

வழக்கமான மகேந்திரனின் நாயகர்கள் போலவே, இந்த படத்தின் நாயகனும், அன்பையும் நல்லொழுக்கத்தையும் குணநலன்களாக கொண்டிருக்கிறான். மகேந்திரனுடன் பழகியவர்கள், புரிந்து கொள்வார்கள். மெல்லிய குரலில், அதிராமல் பேசுபவனாக, ஒரு போதும் பதறாதவனாக, நல்லொழுக்கத்தை கடைபிடிப்பவனாக தொடர்ந்து வரும் மகேந்திரனின் கதைநாயகர்கள், ஒரு வகையில் மகேந்திரனை பிரதிபலிப்பவர்கள்தான். எப்போதும் இது மாதிரியான பாத்திரத்துக்கு, சரத்பாபுவை தேர்வு செய்யும் மகேந்திரன், இந்த படத்தில் ஒரு புதுமுக நடிகரை அறிமுகம் செய்கிறார். ஆனால், சரத்பாபுதான் குரல் கொடுக்கிறார். நாயகியாக உதிரிபூக்கள் அஸ்வினி, மிகை நடிப்பில்லாது, கவர்கிறார்.  சென்னை வரும் ராம்குமாருக்கு மயிலாப்பூர் அருகே ஒரு ஸ்டோர் ஹவுஸில் அறை கிடைக்கிறது. சீதாவும் அங்கு தான் வசிக்கிறாள். ஆஸ்த்மாவினால் தொல்லை அனுபவிக்கும் ராம்குமாருக்கு உதவ சீதா அவனது அறைக்கு செல்ல, மற்ற குடித்தனகாரர்கள் தப்பாக பேசுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

குடித்தனகாரர்களாக, மகேந்திரனின் ஆஸ்தான நடிகர்களான, சாமிகண்ணு, செந்தாமரை, குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் வருகிறாகள். இவர்கள் அனைவருமே பாத்திரத்துடன் ஒன்றி இயல்பாக நடிப்பவர்கள். பழைய ராஜ்தூத் வண்டி, ஸ்டார்ட் செய்வது போல குமரிமுத்து சிரிக்க ஆரம்பித்ததும், மூர்த்தி வாயில் பலூன் வெடிக்க ஆரம்பித்ததும் பிறகு, அவர்களுடைய போதாத காலத்தில் தான். 



அன்பே உருவான ராம்குமாரின் சொந்த ஊரை பார்க்க விரும்புகிறாள் சீதா. லக்னோ செல்லும் ராம்குமாரை, கண்டு ஆனந்தத்தில் மிதக்கும் ராம்குமாரின் தாய், பேரனை பிரிய மனமில்லாமல், அவர்களை அங்கேயே தங்கி விடுமாறு கூறுகிறாள். ராம்குமாரின் தந்தையோ திரும்பவும் அவர்களை விரட்டுகிறார்.சென்னை வந்து, குழந்தை பிறக்கிறது. அக்கா கணவனே வளைகாப்பும் செய்விக்கிறான். இந்த பாத்திரபடைப்பின் தன்மை, முதலில் வில்லன் போல் அறிமுகமாகி பிறகு காமெடியன் போல் முடிவடைவது, பொருந்தாது போகிறது.

குழந்தைக்கு பெயர் சூட்டும் நாளில், ஆஸ்துமா அதிகமாகி, மருத்துவரிடம் செல்லும் ராம்குமாருக்கு, புற்றுநோய் என தெரிகிறது. ஊருக்கு கடிதம் எழுதி தெரிவிக்கிறாள் சீதா. ஆனால் ராம்குமாரின் தந்தையோ, அதை மறைத்து செத்து ஒழியட்டும் என சொல்கிறார். ராம்குமார் சென்னையில் இறக்கும் அதே தருணத்தில் ராம்குமாரின் தாயும் இறக்கிறாள். சீதா, குழந்தைக்காக வாழ்வை தொடர்வதாக படம் முடிவடைகிறது.

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும் 

என்ற கவிதை வரிகளுக்கெற்ப, அழகிய சிறிய கவிதை போல் சீதாவும், ராம்குமாரும் தாமாகவே அமைத்து கொண்ட வாழ்க்கை, விதி எனும் மாய அரக்கனால், கருணையில்லாது அழிக்க படுகிறது.

முன்பே கூறியது போல், கதையின் எளிமையால், படம் சுவராஸ்யத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியது. ஆனால், ஒரு இயக்குனராக, திரைகதை ஆசிரியனாக மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் மிளிரத் தான் செய்கிறார். அளவான செறிவான வசனங்கள், நம்பும்படியான பாத்திர படைப்பு, யதார்த்தமான சூழல் என ஒரு நல்ல திரைபடத்திற்க்கான எல்லா இலக்கணங்களுடன் பொருந்தியே இந்த படம் அமைந்தது.

எப்போதும் அனைத்து பாத்திரங்களையும் திறம்பட, யதார்த்தத்தில் இருந்து விலகாது கவிதை போல் படமாக்கும் மகேந்திரன், இந்த படத்தில் ராம்குமாருக்கும் அவரது தந்தைக்குமான உறவை சரியாக சொல்ல தவறியிருப்பார். ராம்குமார் மீது அவ்வளவு கோபம் கொள்ள என்ன காரணம் என்பது புரியாமலே போகிறது. லக்னோ காட்சிகளில், சில இடங்களில் ராம்குமாரின் குடும்பம் தமிழ் பேசுவதும், சில இடங்களில் இந்தி பேசுவதும் மகேந்திரன் கையாண்ட ஒரு உத்தியே என நினைக்கிறேன். கதைசூழல் படி அவர்களுக்கு தமிழ் தெரியாது. எனினும், மக்களுக்கு புரிவதற்காக தமிழ் பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.


ஒரு தமிழ் படத்தில், இரண்டு இந்தி பாடல்களை முழுமையாக வைக்க மகேந்திரனால் வைக்க முடிந்த்து என்றால், கதையின் மீது இருந்த நம்பிக்கையுடன், ராஜாவின் இசை மீது இருந்த நம்பிக்கையுமே காரணம். கைஸே ககூன் என்ற இந்தி பாடல், மொழி புரியவிட்டாலும், இசையால் கட்டிபோடுகிறது. சென்னை காட்சியில், இந்தி பாடலை வைத்த மகேந்திரன், லக்னோவில் காலத்தால் அழிக்க முடியாத பாடலான அள்ளி தந்த வானம் அன்னையல்லவா”  பாடலை காட்சிபடுத்தியிருப்பார்.




மகேந்திரன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அசோக்குமார், வழக்கம் போல காட்சிகளை அழகாக படமாக்கியிருப்பார். இளையராஜாவும் இந்த படத்தை கைவிடவில்லை. இவ்வளவு இருந்தும், பெரிய திருப்பங்களோ, வித்தியாசமான பாத்திரங்களோ இல்லாத ஒரே காரணத்தால், தோல்வியை தழுவியது. எனினும், சக மனிதர்கள் மீதான அன்பையும், பிரதிபலன் கருதாது  உதவும் எளிமையான மனிதர்களையும், அழகாக காட்சிபடுத்தியதன் மூலம், மகேந்திரன் முயற்சிகளில் ஒரு தரமான படமாகவே, இத்திரைப்படம் திகழ்கிறது. 

Sunday, October 27, 2013

வாழ்வின் மீது எழும் ஆசை - அசோகமித்திரனின் தண்ணீர் நாவல்

காலங்காலமாக சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை மையமாக எடுத்துக் கொண்டு நாவல் தொடங்குகிறது. அளவை மட்டும் வைத்து பார்த்தால் இது குறுநாவல் தான். ஆனால், இந்த நாவல் பேசும் விஷயங்கள்,தொடும் மையங்கள் மூலம் தமிழின் மிக சிறந்த படைப்புகளுள் ஒன்றாக தன்னை நிறுத்திக் கொள்கிறது. தண்ணீர் நாவல் 1971ல் அதாவது இன்றிலிருந்து 42 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.



சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும், மத்தியஸ்தர்கள் அல்லது கீழ் நடுத்தர  வர்க்கம் வாழும் சென்னையின் எத்தனையோ தெருக்களில் ஒன்றுதான் கதையின் மையம். மக்கள் ஒரு குடம் தண்ணீர்க்காக வீடு வீடாக அலைகிறார்கள். குடிக்கவே தண்ணீர் இல்லாத போது, குளிப்பது எல்லாம் எப்படி? கைபம்பில் துருவுடன் கலந்து பழுப்பு நிறத்தில் வரும் தண்ணீர்க்கு அடித்து கொள்கிறார்கள். நரகம் போன்ற வாழ்க்கையில் சபிக்கப்பட்டவர்களாக புழுக்களை போல் உழுலுகிறார்கள். ஃபிளஷ் அவுட்டில் போக செய்தால், தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதற்க்காக, குழந்தைகளை தெருவில் மலம் கழிக்க செய்கிறார்கள். இந்த நிலையிலும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முயலுகிறார்கள்.

மந்தையை பிரிந்த வெள்ளாடு ஜமுனா, சினிமா ஆசையில் பாஸ்கர் ராவ் என்பவனை நம்பி வாழ்க்கையை தொலைத்தவள். அவள் தங்கை சாயாவுடன் அந்த தெருவில் ஒரு மாடியில் குடியிருக்கிறாள். கட்டுபாடுகளுடன், கெளரவமாக வாழ முயலும் சாயாவின், கணவனோ மிலிட்டரியில் இருக்கிறான். பாஸ்கர் ராவ் வந்து கூப்பிடும் போதெல்லாம் ஜமுனா, தன்னை மீறி அவனுடன் போகிறாள். குடி, கும்மாளம் என்று அவனுடன் பொழுதை கழிக்கிறாள். பாஸ்கர் ராவ் மட்டுமே ஜமுனாவுக்கு ஒரு பெண், சமூகத்தில் ஒரு மனுஷி என்ற மதிப்பை அளிக்கிறான். சமூகத்தால் ஒதுக்கப்பட்டவளாக, உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவளாக வாழும் ஜமுனாவுக்கு, பாஸ்கர் ராவ் அளிக்கும் சிறிய மதிப்பும், உறவும் வேண்டியதாக இருக்கிறது. பழையபடி திரும்பி வந்து கழிவிரக்கத்தால் அழுகிறாள்.

இதனால், சாயா, அக்காவை பிரிந்து விடுதிக்கு செல்கிறாள். தனிமையால் சாகும் முடிவுக்கு செல்லும் ஜமுனாவுக்கு டீச்சரம்மா ஆறுதல் சொல்கிறாள். டீச்சரம்மா தன் கொடுமையான வாழ்க்கையை சொல்வதன் மூலம் ஜமுனாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறாள். பிறர் மீது கொள்ளும் அக்கறை மூலம், வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படும் என்று சொல்கிறாள். முதல் இரவிலேயே, தன்னுடைய கணவன் ஒரு நித்திய நோயாளி என்பது தெரிய வருகிறது. மனைவியை கட்டி அணைக்க முயன்று, முதல் இரவில், வலிப்பு வந்து துடிக்கும் கணவனை பார்த்தபடி நின்றதை விவரிக்கிறாள் டீச்சரம்மா.

பத்து வயது கூட நிரம்பாத இரு குழந்தைகள், ஒரு குடத்தில் தண்னீரை, தூக்க முடியாமல் தூக்கி கொண்டு செல்கிறார்கள்.
சாயாவிடம் சென்று கெஞ்சி, அவளை திரும்பவும் தனது அறைக்கு கூட்டி வருகிறாள் ஜமுனா. இருவரும் தனது மாமாவுடன் இருக்கும் அம்மாவை பார்க்க செல்கிறார்கள். அவர்களுடைய அம்மாவோ, படுத்த படுக்கையாக ஈர புடவையுடன் கிடக்கிறாள்.

புகுந்த வீட்டுக்கு வந்த நாலு மாதத்தில், இரண்டு படி பயறை ஊற போட்டு அரைக்க சொன்னா, எங்க மாமியா. பஜ்ஜிக்கு யாராவது இரண்டு படி பயறை போடுவாளா? இரண்டு படி பயறையும் நின்னுண்டே அரைச்சேண்டி என்று திரும்ப திரும்ப பிதற்றும் அந்த அம்மாவின் குரல் நமது மனதில் சொல்லவெண்னா துயரத்தை ஏற்படுத்துகிறது.

தெருவில் குடிநீர் குழாயுடன் கலக்கும், சாக்கடை நீரை அடித்து பிடித்து கொண்டு பிடிக்கிறார்கள் மக்கள். மழை நீரை இரவெல்லாம் முழித்திருந்து பாத்திரங்களில் பிடிக்கிறார்கள்.  

அக்காவும் தங்கையும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழலாம் என்று இருக்கையில், பாஸ்கர் ராவ் திரும்பவும் வந்து ஜமுனாவை அழைக்கிறான். தான் மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்லி அவனை விரட்டுகிறாள் ஜமுனா. பொய்தானே என்று கேட்கும் தங்கையிடம் உண்மை என்று சொல்கிறாள். வாழ்க்கை குறித்த புதிய நம்பிக்கையுடன் இருவரும் தெருவில் இறங்கி நடக்கிறார்கள்.

இந்த நாவலில் தண்ணீர் பஞ்சம் என்பது ஒரு குறியீடுதான். வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள், நிராசைகள், மாற்றங்கள், தோல்விகள். இவ்வளவுக்கு பிறகும், வாழ்வின் மீது எழும் ஆசை, ஒரு விசித்திரம் தானே? தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல், காலில் போட்டுக் கொண்டு விழும் நிலையிலும், தனது மடி ஆசாரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் அந்த மூதாட்டியை போல.

சாமனியர்களின் வாழ்க்கையை, தனது கூர்மையான மொழியால், அகழ்ந்து பார்க்கும் அசோகமித்திரன்,  இந்த நாவலில் வாழ்க்கை பற்றிய தனது அங்கத பார்வையையும், நம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கிறார். அசோகமித்திரன் தமிழின் தலை சிறந்த படைப்பாளி என்பதற்க்கு இந்த நாவல் ஒரு சிறந்த உதாரணம்.

நாவலை முடித்தவுடன், ஷவரை திறந்து கொட்டும் நீரை பார்த்தபடி நின்றிருந்தேன்.





Saturday, October 12, 2013

அகிரா குரோசவாவின், செந்தாடி (Red Beard)


உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், திரைமொழியில் உச்சக்கட்ட சாத்தியங்களை காண விரும்பினால், அவர் தொடங்க வேண்டிய இடம், குரோசவாவாகதான் இருக்க முடியும்.

குரோசவாவின் ரோஷோமோன், செவன் சாமூராய் (சிச்சி நின் னோ சாமூராய்), போன்ற திரைப்படங்களை போலவே, அவர் எடுத்த அனைத்து படங்களுமே ஒவ்வொரு வகையிலும் முக்கியமானதே. அப்படி என்னை மிகவும் கவர்ந்த செந்தாடி (Red Beard - 1965) திரைப்படத்தை பற்றியே இந்த கட்டுரை.


குரோசவாவின் கலைக்கு பின்புலம், உலக இலக்கியங்கள் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு. முக்கியமாக ரஷ்ய இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக தாஸ்தோவெஸ்கியின் தாக்கம். குரோசாவா படங்கள் கொண்டாடபடுவதற்க்கு காரணம், மனித வாழ்க்கை பற்றிய ஒரு முழுமை பார்வையை, அவரது படங்கள் முன் வைத்ததே. குரூரமான, விசித்திரமான மனிதர்கள், சுயமைய்ய போக்கு கொண்டவர்கள் அவரது படங்களில் வந்து கொண்டே இருக்கிறார்கள். கூடவே அள்ள அள்ள குறையாத அன்பை தன்னகத்தே கொண்ட மனிதர்களும். இவர்களே நமக்கு வாழ்வு பற்றிய நம்பிக்கை அளிப்பவர்கள். ரோஷோமோன் படத்தில் புத்த பிட்சுக்கு மனிதத்தின் மீது நம்பிக்கை அளிக்கும் அந்த விறகு வெட்டியை போல.


இந்த கட்டுரை, சற்று நீளமான கட்டுரையே. 180 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதையும் சொல்லபட வேண்டியவையே. மேலும், குரோசவாவின் படங்களை, ஆங்கிலத்தில் வரும் சப்டைட்டில் உதவியுடன் பார்ப்பதற்க்கும், ஜப்பானிய மொழியில் அசலை பார்ப்பதற்க்கும் வேறுபாடு இருக்கிறது. சில இடங்களில், மிகுந்த அர்த்தங்களை உள்ளடக்கிய ஜப்பானிய மொழி வசனம், ஆங்கிலத்தில் தட்டையாக விழுகிறது. இவ்வளவு நீண்ட கட்டுரையை மொத்தமாக ஒரு பத்து பேர் முழமையாக படித்தால் ஆச்சர்யம். ஆனால், உலகின் ஒரு மூலையில் இருந்து, இந்த படத்தை தேடி இணையத்திற்க்கு வரும் முகம் தெரியாத ஏதோ ஒரு தோழனுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கலாம் என்பதே, என்னை எழுத வைக்கிறது. 



நாகசாகியில் உள்ள டச்சு கல்லூரியில் மருத்துவம் படித்து விட்டு, நோபொரு யசுமோத்தோ, டோக்யோ அருகே உள்ள ஒரு கிராமத்து மருத்துவமனைக்கு வருகிற இடத்தில்தான் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அந்த மருத்துவமனையில் ஏற்கனவே வேலை பார்த்து வரும் ஒரு இளைஞன் யசுமோத்தோ கண்டவுடன் மகிழ்ச்சியடைந்து அவனை உள்ளே அழைத்து செல்கிறான். யசுமோத்தோ வந்துவிட்டதால், இனி தான் ஊர் போகலாம் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம். அவன் யசுமோத்தோவுக்கு மருத்துவமனையை சுற்றி காண்பிக்கிறான்.  

அந்த மருத்துவமனை, செந்தாடி என சக மருத்துவர்களாலும், நோயாளிகளாலும், அழைக்கபடும் கியோஜோ நிடே என்னும் மருத்துவரால், ஏழைகளுக்காகவும் ஆதரவற்றோருக்காகவும், நடத்தபடுகிறது.   

ஒவ்வொரு அறையிலும், நோயாளிகள் கூட்டம், கூட்டமாக குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் எல்லாம் பரம ஏழைகள். இது மாதிரியான மருத்துவமனையில் பணி புரிந்தால் உயரவே முடியாது என்று அந்த இளைஞன் சொல்கிறான். செந்தாடியோ, தனக்கென பல விதிமுறைகளை உடையவராக இருக்கிறார்.  யசுமோத்தோவின் மருத்துவ குறிப்புகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.

மருத்துவப்படிப்பை முடித்தவுடன், ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிய ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் கவர்னருக்கு மருத்துவராக ஆக வேண்டியவன் நான். என்னுடைய மாமா, கவர்னரின் மருத்துவர். என்னால் இது மாதிரியான நரகத்தில் ஒருபோதும் இருக்க முடியாது என சொல்லி சென்றுவிட நினைக்கிறான் யசுமோத்தோ.  மருத்துவமனையில் விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால், அவர்களாகவே தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள், என்று சீருடை அணிய மறுக்கிறான்.

மெண்டிஸ் என அழைக்கபடும் மர்மமான பெண் நோயாளி, தனியே அடைக்கபட்டிருக்கும் இடத்திற்க்கு செல்கிறான். அவள் ஆண்களுடன் உறவு கொண்டபின், அவர்களை கொன்றுவிடும் விநோதமான நோய்க்கு ஆளாகி இருக்கிறாள். (மெண்டிஸ் எனபடும் பூச்சிவகையில், பெண் பூச்சி, ஆண் இனத்துடன் உறவு கொள்ளும் போது, ஆண் பூச்சியின் தலையை தின்று விடும்) . மிக பெரும் அழகியான மெண்டிஸ், யசுமோத்தோவை கொல்ல முயற்சிக்கும் போது, செந்தாடியால் காப்பாற்றபடுகிறான்.

முதல் பயிற்சியாக, புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணபடுக்கையில் இருக்கும் முதியவர் ரொக்குசுக்கேவுடன் அருகில் இருக்கும்படி யசுமோத்தோவை பணிக்கிறார், செந்தாடி. ரொக்குசுக்கே அங்கு வந்த நாள்முதல் அவரை பார்க்க யாரும் வந்ததில்லை. அவர் ஒரு பெரிய ஓவியராக இருந்தவர். ஆனால், இங்கு வந்த பிறகு யாருடனும் பேசியதில்லை. மிக பெரிய காயங்கள் அவருக்கு இருக்கலாம். மனிதர்கள் இறக்கும் தருவாயில் கூட இருப்பதைவிட பெரிய அனுபவம் வேறில்லை, எனவே நீ அருகில் இரு என்கிறார்.

வலியால் துடிக்கும் ரொக்குசுகேவை பார்க்க முடியாமல், குமட்டுகிறான் யசுமோத்தோ. இந்த நோயை சரி செய்யவே முடியாதா என்று கேட்கிறான். நமது மருத்துவ நுட்பம் முழுமையற்றது. நோயை கண்டுபிடிக்க உதவுமே தவிர, தீர்க்க உதவாது. மேலும், இங்கு நோய்களை மட்டும் சரி செய்வது வீண் வேலை. நோய்க்கு காரணமே, இந்த ஏழ்மைதான். இந்த ஏழ்மை ஒழிந்தால்தான் நோய் ஒழியும், என்று சொல்கிறார் செந்தாடி.


ரொக்குசுகேவின் இறப்புக்கு பிறகு, மூன்று குழந்தைகளுடன் அங்கு வந்து சேர்கிறாள், ரொக்குசுகேவின் மகள். அந்த மூன்று குழந்தைகளும் திண்பண்டம் உள்ள தட்டை பார்த்து கொண்டே அமர்ந்திருக்கிறார்கள். ரொக்குசுகேவின் மர்மம் பற்றி, அவரது மகள் சொல்லும் போதுதான் தெரியவருகிறது. ரொக்குசுகேவின் மனைவிக்கு, அவரது மாணவன் ஒருவனுடன் தொடர்பு ஏற்படுகிறது. பிரிந்து போகிறார் ரொக்குசுகே. தனக்கு நாற்பது வயதானதால், அந்த இளவயது மாணவன் பிரிந்து போய்விடுவான் என்று அஞ்சும் ரொக்குசுகேவின் மனைவி, அவளுடையை மகளுக்கே, அந்த மாணவனை திருமணம் செய்து வைத்து தன்னுடன் வைத்து கொள்கிறாள். இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த பின்னும் தான், தனது கணவனுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்றதை எண்ணி குமட்டுகிறாள் ரொக்குசுகேவின் மகள். இறுதியில் ரொக்குசுகேவிடம் பணம் பெற்று வரும்படி தனது கணவன் துன்புறுத்தியபோது, அவனை கொன்றுவிட்டதாக சொல்கிறாள். அது கொலையில்லை. விபத்துதான்.  நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்கிறார் செந்தாடி. தனது தந்தை, இறக்கும் தருவாயில் கஷ்டப்பட்டரா? என்று அழுதபடி கேட்கிறாள். செந்தாடி, இல்லை, நிம்மதியாக இறந்தார் என்று சொல்கிறார். ஆம், அது அப்படிதான் இருக்க வேண்டும். ஏனெனில், தந்தை தனது வாழ்க்கை முழுவதும் துன்பபட்டவர், என்கிறாள் மகள். உண்மையில், புற்றுநோயால் துடி துடித்து இறந்த ரொக்குசுகேவை நினைவு கூர்கிறான் யசுமோத்தோ. இப்படி வாழ்வின் விசித்திரங்களை விவரித்தபடியே செல்கிறது இத்திரைப்படம்.

கொஞ்ச, கொஞ்சமாக வாழ்க்கை பற்றியும், அந்த ஏழ்மையிலும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பற்றையும், மனித நேயத்தையும் புரிந்து கொள்கிறான் யசுமோத்தோ. தனது ஒவ்வொரு படத்திலும் குரோசவா முன்வைத்தது தூய்மையான மனிதத்தைதான். குரோசாவாவின் கலையை உச்சகட்ட்த்திற்க்கு எடுத்து சென்றதும்,  அந்த மனித நேயம்தான்.

இப்போது மிகவும் நோய்வாய்பட்டிருக்கும் நிலையில் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதித்து மற்ற நோயாளிகளுக்கு உதவி செய்யும் சகாச்சியின் கதை சொல்லபடுகிறது. இப்படி சொல்லபடும் ஒவ்வொரு கதையும், ஒரு அழகான நாவல் போல் புதிர்களையும், இந்த வாழ்வின் தீராத மர்மங்களையும் சொல்லி செல்கிறது. எனவேதான் 180 நிமிடம் ஓடும் இந்த திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும், அலுப்பை தரவில்லை.
மிகுந்த துன்பத்தில் இருக்கும், சகாச்சி, இனி நான் பிழைக்க போவதில்லை எனவே, என்னை எனது வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று சொல்கிறான். யசுமோத்தோவுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கபட்ட பின், ஏற்படும் பூகம்பத்தால், சகாச்சியின் வீட்டு தோட்ட்த்தில் ஒரு எலும்பு கூடு கண்டெடுக்கபடுகிறது. அது தனது மனைவிதான் என்று அதிர வைக்கும் சகாச்சி தனது கதையை சொல்கிறான்.

ஒரு சந்தையில் சகாச்சி தனது மனைவியை சந்திக்கிறான். இருவருக்கும் அழகான காதல் மலர்கிறது. தனக்கு ஏழு உடன்பிறந்தோரும் நோய்பட்டிருக்கும் தந்தையும் இருக்கிறார்கள். தானே ஒரு ஒப்பந்தத்தில் வேலை செய்து வருவதால், திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்கிறாள் காதலி. பனிதுளி போன்ற மனம் படைத்த, சகாச்சி தானே அந்த கடனை எல்லாம் அடைக்கிறேன். நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறான். அதுபடியே திருமணம் நடக்கிறது. இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். திடிரென ஒரு நாள் , சகாச்சி வேலைக்கு சென்றிருக்கும் போது, பூகம்பம் ஏற்பட்டு வீடு இடிந்து விழுகிறது. அங்கு வந்து தனது மனைவியை தேடும் சகாச்சி அவளை காணாமல், அவள் இறந்து விட்டாள் என்று நம்பி மனம் உடைகிறான்.



இரண்டு வருடம் கழித்து, இறந்து விட்டதாக நம்பிய மனைவியை எட்டு மாத கைக்குழந்தையுடன், ஒரு நாள் சந்தையில் சந்திக்கிறான். சகாச்சி, இது உன் குழந்தையா என்று கேட்க, ஆம் என்று சொல்லி அழும் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். என்னுடைய மனைவி, இன்னொருவன் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்த்த போது, கத்தியால் குத்தப்பட்டது போல் உணர்ந்தேன் என்று சொல்கிறான், கதை சொல்லும் சகாச்சி. இருவரும் சந்திக்கும் இந்த இடத்தை, குரோசவா எடுத்திருக்கும் விதம், வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்றாய் இருக்கிறது. சக மனிதர்களை எந்த கட்டுபாடுமின்றி நேசிக்கும் சகாச்சி, இப்போதும் தனது மனைவியிடம் ஒரு கடுஞ்சொல் சொல்பவனாய் இல்லை. தனது மனைவி பிரியும் இடத்தில், இனி சந்திக்க முடியாதா என்று சொல்லி தயங்கி, தயங்கி நிற்கிறான்.

வீட்டுக்கு வந்து ஒரு மூலையில் ஒடுங்கி படுத்து கிடக்கிறான் சகாச்சி. அங்கு திரும்பவும் வருகிறாள் அவனது மனைவி. என்னிடம், உன்னை ஏன் பிரிந்தேன் என்று கேட்க மாட்டயா? என்று கேட்கிறாள். உனக்கு விருப்பமிருந்தால் சொல், என்கிறான் சகாச்சி. சகாச்சியை சந்திக்கும் முன்னரே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பத்திற்க்கு பல உதவிகளை செய்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளும்படி தனது அம்மா வற்புறுத்தினாள் என்றும் சொல்கிறாள். அந்த நபர் மீது எனக்கு விருப்புமில்லை, வெறுப்புமில்லை. அந்த சமயத்தில் தான் சகாச்சியை சந்தித்து காதல்கொண்டு திருமணம் செய்து கொண்டதாய் சொல்கிறாள்.




திருமணத்திற்க்கு பின், திகட்ட திகட்ட இன்பத்தை கொண்டதாய் வாழ்க்கை இருந்தது. எந்த அளவுக்கு மகிழ்ச்சிகரமாய் இருந்தது என்றால், நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று பயப்படும் அளவுக்கு. நான் அந்த நபரை ஏமாற்றி வந்தவள். நான் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க நியாயமில்லை என கருதி, அவ்வபோது தனிமையில் பயந்து வந்தேன் என்று சொல்கிறாள். அந்த சமயத்தில்தான் நில நடுக்கம் ஏற்பட்டது. இது இறைவன் எனக்கு கொடுத்த தண்டனை என கருதி, உன்னை பிரிந்து எனக்கு நானே தண்டனை கொடுத்து கொண்டு என்னுடைய பழைய நபரை தேடி போய் திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்கிறாள். திருமணத்திற்க்கு பின் அவள் மகிழ்ச்சியாய் இருந்தாய் சொல்கிறாள். ஆனால் உன்னை சந்தையில் திரும்ப பார்த்தவுடன், என்னுடைய கணவன், குழந்தை என அனைவரும் என்னைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்ட்தாய் உணர்கிறேன். உன்னை மட்டுமே நெருக்கமாய நினைக்கிறேன். என்னை இறுக்க தழுவி கொள்ள மாட்டாயா என்கிறாள். சகாச்சி தழுவி கொள்ளும் போது கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டு இறக்கிறாள். அவளை தனது வீட்டிலேயே புதைத்த சகாச்சி, தனது மனைவியின் கணவருக்கும், குழந்தைக்கும், தன்னால் துன்பம் நேர்ந்து விட்டது, எனவே நான் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கருதியே, வேலை பார்த்து வந்ததாக சொல்லி இறக்கிறான்.

விபச்சாரம் நடக்கும் இடத்திற்க்கு சென்று அங்கு துன்பத்தில் உழலும் ஒரு சிறுமியை காப்பற்றி வருகிறார் செந்தாடி. தாயை இழந்த அந்த சிறுமி, பக்கத்து அறையில் விபச்சாரம் நடத்தும், பெண்ணால் கொடுமைக்கு ஆளாகி அடித்து துவைக்கபடுகிறாள். செந்தாடியும், யசுமோத்தோவும் அவளை காப்பற்ற முனையும் போது அங்கிருக்கும் ரவுடிகள் தாக்க முயல்கிறார்கள். தனது தற்காப்பு கலையால், அவர்களை அடித்து வீழ்த்தும் செந்தாடி, அந்த சிறுமியை கூட்டி வந்து யசுமோத்தோவின் முதல் நோயாளியாக அவனிடம் ஒப்படைக்கிறார்.




மிகுந்த மன அழத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும், அந்த சிறுமிக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை போய்விட்டது. சதா சர்வ நேரமும், துணியால் தரையை துடைத்து கொண்டே இருக்கிறாள். அவள் துடைத்தெடுக்க நினைப்பது ச்முதாயத்தின் மீது படிந்து விட்ட அழுக்கையல்லவா? உதவி செய்ய வரும் யசுமோத்தோவை அவமானபடுத்துகிறாள். தொடர்ந்து போராடி அவளை வென்றெடுக்கிறார், செந்தாடி. காய்ச்சலில் படுக்கும் யசுமோத்தோவிற்க்கு பணிவிடை செய்வதன் மூலம், தனக்குள் ஒளிந்திருக்கும் மனித தன்மையை கண்டெடுக்கிறாள் ஒட்டோயா எனபடும் அந்த சிறுமி. அந்த மருத்துவமனையில் பசியின் கொடுமையால், அவ்வபோது வந்து திருடி செல்லும் ஏழு வயது சிறுவனுடன், அவளுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த சிறுவனின் நடிப்பும், முகமும் நம் மனதில் வெகு நாட்கள் தங்கி விடும். தனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் அந்த சிறுவனிடம், நீ திருடுவது உனது வீட்டு நபர்களுக்கு தெரியுமா என்று கேட்கிறாள் ஒட்டோயா. அவர்களுக்கு தெரியும். ஆனால் தெரியாதது போல் முகத்தை வைத்து கொள்வார்கள் என்று அப்பாவியாக சொல்கிறான் அந்த சிறுவன்.

திருட வேண்டாம், நானே உனக்கு இரவு உணவு தருகிறேன் என்று சொல்கிறாள் ஒட்டோயா. சில நாட்கள் கழித்து வரும் அந்த சிறுவன், நாங்கள் அனைவரும் வேறு ஒரு நகரத்திற்க்கு செல்கிறோம். அங்கு பசியே இல்லை. பறவைகள் எந்நேரமும் அங்கு அழகாக பறந்து கொண்டேயிருக்கும். அந்த நகரத்திற்க்கு இன்று இரவே செல்கிறோம். என்று சொல்கிறான்.



அடுத்த நாள், அந்த வீட்டில் உள்ள அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த சிறுவனை மட்டும் செந்தாடி காப்பாற்றி விடுகிறார். அந்த சிறுவனை கண்டு அழுகிறாள் ஒட்டோயா. ஒட்டோயாவின் கதை மட்டும் தாஸ்தோவெஸ்கியின் நாவல் ஒன்றில் இருந்து குரோசவாவினால் எடுத்தாளப்பட்டது. நான் இன்னும் அந்த நாவலை படிக்கவில்லை.

இவ்வளவு நிகழ்வுகளுக்கு பின், உண்மையான மருத்துவம் என்னவென்பதையும், மனித நேயத்தையும் கண்டு கொள்கிறான் யசுமோத்தோ. தான் அங்கேயே இருக்க போவதாக முடிவெடுக்கிறான்.
இந்த படத்தில் செந்தாடியாக ஆர்பாட்டமில்லாத இயல்பான நடிப்பால் ஈர்ப்பவர், குரோசாவாவின் ஆஸ்தான நடிகர், தொஷிரு மிஃபுனே. ரோஷோமோன் பட்த்தில் கொள்ளையனாகவும், செவன் சாமூராய் பட்த்தில் குடிகார சாமூராய் ஆகவும் நடித்தவர்தான் இவர். இவரும், தகாஷி சிமுராவும் தான் குரோசவாவின் ஆஸ்தான நாயகர்கள். தகாஷி சிமுரா செவன் சாமூராய் பட்த்தில் தலைமை சாமூராய் ஆக வருபவர். ரோஷோமோனில் விறகு வெட்டி.


குரோசவா ரசிகர்கள், நல்ல சினிமாவின் காதலர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள், இந்த படத்தை தவறவே விட கூடாது என பரிந்துரைக்கிறேன்.   

Wednesday, September 18, 2013

தங்க மீன்களும், நொந்த மீன்களும்..

தங்க மீன்கள் திரைப்படம் குறித்து போதுமான விமர்சனங்கள் வந்துவிட்ட நிலையில், எழுத வேண்டாம் என்றே நினத்தேன்.  இந்து பத்திரிக்கையில் தங்க மீன்கள் பார்த்து, தம்மை தாமே நொந்து கொண்ட மீன் ஒன்றின் கட்டுரையை படித்தேன். எழுதியே விட்டேன்.



நடப்புக் கணக்குப் பற்றாகுறை, டாலர் மதிப்புயர்வு போன்ற உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகளால் பீதியடைந்திருக்கும் மக்கள், கவலையை மறக்க நமது திரை மேதைகள் எடுத்து தள்ளும்,  கெக்கே, பிக்கே சிரிப்பு படங்களை பார்க்காமல், தங்க மீன்களை பார்த்து மனதை கெடுத்து கொள்வதே அந்த நொந்த மீனின் கவலையாக தெரிகிறது.

செல்லம்மா, மற்ற குழந்தைகள் போல் இல்லை. மூன்றாவது படிக்கும் வயதில், டபிள்யூக்கும், எம்க்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகின்ற, சிறப்பு கவனம் தேவைபடும் குழந்தை, என படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் நான்கு முறை சொல்லபடுகிறது. பற்றாகுறைக்கு, அந்த குழந்தைக்கு தேவைபடும் கவனிப்பையும், பாசத்தையும் வழங்க முடிகிற காரணத்தினால் தான், உள்ளுரில் பாத்திரங்களுக்கு பாலிஸ் போடும் வேலை செய்து கொண்டிருப்பதாக, நாயகன் படம் ஆரம்பித்த 20 நிமிடத்தில் சொல்லி விடுகிறான். வெளிநாடு போய், கன்சல்டெண்ட் ஆகி, உள்ளுரில் ஒரு வீடு, சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட், என்று வாங்கி குவிக்காமல், பொறுப்பற்று திரிகிறானே இந்த துப்புகெட்ட தந்தை என்று புரிந்து கொள்கிறது, நொந்த மீன்.

கொச்சின் போயாவது, 220 கோடி சம்பாதித்து ஊர் திரும்பி மருத்துவ கல்லூரி ஆரம்பித்தானா என்றால், இல்லை. அங்கேயும் போய் உருப்படாமல், தாடியை பிய்த்து கொண்டு அழுகிறான். கதாநாயகன் என்றால், வெற்றிகரமாக இருக்க வேண்டாமா? படத்தின் ஆரம்பத்தில் லைட்டா ஏமாறலாம்.. எல்லா காசையும் இழக்கலாம். ஆனால் இண்டர்வெலுக்கு பிறகாவது, புத்தி வந்து, கோபத்துடன் நிமிர்ந்து பார்த்து,  பட்டையை கிளப்பவில்லை என்றால் அப்புறம் என்னப்பா ஹிரோ? அப்படி படம் பார்க்கதானே காலங்காலமாக நாம் பழகி இருக்கிறோம்.

ஆம், நாயகன் குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் சக்திக்கு மீறிய சில காரியங்கள் செய்ய விழைகிறான். முட்டாள்தனமாக கதையின் நாயகன் செயல்படவே கூடாது, என்பது எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து வளர்ந்தவர்களின் விதிமுறை. நல்ல திரைப்படத்திற்க்கு இப்படி எதுவுமில்லை. உணர்வுபூர்வமாக ஒரு கதையை நம்பகதன்மையுடன் சொல்ல முடிந்தால் போதுமானது என்ற அடிப்படை கூட தெரியாமல், விமர்சனம் எழுதும் தன்னம்பிக்கை, முன்பு பிரபல பதிவர்களுக்குதான் இருந்தது. இப்போது கொஞ்சம் விரிந்து, பத்திரிக்கை வரை வந்துள்ளது. சபாஷ்..


நாயகன் பாசத்தினால் உந்தபட்டு, முட்டாள்தனமான சில காரியங்கள் செய்கிறான் என்பதற்க்கும், படத்தில் பிரைவேட் பள்ளிகள் மீது வைக்கபடும் நியாயமான விமர்சனத்திற்க்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லபோனால் நாயகனும், முதலில் தனியார் பள்ளியையே நம்புகிறான். ஆனால், குறைந்த சம்பளத்தில், குறைவான  ஆசிரியர்களை கொண்டு, மாணவர்களை ஆட்டு மந்தைகள் போல் சேர்த்து கொள்ளையடிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீதும், எந்த சிறப்பியலப்புக்கும் இடம் தராது, ஒரே மாதிரியான பிராய்லர் கோழிகளை உருவாக்கும் ஆசிரியர்கள் மீதும், இந்த படம் வைக்கும் விமர்சனம் மிகவும் சரியானதே.

மேலும் விமர்சனம் எழுதியவர், புதிதாக எதுவும் சொல்லவும் இல்லை. படத்தில் நாயகனின் தந்தை சொல்லும் டயலாக்குகளை, அப்படியே எழுத்தில் பிரதியெடுத்து படத்தையே ஓட்டுவதற்க்கு எல்லாம் ஒரு தில் வேண்டும்.  ஆம்பிளைன்னா, நாலு இடத்துக்கு போய் சம்பாதிக்கனும். அதான் வீட்டுலே செல்லம்மாவுக்கு ஒரு அம்மா இருக்காளே, நீ வேற எதுக்குடா குட்டி போட்ட பூனை மாதிரி அவ பின்னாடியே அலையுறே? என்று தந்தை கேட்கிறார். அதையே திரும்பவும் எழுதும் முன், இயக்குநர் எதற்க்கு அவ்வாறு காட்சியமைத்தார் என்று கூட யோசிக்க வேண்டாமா?


சரி, நொந்த மீன்களை கரையிலேயே விட்டு, படத்திற்க்கு வருவோம். பழைய தொழில் என்பது ஒரு குறியீடு என்பதையும், ஏன் தொன்ம கருவி என்பதையும் நல்ல ரசிகன் புரிந்துகொள்வான். இந்த படத்தின் ஓட்டத்தில், பல இடங்களில் அழகிய கவிதை போல் காட்சிகள் வந்து முடிகிறது. கல்யாணி, எவிட்டா மிஸ்சை பார்க்க போகும் இடம், மிஸ் கலங்கிய கண்களுடன் வந்து நிற்பதும், அந்த டீச்சரின் கணவன் ஸ்பிக்கர் போன் கேட்பதும், குழந்தை பேசியதை கேட்டபின், உள்ளே வாங்க சார் என்று சொல்வதுமான காட்சிகளில், கோடை கால மாலை பொழுதில் பெய்து ஓய்கின்ற மழையின் ரம்மியம்.  

படத்தின் குறை என்றால், கற்றது தமிழ் பிரபாகரின் உடல்மொழி, டயலாக் டெலிவரி, என அந்த சாடை கல்யாணியிடமும் தெரிவதே. கல்யாணியை சில இடங்களில் அடக்கி வாசிக்கவிட்டிருந்தால், படம் பார்க்கும் ரசிகர்கள் கல்யாணியுடன் இன்னும் அதிகமாக ஒன்றியிருப்பார்கள். கல்யாணி லேப்டாப்பை பிடுங்கி அடி வாங்கும் இடங்களில், ஓரிரு துளி கண்ணிரை ரசிகர்களிடம் உருவாக்கியிருந்தால் வெற்றி இன்னும் பெரிதாக இருந்திருக்க கூடும்.  மாறாக அந்த இடத்தில் நாயகனின் முட்டாள்தனம் துறுத்திக் கொண்டு தெரிவது பலவீனம்.   


இன்னைக்கு, அம்மா பூரி செய்றாங்க, நாளைக்கு சாவுறேன் என்று சொல்லும் செல்லம்மாவின் தோழி, பணம் இல்லன்னா, இல்லைன்னு சொல்லி பழகுங்கடா என்று குமுறும் இடம் என பல இடங்களில் விரியும் சிறுகதைகள், அழகாக படத்துடன் இணையும் பின்னனி இசை, மனதை வருடும் லோகேஷன்கள் என  வெகு நிச்சயமாய், தமிழில் இது பாராட்டபட வேண்டிய, கொண்டாடபட வேண்டிய திரைப்படமே.

Saturday, August 3, 2013

குரூரத்தின் எல்லை

காலையில் படித்த இந்த செய்தியால் வெகுவாக பாதிக்கப்பட்டேன்.


அமெரிக்காவின் கிளைவ்லேண்டில், ஏரியல் காஸ்ட்ரோவிற்க்கு ஆயுள் தண்டனையும், கூடவே 1000 வருட கடுங்காவலும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று பெண்களை 2002 வாக்கில் கடத்தி, 12 வருடங்களாக தனது வீட்டின் அடித்தளத்தில் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தான் இவன். நினைத்தபோதெல்லாம் பாலியல் பலாத்காரம், அடி உதை, பட்டினி என்று சித்ரவதை. எண்ணற்ற முறை கர்ப்பம், அதை கலைக்க, வயிற்றில் குத்துவது, தப்பிக்க நினைத்த பெண்ணுக்கு தண்டனை, வார கணக்கில் மோட்டர் சைக்கிள் ஹெல்மெட் அணிந்து அந்த பேஸ்மெண்டில் கிடக்க வேண்டும் என இந்த மிருகம் செய்த கொடூரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்படி இவன் கடத்திய பெண்களின் வயது என்ன தெரியுமா? 14, 16, 20. இந்த உலகத்தையே தமது கழகு பார்வையால் கவனித்து கொண்டிருக்கிறோம் என்று புளங்காகிதம்படும் அமெரிக்காவால் 12 வருடங்களாக, கடத்தப்பட்ட பெண்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் கேலிகூத்தே, இந்த பெண்கள் அனைவரும், தமது வீடுகளில் இருந்து ஒரு சில கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இறுதியாக மே 6 அன்று, இவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து, ஒரு பெண் கதவை உடைத்து வெளியே ஓடுகிறாள். பக்கத்து வீட்டுகாரரிடம் சென்று கதறிய உடன், அவர் போலிஸை அழைத்து, அனைவரையும் மீட்கிறார். 

அந்த பெண்களை காப்பற்றிய பக்கத்து வீட்டுகாரரை, தொலைகாட்சிகள் மொய்க்கின்றன. அந்த தோழன் சொல்கிறான், என்னை போன்ற ஒரு கறுப்பு இன நபரிடம், ஒரு வெள்ளை இளம்பெண் ஓடி வந்து, கட்டிகொண்டு கதறுகிறாள், என்றால் ஒன்று அவள் யாருமற்ற அனதையாக இருக்க வேண்டும். அல்லது அவள் மனநிலை சரியில்லாதவளாக இருக்க வேண்டும். எனவே அந்த பெண் முதலில் வந்து அப்படி கதறிய போது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

என் மனம் எதனால் பாதிக்கப்பட்டது என்று சரியாக சொல்ல தெரியவில்லை.

Saturday, June 1, 2013

இன்னும் இரண்டு வருஷம் தான்..

இன்று பேருந்து ஏற காத்திருக்கும் போது, புதிதாக ஒரு இந்திய நண்பனை சந்தித்தேன். வந்திறங்கி மூன்று வாரம் ஆவதாக சொன்னான். என்ன இருந்தாலும் நம்ம ஊர் போல் வராது, என்றான். எப்படி இருந்தாலும், இன்னும் இரண்டு வருடம் மட்டுமே இங்கு இருப்பேன், என்று கண்டிஷனாக கம்பெனியில் சொல்லிவிட்டதாக சொன்னான். 

எனக்கு 12 வருடத்திற்க்கு முன்பான, என்னையே பார்த்தது போல் இருந்தது.

Saturday, May 4, 2013

common man's grudge


விஜய் டி.வியின் நீயா? நானா? பற்றி பதிவு போடும் முகநூல் அன்பர்கள், அனைவரும் பதிவை ஆரம்பிக்கும் விதம் ஒன்று போலவே இருக்கிறது. யதேச்சையாக நேற்று நீயா? நானா? பார்த்த போது, சேனல் மாற்றும் போது நீயா? நானா? பார்க்க நேரிட்டு, என் மனைவி நீயா? நானா? வை பார்த்த உடனே, அனைத்து விடுங்கள் என்றார், ஆனாலும் நான் பார்த்த போது, இப்படிதான் பெரும்பாலான பதிவுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலோனோர்

தொடர்ந்து பார்க்கிறார்கள் என்று பதிவுகளை பார்க்கும் போது தெரிகிறது.

இந்த மனநிலை விசித்திரமாக இருக்கிறது. நீயா? நானா? பார்ப்பதில் என்ன தவறு? ஏன் இதை இவர்கள் மீண்டும் மீண்டும், தற்செயல் போல் கட்டியமைக்க வேண்டும் என்று யோசித்தால் ஒன்று புலப்படுகிறது. நீயா? நானா?. சாதாரண மக்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி. ஃபேஸ்புக்கில் பதிவு போடும் நம் நண்பர்கள், தாங்கள் காமன் மேன் இல்லை என்று நிருபிக்க, இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்று நிறுவ வேண்டும். அதற்குதான் இத்தனை பாடு..

சில நேரங்களில் நீயா?நானா? உப்பு சப்பில்லாத தலைப்புகளில் நேர விரயம் செய்த போதிலும், பல நல்ல தலைப்புகளில் நிகழ்ச்சி நடத்தி சாதாரண மக்கள் மத்தியில் ஒரு விவாத புள்ளியை தொடங்கி வைத்த வகையில், நீயா? நானா? நிச்சயம் பாரட்டபட வேண்டிய நிகழ்ச்சியே..கண்ணா லட்டு திங்க ஆசையா பார்க்க நாம் வெட்கபடுவதில்லை.நமது சாதியை பற்றி பீற்றிக் கொள்ள வெட்கபடுவதில்லை. ஒரு மோசமான அரசியல்வாதியை, தலைவனாக கொள்வதில் வெட்கமில்லை.ஆனால் நீயா ? நானா? பார்த்தால் வெட்கபடுகிறோம்.

இதைதான் common man's grudge என்று சொல்வார்களோ?

Friday, March 1, 2013

நூற்றாண்டு காலத் தனிமை - 1

ஓட்டுனர் உரிமம் விஷயமாக, கனகவா நகர போக்குவரத்து அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.  அப்போதுதான் நூற்றாண்டு காலத் தனிமை நூலை படிக்க தொடங்கியிருந்தேன். என் அருகில் வந்து அமர்ந்த நபர், நீங்கள் எங்கள் நாட்டு எழுத்தாளர் எழுதிய நூலை வாசிக்கிறீர்கள். சந்தோசமாக இருக்கிறது என்றார். நானும் மகிழ்ச்சியுடன் பேச துவங்கினேன். கொலம்பியாவை சேர்ந்த அவர், வெகு நாட்களாக அமெரிக்காவில் வசிப்பவர். கொலம்பியா சென்று பல வருடங்கள் ஆகி விட்டது என்றார்.  பொதுவான விசாரிப்புகளுக்கு பின் சொன்னார். கொலம்பியா ஒரு விசித்திரமான நாடு. அங்கு எதுவும் நடக்கும். இந்த புத்தகம் உங்களுக்கு மிக சிறந்த அனுபவமாகவே இருக்கும் என்று சொல்லி விடைப்பெற்று சென்றார், ஃபெர்ணாண்டோ. உண்மையில் ஒரு நல்ல அனுபவமாகவே இருந்த்து இந்த நூல்.


1967ல் கொலம்பியாவின், கேப்ரியல் கார்ஸியா மார்க்கஸால், ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டு, மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்ற நாவல். உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளை தொடர்ந்து கண்ட இந்த நாவல், மேஜிக்கல் ரியலசிம் என்று வகைபடுத்தப்பட்டது. உலகின் எந்த மொழியிலும் நிகழ்ந்த இலக்கிய முயற்சிகளில், மிக முக்கிய இலக்கிய ஆக்கமாக இந்த படைப்பு முன்னிறுத்தபடுகிறது. 1987ல் மார்கஸுக்கு, இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நாவலுக்குள் நுழையும் முன்பு, இந்த படைப்பின் பின்புலமாக திகழும் கொலம்பியாவின் வரலாற்றை கொஞ்சம் புரிந்துக் கொள்வது நாவலை சரியாக உள்வாங்க ஏதுவாக இருக்கும். கொலம்பியா, 1810ல் லேயே விடுதலை அடைந்து விட்டது. ஆனால், கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சிகளின் இடையில் நிகழும் பகையுணர்வால், பல உள்நாட்டு கலவரங்கள், தொடர்ந்து கொலம்பியாவை வேட்டையாட்டின. இரு கட்சிகளுக்கும், பெரிய வேற்றுமைகள் ஏதுமில்லை. உழல், வன்முறை, அதிகார வெறி ஆகியவை இரண்டு குழுவிலுமே தலைவிரித்தாடின. யார் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற போரில் தொடர்ந்து உயிர்கள் பலியாகின. இரண்டு குழுக்களிலுமே கொரில்லா படை இருந்தது. அவை தொடர்ந்து உள்நாட்டு போரை நிகழ்த்தின. 1899ம் ஆண்டுக்கும், 1902 க்கும் இடையில் ஆயிரம் நாட்கள் நிகழ்ந்த உள்நாட்டு போரில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், 1928ம் ஆண்டு, அமெரிக்காவின் யூனெட்டட் ஃபுருட்ஸ் என்ற கம்பெனி, கொலம்பியாவில் தொழில் தொடங்கி பணத்தை அள்ளியது. தொழிலாளர்களை சுரண்டி, பணத்தை கொள்ளையடித்த அந்த கம்பெனியில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, கன்சர்வேடிவ் அரசாங்கம், அமெரிக்காவின் கம்பெனிக்கு ஆதரவாக களத்தில் குதித்து, பேச்சு வார்த்தை என்று தொழிலாளர்களை ஒரு இடத்திற்க்கு வர சொல்லி, நூற்றுக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளியது. பின்பு எந்த ஆதாரமும் இல்லாது, அந்த சம்பவத்தை சரித்திரத்தில் இருந்து துடைத்தெறிந்தது.
1946 இல் இருந்து, 1953 வரையிலான உள்நாட்டு போரில், ஒரு லட்சத்து ஐம்பதானயிரம் பேர் கொல்லப்பட்டனர். இப்படி தொடர்ந்து உயிர்கள் பலியிடப்பட்ட கொலம்பியா மண்ணில், ஆர்கடக்கா என்ற கிராமத்தில், 1927இல் தனது பெற்றோருக்கு 16வது மகனாக, கேப்ரியல் கார்ஸியா மார்கஸ் பிறந்தார். தனது தாத்தா, பாட்டியிடமே வளர்ந்தார். மார்கஸின் பாட்டிக்கு மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட மந்திர மாயங்களில் நம்பிக்கை இருந்தது. மார்கஸின் தாத்தாவோ, உள்நாட்டு போர்களில் பங்கு பெற்றவர். இந்த பின்புலமே, நாவலில் பெரிதும் பிரதிபலிக்கிறது. மார்க்கஸ் முதலில் ஸ்பெயினிலும், பின்பு அமெரிக்காவிலும், அதன் பின் மெக்ஸிக்கோவிலும் வசித்தார்.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொடங்கும் இந்த நாவல், ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறை வாழ்க்கையை, சொல்லி முடிகிறது. மக்கோண்டோ என்ற கிராமம் லத்தீன் அமெரிக்காவின் ஒரு மூலையில் உருவாகி, அழியும் வரையிலான சித்திரம் அளிக்கபடுகிறது. ஏழு தலைமுறை மனிதர்களுக்கும் திரும்ப, திரும்ப ஒரே பெயர்கள் சூட்டப்படுகின்றன. முறை தவறிய உறவுகள், காமம், தனிமை இவைகளால் அந்த மனிதர்கள் வேட்டையாடபடும் காட்சிகள் மீண்டும், மீண்டும் வருகிறது. ஏறக்குறைய ஒரே மாதிரியான அபத்தங்கள், சம்பவங்கள் தலைமுறைகள் தாண்டியும் தொடர்ந்து நிகழ்வதை, ஹோஸே ஆர்கடியோ புவெந்தியா உருவாக்கிய மக்கோண்டோ கிராமம் மெளன சாட்சியாய் பார்த்து நிற்கிறது.  


மக்கோண்டோ என்ற இந்த கிராமம் உண்மையில் மார்கஸின் சொந்த ஊரான ஆர்கடக்காவை பிரதிபலிக்கிறது. ஆனால், புவியியல் சித்தரிப்புகள், இதற்கு மாறாக புனையப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் ஹோஸே ஆர்க்கடியோ புவெந்தியா, தனக்கு சகோதரி முறையில் வரும் உருசுலாவை மணந்து கொள்கிறான். இந்த உரூசுலாதான் தனக்கு பின் வரும் ஐந்து தலைமுறைகளையும் உயிருடன இருந்து பார்க்கிறாள். 140 வயதுக்கு மேல் நாவலில் உயிருடன் இருக்கிறாள். நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களையும், இணைக்கும் ஒரு புள்ளியாக திகழ்கிறாள்.  கதையில் வரும் அனைவரையும், நிழல் போல் தொடரும் தனிமையை, இவள் தனது மன வலிமையால் தன் பக்கம் அண்ட விடாமல் விரட்டுகிறாள்.
சகோதரனை மணந்து கொண்டால், பன்றி வாலுடன் குழந்தை பிறக்கும் என்கிற தமது குடும்பத்தின் முற்காலத்திய நம்பிக்கையால், உரூசுலா உடலுறவை தவிர்க்கிறாள். இரும்பு பட்டையிலான, உள்ளாடையை அணிந்து பூட்டி கொள்கிறாள். திருமணத்திற்க்கு பிறகும் வெகுநாட்களாக குழந்தை இல்லாததால், ஊராரின் கேலிக்கு ஆளாகிறான் ஹோஸே ஆர்க்கடியோ. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், தன்னை கேலி செய்யும் புருடன்ஸியோவை ஈட்டி எறிந்து கொல்கிறான். நேரடியாக வீட்டுக்கு வரும் ஹோஸே, குழந்தை எப்படியிருப்பினும் கவலையில்லை என்று கூறி தமது மனைவியுடன் உறவில் ஈடுபடுகிறான்.  தான் செய்த கொலையால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஹோஸே தனது மனைவி மற்றும் உறவினர்களுடன், தமது இடத்தை விட்டு பெயர்ந்து, புதிய இடம் தேடி நடக்கிறார்கள். இரவு பகலாக நடக்கும் அவர்கள், பல நாட்களுக்கு பிறகு ஒரு நதிக்கரையில் தங்குகிறார்கள். அங்கு கண்ணாடியிலான ஒரு நகரத்தை கற்பனை செய்துக் கொள்ளும் ஹோஸே, அந்த இடத்திலேயே ஒரு கிராமத்தை உருவாக்க முடிவு செய்கிறான். இப்படியாக எந்த புவியியல் அறிவுமில்லாத ஹோஸேவால் ஒரு கிராமம் உருவாக்கபடுகிறது.
அந்த கிராமத்தை நோக்கி, நாடோடிகள் வருகிறார்கள். ஒவ்வொரு வசந்த காலத்திலும் அந்த கிராமத்தை நோக்கி வரும் அவர்கள், ஒவ்வொரு முறையும் அந்த கிராமம் அதுவரை கண்டிராத, ஏதேனும் ஒரு அதிசயத்தை எடுத்து வருகிறார்கள். அந்த பொருட்கள் யாவும் ஹோஸோவின் கற்பனையையும், சாகஸ மன எழுச்சியையும் தூண்டுகிறது. முதன்முதலாக ஐஸ் அந்த கிராமத்திற்க்கு வருகிறது. இதுதான் இந்த நூற்றாண்டின் வியக்கதக்க கண்டுபிடிப்பு என்று ஹோஸே கொண்டாடுகிறான். பிறகு காந்தம் கொண்டு வருகிறார்கள். அந்த ஜிப்ஸிகளின் தலைவன் போல் இருக்கும் மெல்கீயூடிஸ், வீடு வீடாக சென்று அந்த காந்தத்தை வைத்து, இரும்பு பொருட்களை இழுத்து காண்பிக்கிறான். கதவின் தாழ்ப்பாள், அதிலுள்ள ஆணி போன்றவை உருவிக் கொண்டு, காந்தம் நோக்கி பறந்து வருவதை கண்டு, மக்கோண்டோ கிராமமே அதிசயித்து நிற்கிறது. பொருட்கள், ஒவ்வொன்றுக்கும் உயிர் இருக்கிறது. அதன், ஆன்மாவை தட்டி எழுப்பிவிட்டால் போதும் என்று தனது கண்டுப்பிடிப்பை கூறுகிறான், மெல்கீயூடிஸ்.  அந்த காந்தத்தை கொண்டு, தங்கத்தை கண்டுபிடிக்கலாம் என்று ஹோஸே நினைக்கிறான். அதை கொண்டு வரும் மெல்கீயூடிஸிடம் இருந்து தன்னிடமிருக்கும் ஆடுகளை கொடுத்து அதை வாங்கி கொள்கிறான். தங்கத்தை அது கண்டுபிடிக்காது என்ற உண்மையை சொல்லும் மெல்கீயூடிஸின் அறிவுரையால், அவனது மன எழுச்சியை, எந்த விதத்திலும் தடுக்க இயலவில்லை. ஜிப்ஸிகள் பிறகு ரஸவாதம் (இரும்பை தங்கமாக்கும் வித்தை), டெலஸ்கோப் என்று பல பொருட்களை கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும்,ஜோஸ் தனது கற்பனை மூலம், அந்த பொருட்களின் பயன்களை விரித்துக் கொள்கிறான். மெதுவாக மெல்கீயூடிஸ்க்கும், ஹோஸேவிற்க்கும் இடையில் ஒரு நிரந்தர நட்பு உருவாகிறது. பயணத்தில் மெல்கீயூடிஸ் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. பிறகு சில நாட்கள் கழித்து மெல்கீயூடிஸ் திரும்ப வந்து விடுகிறான். சாவின் தனிமை கொடுமையானதாக இருந்ததால், திரும்ப வந்து விட்டதாக சொல்கிறான். ஆம், நாவலில் சாவில் இருந்து மனிதர்கள் திரும்ப வருகிறார்கள். செத்தவர்கள் தொடர்ந்து காட்சியளிக்கிறார்கள். மெல்கீயூடிஸ், ஹோஸே புவெந்தியாவின் வீட்டிலேயே ஒரு மூலையில் நூலகம் அமைத்து தங்குகிறான். சாவின் தனிமை பொறுக்க முடியாமல் வந்ததாக சொல்லும் மெல்கீயூடிஸ், அந்த நூலகத்தை விட்டு ஒரு போதும் வெளியே வருவதே இல்லை. சமஸ்கிருத மொழியில் ஒரு நூலை எழுதி தள்ளுகிறான். அந்த நூலை ஒரு நூற்றாண்டு கழித்தே மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறான்.

ஹோஸே தம்பதிக்கு அவுர்லியானோ, ஹோஸே ஆர்க்கடியோ(இரண்டாம் ஹோஸே) என இரு மகன்களும் அமெரெண்டா என்ற மகளும் பிறக்கிறார்கள். உரூசுலாவின் தூரத்து உறவினரின் மகளான ரெபேக்கா, தனது பெற்றோரின் எலும்புகளோடு, அந்த கிராமத்திற்க்கு வருகிறாள். புவெந்தியாவின் குடும்பத்தில், வளர்ப்பு மகளாக வளர்கிறாள்.   ரெபேக்கா, இரவுகளில் எழுந்து மண்ணை தோண்டி தின்கிறாள். அவள் வந்த சில நாட்களில், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தூக்கமின்மை நோய் பிடித்துக் கொள்கிறது. வாரகணக்கில் மக்கள் தூங்காமல் இருக்கிறார்கள். தூக்கமின்மையால், மறதி நோய் வந்து விடுகிறது. எந்த அளவுக்கு என்றால், எல்லா பொருட்களிலும், அந்த பொருளின் பெயர், மற்றும் எப்படி உபயோகிப்பது என்று எழுதி ஒட்டி விடுமளவுக்கு. இப்படிப்பட்ட விசித்திரங்கள் மெக்கோண்டோவில் சங்கிலித் தொடர் போல் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில், வாசிப்பு மனம் எப்படிப்பட்ட விசித்திரத்திற்க்கும் தயாராகிவிடுகிறது.

மெக்கோண்டா கிராமத்தை பற்றி அறிந்துக் கொள்ளும் கன்சர்வேடிவ் அரசாங்கம் தனது பிரதிநிதியாக ஒரு நீதிபதியை அனுப்புகிறது. அந்த மாஜிஸ்திரேட், கிராமத்தில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும், நீல நிறத்தில் வர்ணம் பூசப்பட வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். வெகுண்டு எழும் ஹோஸே அவரை அடித்து விரட்டுகிறான். இந்த கிராமம் எங்களுடையது. அரசாங்கம் இதில் தலையிட தேவையில்லை. எங்களுக்கு பிடித்த வர்ணத்தில்தான் வீடுகள் இருக்கும் என்கிறான். திரும்பவும் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் வரும் மாஜிஸ்திரேட்டிடம், ஹோஸே சமாதான உடன்படிக்கை செய்துக் கொள்கிறான்.மாஜிஸ்திரேட்டின் இரண்டாவது   மகளான ரெமேடியோஸை, ஹோஸேவின் மகன் அவுர்லியோனோ திருமணம் செய்துக் கொள்கிறான்.
அவுர்லியோனோ மற்றும் ஹோஸே (மகன்) சகோதரர்கள் இருவருக்குமே பிலர் டெர்னேரா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவுர்லியோனோவுக்கும், பிலர் டெர்னேராவுக்கும் மகனாக அவுர்லியோனோ ஹோஸே பிறக்கிறான். ஹோஸே ஆர்க்கடியோவுக்கும், டெர்னேராவுக்கும் இடையில் மகனாக ஆர்க்கடியோ பிறக்கிறான்.
இந்த நாவலை, வசிப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயம், ஒரே பெயர்கள் மறுபடி, மறுபடி பாத்திரங்களுக்கு சூட்டபடுவதுதான். ஆனால், 19ம் நூற்றாண்டில் இது உலகமெங்கும் இருந்த நடைமுறைதான். தாத்தாவின் பெயர், பேரனுக்கு சூட்டப்படுவது இன்றளவும் உள்ள விஷயம். ஆனால், இந்த நாவலை பொறுத்த வரை, இப்படி பெயர்கள் திரும்ப திரும்ப வருவதற்க்கு நடைமுறை யதார்த்தம் மட்டும் காரணமல்ல. பெயர்களுக்கு ஒரு அடிப்படை பண்பு இருக்கிறது. வாழ்வு சுழற்சியை, மாற்றமில்லாத தன்மையை, வரலாற்றின் பிரதியெடுப்பை ஒரே பெயர்கள்  மூலம் அடையாளபடுத்துகிறார் மார்க்கஸ். ஹோஸே ஆர்க்கடியோ என்று பெயரிடபடும் குழந்தைகள் தமது பெயருக்கு ஏற்ப, கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாகவும், புதிதாக எதையேனும் கண்டிபிடிக்கும் ஆவலில் தவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவுர்லியோனோ என்று பெயரிடபடும் குழந்தைகள் ஒரே சமயத்தில் நடைமுறைவாதியாகவும், மக்கள் புரட்சிகளில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

இரண்டாம் தலைமுறை அவுர்லியோனோ லிபரலாக மாறி, கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை எதிர்த்து 32 முறை கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி தோல்வியை தழுவுகிறான். நான்காம் தலைமுறையில், பிறக்கும் இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரி இருக்கிறார்கள். அடிக்கடி பெயரை மாற்றி குடும்பத்தாரை குழப்புகிறார்கள்.  இடையில் இருவருடைய பெயரும் மாறிவிட்டதாக, உரூசுலா சந்தேகம் கொள்கிறாள். அந்த சந்தேகத்தை உறுதி செய்வது போல், ஹோஸே ஆர்கடியோ செகுண்டா, தொழிலாளர் புரட்சியில் ஈடுபட்டு, சாவின் விளிம்பிற்க்கு செல்கிறான். அவுர்லியோனோ செகுண்டா, பெட்ரா கோட்டெஸுடன் காமத்தில் திளைக்கிறான். இரட்டையர் இருவரும் ஒரே நாளில் இறக்க, துக்கத்திற்க்கு வரும் ஊர்காரார்கள், மிதமிஞ்சிய குடியினால் இருவரது உடலையும் மாற்றி புதைக்கிறார்கள்.
ஹோஸே மற்றும் அவுர்லியோனோக்களுக்கு இடையில் மாறாமல் இருக்கும் விஷயம் மிதமிஞ்சிய காமமும், தனிமையும்தான். மனிதர்கள் தனிமையாக இருக்கிறார்கள். தனிமையாக இறக்கிறார்கள். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் தனிமை (Solitude) என்ற வார்த்தை வந்து விடுகிறது. சமஸ்கிருத மொழியில் புரியாமல் எதையோ எழுதி தள்ளும் மெல்கீயூடிஸ் ஒரு நாள் மரிக்கிறார். அந்த கிராமத்தில் முதன்முதலாக இறக்கும் நபர் மெல்கீயூடிஸ். அதன் மூலம், இறப்பின் வரைபடத்தில் மெக்கோண்டோ வந்து விடுகிறது. அதற்கு பின்பே அந்த கிராமத்தில் தொடர்ந்து இறப்புகள் நிகழ்கின்றன. ஹோஸே ஆர்கடியோ (முதலாம் ஹோஸே) தனது தொழிற்கூட்த்தில் தொடர்ந்து கால இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறான். பிறகு அவனுக்கு எல்லா நாட்களும் திங்கள் கிழமையாக தெரிகிறது. நேற்றைக்கும், இன்றுக்கும் எந்த மாற்றமும் இல்லை. அதே நிலவு.. அதே காற்று. எனவே இன்றும் திங்கள்கிழமை தான் என்று அறிவிக்கிறான். மனநிலை பிறழ்ந்து, தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அடியில் தங்க வைக்கபடுகிறான்.

ஹோஸே ஆர்க்கடியோ (இரண்டாம்), சாகஸங்களை தேடி, அந்த கிராமத்திற்க்கு வரும் நாடோடிகளுடன் சென்று விடுகிறான். தன்னை லிபரலாக உணரும் அவுர்லியோனோ புவெந்தியா, கன்சர்வேட்டிவ் அரசாங்காத்தின் கொடுமைகளை கண்டு கொதித்து,  உள்நாட்டு போரில் ஈடுபடுகிறான். பிள்ளை பேறின் போது, அவனது மனைவி ரெமேடியாஸ் இறந்து போகிறாள். அந்த பிரிவை தாங்கி கொள்ள இயலாமல், அவுர்லியோனோ, கன்சர்வேடிவ்களுக்கு எதிரான போரில் தலைமை தாங்கி அந்த ஊரை விட்டு செல்கிறான். செல்வதற்க்கு முன், தனது சகோதரனின் மகனான ஆர்க்கடியோவை அந்த கிராமத்திற்க்கு தலைமை தாங்க சொல்லி செல்கிறான். ஆர்க்கடியோவோ, சர்வாதிகாரியாகி அந்த கிராமத்தை வதைக்கிறான். சாண்டோ ஸோஃபியா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். பிறகு கன்சர்வேடிவ் ராணுவத்தால் கொல்லப்படுகிறான்.

கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி செல்லும் கர்னல் அவுர்லியோனோ, கொலம்பியா முழுவதும் சுற்றி திரிகிறான். பல்வேறு போர்களுக்கு தலைமை தாங்குகிறான். போகும் இடமெல்லாம் பெண்கள் அவனை சூழ்கிறார்கள். இப்படியாக 17 மகன்களுக்கு அப்பாவாகிறான். 17 மகன்களுக்கும் அவுர்லியோனோ என்று பெயரிடபடுகிறது. போரில் கைப்பற்றிய இடங்களில், லிபரல் தலைமையை நிறுவுகிறான். ஆனால் அதிகாரத்திற்க்கு வரும் லிபரல்கள் அரசாங்காத்திலும் உழல், வன்முறை கொடிக்கட்டி பறப்பதை கண்டு மனம் நொந்து போகிறான் அவுர்லியோனோ.  தொடர் போரும், அதிகாரமும் அவுர்லியோனோவை முற்றிலும் அன்பில்லாதவனாக மாற்றுகிறது. தனது சொந்த கிராமத்திற்க்கு திரும்பி வந்து கன்சர்வேட்டிவ்களை தோற்கடித்து, தலைமை கர்னல் மன்கோடாவை கைது செய்கிறான். மன்கோடா கன்சர்வேடிவ் என்ற போதிலும் நல்ல நிர்வாகத்தை கொடுத்தவர். அவுர்லியோனோவின் தாயார் உரூசுலாவிற்க்கு நல்ல நண்பனாக இருந்தவர். உரூசுலா எத்தனையோ முறை கெஞ்சியும் கேட்காமல் மன்கோடாவை கொலை செய்ய உத்தரவிடுகிறான். உன்னை கொல்வது நான் அல்ல.. புரட்சி என்கிறான்.

அவுர்லியோனோவின் போக்கு பிடிக்காத அவனது உற்ற நண்பன் கர்னல் ஹெரினெல்டோ மார்க்கஸ், நீ தவறான பாதையில் போகிறாய் என்று எச்சரிக்கிறான். அவனையும் கொல்ல துணியும் அவுர்லியோனோ, ஒரு கட்டத்தில் தெளிகிறான். போரின் வெறுமையையும், பொருளற்ற தன்மையையும் உணரும் அவுர்லியோனோ, கன்சர்வேடிவ்களுடன் சமாதானமாக போய்விடலாம் என்கிறான். அதை ஏற்காத லிபரல்கள் அவனை அவமதிக்கிறார்கள். ஒரு தற்கொலை முயற்சியில் உயிர் பிழைக்கும் அவுர்லியோனோ, போரில் இருந்து விலகி, தனது வீட்டில் தனது தந்தையின் தொழிற்கூடத்தில் தனிமையில் ஒதுங்குகிறான்.  மிக நேர்த்தியாக தங்க மீன்களை செய்யும் அவுர்லியோனோ, அதை கொண்டு விற்று, தங்க காசு வாங்கி, மறுபடியும் அதை உருக்கி தங்க மீன் செய்கிறான். ஏறக்குறைய போரின் மூலம் அவன் சாதிக்க நினைத்த காரியமும், இதை போல் பொருளற்ற ஒன்றுதானே..அரசாங்கம் அவுர்லியோனோவை கெளரவிக்க நினைக்கிறது. அவன், பிரதிநிதிகளை விரட்டியடிக்கிறான். நிறுவனமயமாக்கபடும் அவுர்லியோனோவின் பெயர் அந்த தெருவிற்க்கு சூட்டப்படுகிறது. அவனோ, தனிமையில் தங்க மீன் செய்துக் கொண்டு இருக்கிறான்.